|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » தவும்யர் தாத்ரேயிகை |
|
பக்தி கதைகள்
|
|
திரவுபதி தைரியத்தோடு ‘‘என் கணவர்கள் வரும் சப்தம் கேட்கிறது. உன்னுடைய கெட்ட காலமும் தொடங்கி விட்டது. நீ ஒரு நாட்டுக்கே அரசனாக இருப்பதால் உன் மீது பரிதாபப்பட்டு சொல்கிறேன். இப்போதே ஓடி விட்டால் பிழைக்கலாம். இல்லாவிட்டால் உன் நிலையை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை’’ என்றாள். ஆனால் அப்போது அங்கு வந்தவர் பாண்டவர்களின் வனகுருவான தவுமியரும், அவரது பணிப்பெண்ணான தாத்ரேயிகையும் தான். தவுமியர் ஜெயத்ரதனைப் பார்த்து திகைத்தவராக, ‘‘நீ சிந்து அரசன் ஜெயத்ரதன் அல்லவா... பரிவாரங்கள் ஏதுமின்றி தனியாக இங்கு வந்திருப்பது எதற்காக?’’ என்றும் கேட்டார். ‘‘ஓ... ஒரு வனத்து சந்நியாசிக்கும் நான் யார் எனத் தெரிந்துள்ளதே... பார்த்தாயா திரவுபதி’’ என ஜெயத்ரதனும் அதையே கேள்வியாக்கினான். ‘‘ஜெயத்ரதா கேள்விக்கு பதில் கூறாமல் இதென்ன பேச்சு’’ என தவுமியரும் குரலை உயர்த்தி அதில் கோபத்தைக் காட்டினார். ‘‘ஏய் சன்யாசி... முதலில் பெயர் சொல்லி என்னை அழைப்பதை நிறுத்து. நான் அரசன். மரியாதையுடன் பேசு’’ என ஜெயத்ரதன் கர்ஜித்தான். ‘‘ உன் பேச்சில் ஆணவம் தெரிகிறது. வீணாக என் சாபத்திற்கு ஆளாகாதே. இங்கு எதற்கு வந்தாய் எனச் சொல்’’ ‘‘பூவைத் தேடி வண்டு எதற்கு வரும்? திரவுபதியின் அழகில் மயங்கி அவளை என் மனைவியாக்கிக் கொள்ள வந்திருக்கிறேன் போதுமா’’ ‘‘இது என்ன கொடுமை? பாண்டவர் பத்தினி அவள். மாற்றான் மனைவியை மனதால் நினைப்பதும் பாவம் என்பது தெரியாதா’’ ‘‘என்ன பெரிய பத்தினி. ஐந்து பேருக்கு மனைவியாக வாழ இவளால் முடியும் என்றால் ஆறாவதாக என்னோடும் வாழலாமே’’ ‘‘திரவுபதி யார் என்ற உண்மை தெரியாமல் உளறாதே. பாண்டவர்கள் உருவத்தால் ஐவராக இருப்பினும் அவர்கள் பஞ்சமுக சதாசிவம் போல விசேஷமானவர்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் காமத்தில் பிறந்தவர்கள் அல்ல. குந்தியின் மானசத்தால் மந்திரத்தால் பிறந்தவர்கள். திரவுபதியும் வேள்வியில் பூத்த மந்திர புஷ்பம். மன்மதனின் கணைபட்டு மதனத்தால் சுக்ல சுரோணிதம் கலக்கப் பெற்று அந்த கலப்பில் பிறந்த உன்னைப் போன்றவர்களால் அவர்களின் புனிதத்தை உணர முடியாது’’ ‘‘அடேயப்பா... எதற்கு இத்தனை பீடிகை? இத்தனை சிறப்புடையவர்கள் எதற்காக இப்படி காட்டில் கிடக்க வேண்டும்? எதற்காக சூதாடி நாட்டை இழக்க வேண்டும்?’’ ‘‘அந்த கேள்வியை கேட்க நீ யார்... அரசனாக இருந்தும் உனக்கென ஒரு மனைவியிருந்தும் பிறன் மனையை விரும்பும் உனக்கு என்ன தகுதி இருக்கிறது?’’ ‘‘அடேய் சன்யாசி. ஒரு அரசன் என்பவன் எவ்வளவு பெண்களையும் மணக்கலாம் என்பது தெரியாதா?’’ ‘‘விருப்பமில்லாத பெண்ணை அந்த பிரம்மனே விரும்பினாலும் அது மகாபாவம் என்பது தெரியாதா’’ ‘‘எந்த பாவமும் என்னை எதுவும் செய்யாது. எனக்கென்ன குறை. பாண்டவர்களால் இவள் என்ன சுகத்தை கண்டாள். என்னோடு வந்தால் சிந்து நாட்டுக்கே ராணியாக வாழலாம்’’ ஜெயத்ரதனின் பதிலுக்கு பதில் என்று பேசிட திரவுபதி காதுகளைப் பொத்திக் கொண்டு, ‘போதும் நிறுத்துங்கள்’ என்றாள். அவளின் ஓங்கிய குரல் கேட்டு அருகிலுள்ள பறவைகள் எல்லாம் எகிறிப் பறந்தன. ஆனால் ஜெயத்ரதன் துளியும் அசரவில்லை. ‘‘திரவுபதி... இப்படி கத்துவதால் அடங்கி விட மாட்டேன். உனக்கு ஒரு நல்ல வாழ்வு காத்திருக்கிறது. புறப்படு என்னோடு’’ ‘‘அடச்சீ... கேடு கெட்டவனே! இவ்வளவு சொல்லியும் உன் புத்திக்கு உறைக்கவில்லை. உன் நல்ல நேரம் என் கணவர்கள் இன்னும் வரவில்லை. அவர்கள் வரும் முன்பாக ஓடினால் பிழைக்கலாம்’’ ‘‘பேசுவதால் பயனில்லை. உன்னைத் துாக்கிச் செல்வது தான் ஒரே வழி’’ என ஜெயத்ரதன் அவளின் முந்தானையை இழுத்தான். அதைக் கண்ட தவுமியரின் பணிப்பெண் தாத்ரேயிகை ஓடி வந்து ஜெயத்ரதனின் கையை கடிக்க வந்தாள். கோபமுடன் கன்னத்தில் அறைந்ததோடு பணிப்பெண்ணின் தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளினான். அடுத்து தவுமியரைத் தாக்கத் தயாரானான். ‘‘வேண்டாம் ஜெயத்ரதா... பிராம்மண சன்யாசியின் சாபத்திற்கு ஆளாகாதே. காமம் மிகுந்த உன் கண்களும், ஆணவம் மிகுந்த உன் புத்தியும் சுக்கு நுாறாகச் சிதறி விடும். ஓடிவிடு’’ ‘‘ஏ சன்யாசியே... இவளுக்காக என் கோபத்திற்கு ஆளாகாதே. இவள் ஒரு பணயப்பொருள். என் மைத்துனனால் சூதாட்டத்தில் அடிமையாகப் பெறப்பட்டவள். பணயப் பொருளை அடிமையை யார் வேண்டுமானாலும் அடைய விரும்பலாம்’’ ‘‘அதெல்லாம் முடிந்து இப்போது வனவாசம் என்னும் தீர்வுப்படி இங்கிருக்கும் இவளை சீண்டாதே. பழிக்கு ஆளாகாதே’’ ‘‘நீ என்வழியில் குறுக்கே வராதே. இவளின்றி நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்’’ ‘‘அப்படியானால் நீ நல்ல ஆண்மகன் தானென்றால் இங்கேயே இரு. நான் இப்போதே போய் பாண்டவர்களை அவர்கள் எங்கிருந்தாலும் சரி அழைத்து வருகிறேன். அவர்களிடம் உன் வீரத்தைக் காட்டு’’ என்ற தவுமியர் வேகமாக அங்கிருந்து காட்டுக்குள் பாண்டவரைத் தேடிச் சென்றார். கீழே விழுந்து கிடந்த தாத்ரேயிகை எழுந்து திரவுபதியின் முன்னால் ஒரு தடுப்புச் சுவர் போல் நின்று கொண்டாள். ஜெயத்ரதன் அவளை இம்முறை எட்டி உதைத்து விட்டு திரவுபதியை இழுத்துக் கொண்டு வெளியில் நிற்கும் தன்னுடைய ரதம் நோக்கி நடந்தான். திரவுபதி அவனைத் தட்டி விட்டவளாக, ‘‘என்னைத் தீண்டாதே. நானே வருகிறேன். ஒன்று மட்டும் உறுதி. நீ இந்த வன எல்லையைக் கடந்து செல்ல முடியவே முடியாது. என் கணவர்கள் இப்போது எங்கிருந்தாலும் சரி அவர்கள் வருவார்கள். உன்னை கண்டதுண்டம் ஆக்குவார்கள். என்னை இகழ்வாக பேசிய நாக்கு, காமத்தோடு பார்க்கும் கண்கள், நல்லதை கேட்காத காதுகள், மொத்தத்தில் ஐம்புலன்களை கொண்ட உன் தலை அணுத்துகளாக சிதறும். நான் பத்தினி என்பதும், அக்னி புத்திரி என்பதும் உண்மையானால் இது இன்றில்லை என்றாவது ஒருநாள் நடந்தே தீரும்’’ என்றபடி அவனோடு நடந்தாள். ‘‘புலம்பாதே திரவுபதி. அடிமைகளுக்கெல்லாம் அருள் சக்தி கிடையாது. நீ சக்தி படைத்தவள் என்றால் உன் கணவர்கள் இப்படியா காட்டுவாசிகளாவார்கள்? அதை உணர்ந்து கொண்டு நான் அளிக்கப் போகும் வாழ்வை ஏற்று அதை வசந்தமாக்கிக் கொள்’’ என அவளை ரதத்தில் ஏற்றியவள் தானும் ஏறிக் கொண்டு புறப்பட்டான். விழுந்து கிடந்த தாத்ரேயி எழுந்து ஓடி வந்தாள். ஆனால் ரதம் வெகுதுாரம் சென்று விட்டது. தாத்ரேயி அழத் தொடங்கினாள். தவுமியர் பாண்டவர்களுடன் வேகமாக வந்தார். ‘‘சுவாமி... அந்த கிராதகன் தேவியாரை ரதத்தில் ஏற்றிச் சென்று விட்டான். என்னால் தடுக்க முடியவில்லை’’ என்று அழுத தாத்ரேயியை ஆறுதல் படுத்த முயன்றார் தவுமியர். பாண்டவர்கள் ஐவரும் வில்லை எடுத்துக் கொண்டு ஜெயத்ரதனின் ரதத்தை தடுத்து வனத்தின் எல்லைக்குள் பிடிக்க முயன்றனர். அப்போது தவுமியர், ‘‘மிக மோசமான தலையெழுத்தைக் கொண்டவன் இந்த ஜெயத்ரதன்’’ என்றார்.
|
|
|
|
|