|
குகனின் வழிகாட்டுதலால் காட்டில் ராமன் முதன் முதலில் சந்தித்த முனிவரின் பெயர் பரத்வாஜர். திக்கு தெரியாமல் அலைந்த ராமனுக்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர். பாண்டவர்கள், கவுரவர்களுக்கு ஆசானாக விளங்கிய துரோணாச்சாரியார் இவருடைய மகன்தான். காட்டுக்கு வர நேர்ந்ததை முனிவரிடம் விவரித்தான் ராமன். அதைக் கேட்டு வருந்திய முனிவர், ‘உன்னைப் பிரிய தசரதரனுக்கு எப்படி மனம் வந்தது? அவனது உயிரே நீ தானே?’ என ஆதங்கப்பட்டார். தன்னை விட்டு பிரிந்ததால் தந்தையார் பூமியை விட்டே பிரிந்து விட்டார் என ராமன் சொன்னதும் அந்த இடமே அமைதியானது. ‘பதினான்கு ஆண்டு வனவாசமா? கவலைப்படாதே ராமா. இங்கேயே தங்கி விடு. காய்கனிகள், பூக்கள், தங்குமிடம் என எல்லா வசதியும் இங்கிருக்கிறது. 14 ஆண்டுகள் நிம்மதியாக கழித்து விட்டு அயோத்தி செல்லலாம்’ எனப் பரிவுடன் கூறினார். ஆனால் ராமனோ, ‘தவசீலரே! நாங்கள் இங்கு தங்க இயலாது. ஏனென்றால் நாங்கள் புறப்படும் போதே அயோத்தி மக்கள் எங்களைப் பிரிய மனமில்லாமல் பின் தொடர்ந்து வந்தார்கள். நடந்து வந்த களைப்பில் அவர்கள் ஆழ்ந்து உறங்கிய சமயத்தில் நாங்கள் மூவரும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு விட்டோம். எங்களை காட்டிற்கு தேரில் கொண்டு சேர்த்த சுமந்திரனிடம், தேரை அயோத்தி நோக்கித் திருப்பி செலுத்துமாறும் கேட்டுக் கொண்டோம். காலையில் எழுந்ததும் தேரின் தடத்தைக் கண்டு நாங்கள் அயோத்திக்கே போய்விட்டதாகக் கருதி நாடு திரும்புவார்கள் என நம்பியே தங்களின் இருப்பிடம் நோக்கி வந்தோம்’ என்றான். ‘அயோத்திக்குப் போன மக்கள் மறுபடி உங்களைத் தேடி வரவா போகிறார்கள்?’ எனக் கேட்டார் முனிவர். ‘போக்குக் காட்டி ஏமாற்றியிருப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அயோத்திக்குத் தேர் மட்டும்தான் திரும்பியிருக்கிறது. நாங்கள் இங்கேயே தங்கி விட்டால் அயோத்திக்கு அருகிலேயே இருக்கும் இப்பகுதியை விரைவில் கண்டு பிடித்து, அத்தனை பேரும் இங்கே வந்து விடுவார்கள். அயோத்தி திரும்பும்படி எங்களை வற்புறுத்துவார்கள். மறுத்தால், நாங்களும் இங்கேயே தங்குகிறோம் என அடம்பிடிப்பார்கள். அத்தனை பேரையும் பதினான்கு ஆண்டுகளுக்குப் பாதுகாத்து, உணவிட்டுப் பராமரிக்கத் தங்களால் இயலுமா?’ எனக் கேட்டான் ராமன்.
‘உண்மைதான், அப்படி நடந்தால் சிருங்கிபேரம் என்னும் இந்தப் பகுதியே இன்னொரு அயோத்தியாக மாறும்’ என்றார் பரத்வாஜர்.
‘எல்லாவற்றையும் விட என் தந்தையாரின் ஆணையை நிறைவேற்ற வேண்டும்’ என ராமன் உறுதியாகச் சொன்னான். ‘மக்கள் என் மீது கொண்டுள்ள அன்பால் நான் பலவீனனாகி விடக் கூடாது. எங்களுக்கு மிகத் தொலைவில் இருக்கும் புகலிடத்தைக் காட்ட வேண்டும்’ எனக் கேட்டான் ராமன். அவனது நேர்மையைக் கண்டு வியந்தார் பரத்வாஜர். வெகு தொலைவிலுள்ள சித்திரகூடம் பகுதிக்குச் சென்று தங்குமாறு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த சிருங்கிபேரம் ஆசிரமத்துக்கு பரதன் விரைவில் வருவான் என பரத்வாஜர் எதிர்பார்க்கவில்லை. காட்டுக்கு வந்துவிட்ட தன் அண்ணன் ராமனை அயோத்திக்கு அழைத்துச் செல்ல வந்த அவன், குகனுடைய வழிகாட்டுதலால் பரத்வாஜரிடம் வந்தான். அவனுடைய மரவுரி ஆடையும், களையிழந்த முகமும், சோர்வுற்ற உடலும் கண்டு வியந்தார். உடன் வந்த சத்ருக்னன், கோசலை, படை வீரர்கள், குடிமக்கள் என அனைவரின் சோக முகமும் கண்டு திகைப்பில் ஆழ்ந்தார் பரத்வாஜர். தன்னை வணங்கிய பரதனிடம், ‘அயோத்தியின் மன்னனாக இருக்க வேண்டிய நீ இப்படி துறவுக் கோலத்தில் வந்திருப்பதன் நோக்கம் என்ன?’ எனக் கேட்டார். எடுத்த மா முடி சூடி நின்பால் இயைந்து அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ முடித்த வார் சடைக்கற்றையை மூசு துாசு உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான் – கம்ப ராமாயணம் அவ்வளவு தான்... முனிவர் என்று கூட பாராமல் கோபம் கொண்டான் பரதன். ‘மூத்தவன் இருக்க இளையவன் சிம்மாசனத்தில் அமர்வதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களின் தவக் கோலத்துக்கு சிறிதும் பொருந்தாத கேள்வியாக இருக்கிறதே’ எனக் கொதித்தான்.
பரத்வாஜர் வேதனையுடன். ‘மன்னித்து விடப்பா, உன் தந்தையார் வாக்கை நிறைவேற்ற ராமன் காட்டுக்கு வந்தான், அதே போல அவரது வாக்கை நிறைவேற்ற நீ அரியணை ஏற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் கேட்டேன். ராமனை விட உயர்ந்து விட்டாய். நீயும் உன் சுற்றங்களும் இளைப்பாறி விட்டு நாளை சித்திரகூடம் சென்று ராமனை சந்தியுங்கள்’ என்று கூறிய அவர், அவர்கள் அனைவரும் உண்ணவும், தங்கியிருக்கவும் ஏற்பாடு செய்தார். ஆனால் பரதன் வெறும் காய், கனிகளைப் புசித்து விட்டு, கட்டாந்தரையில் படுத்துக் கொண்டான். பரத்வாஜரின் மனதில் அவனைப் பற்றிய மதிப்பு மேலும் உயர்ந்தது. மறுநாள் பரதன் உள்ளிட்ட அனைவரையும் சித்திர கூடத்திற்கு மகிழ்ச்சியுடன் அனுப்பினார் பரத்வாஜர். பின்னாளில் ராவண வதம் முடிந்து சீதையை மீட்டபின் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் ராமன். தன் கானக வாழ்வில் வழிகாட்டிய பரத்வாஜருக்கு நன்றி சொல்வதற்காகத் தன் புஷ்பக விமானத்தை சிருங்கிபேரம் ஆசிரமத்தில் இறக்கினான். ராமனைக் கண்டதும் பரத்வாஜர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ‘முனிவரே... என்னுடன் வந்திருக்கும் வானர சேனைகளின் பசி, களைப்பு தீர விருந்தளித்து உதவுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டான் ராமன். அனைவரும் விருந்துண்ணும் போது ராமனுக்குச் சட்டென்று பரதனின் சபதம் நினைவுக்கு வந்தது. அன்றுதான் ராமன் அயோத்திக்குத் திரும்ப வேண்டிய நாள். ஆனால் இந்த விருந்து உபசாரம் காரணமாக நாளை தான் செல்ல முடியும் போலிருக்கிறதே எனக் கவலை கொண்டான். விவரம் கேட்டறிந்த பரத்வாஜர், ‘உண்மைதான் பரதன் உணர்ச்சி வயப்பட்டவன். அதை நன்றாக அறிவேன். நந்தி கிராமத்தில் இருக்கும் அவன் தீ வளர்த்து அதில் உயிரை விடவும் தயாராக இருக்கிறான். உடனே ஆள் அனுப்பி உன் வரவைத் தெரியப்படுத்து’ எனக் கேட்டுக் கொண்டார். அதன்படி நந்தி கிராமத்துக்கு உடனே விரைந்தான் அனுமன். பரதன் பற்றிய பரபரப்பு நீங்கியதும், பரத்வாஜர் நிம்மதியுடன் ராமர் உள்ளிட்ட வானர சேனைகளுக்கு விருந்து உபசரிப்பில் ஈடுபட்டார்.
|
|
|
|