|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கார்முகில் வண்ணனின் அருள் மழை |
|
பக்தி கதைகள்
|
|
ஸந்த் நாமதேவர் எழுதிய ‘வைஜயந்தி மாள’ என்று தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள். அழகான பாண்டுரங்கன் மாலையும் கிரீடமும் குண்டலங்களும் அணிந்து செங்கல் மீது நிற்கிறான். அவனுடைய தாமரை பாதங்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டன. அவனது அழகிய தோற்றம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. புராணங்களால் அளவிட முடியாத, சாஸ்திரங்களால் கண்டறியப்படாத பரம்பொருள் எனக்கு எளிமையாக காட்சி தருகிறது. முனிவர்களுக்கு ஞானக் கண்களுக்கு புலப்படும் அந்த சக்ரபாணி, எனக்கு எளிமையாக பீமாநதியின் நடுவில் நிற்கிறான். ஹரியின் அருளை அனுபவிக்கும் நானே பாக்கியசாலி.
‘சூரியன் வெகு தொலைவில் இருந்தே தாமரையை மலரச் செய்வது போல பாண்டுரங்கன் எங்கு இருந்தாலும் என் மனதை குளிரச் செய்கிறார்’ என ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் சோக்காமேளர்’. இப்படி பத்மநாபன் கூறியதும், பத்மாசினி ‘ இதிலே அவரது இன்னொரு ஏக்கமும் தெரிகிறது. அவரைக் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தார்கள் இல்லையா?’ என்றாள். ‘எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார் எனச் சொல்லியும் அவரை தடுப்பவர்களும் இருக்கவே செய்தார்கள்... பக்திக் கவிஞர் அன்னமாச்சார்யா ‘ பிரம்மம் ஒகடே... பரப்பிரம்மம் ஒகடே’ எனத் தொடங்கும் பாடலில் கடவுள் ஒருவரே என்பதை அழுத்தமாகக் கூறியிருக்கிறார்’ என்றார். அதன்பின் சோக்காமேளரின் வரலாறை மேலும் விவரிக்கத் தொடங்கினார். .................. தயிர்ப்பானையை எடுத்து வந்தாள் சோக்காமேளரின் மனைவி. பானை மீது சோக்காமேளரின் கைகள் தவறுதலாக பட்டுவிட, விட்டலனின் ஆடை மீது தயிர் சிந்தியது. அதைக் கண்ட அந்தணர் ஒருவர், ‘விட்டலனின் மீது தயிரைக் கொட்டி விட்டானே இந்த சோக்காமேளன்’ எனக் கோபித்ததோடு சோக்காமேளரின் கன்னத்தில் அறைந்து விட்டுச் சென்றார். அவர் வேறு யாருமல்ல... விட்டலன் கோயிலில் அர்ச்சகர். அன்று மாலையில் கோயிலைத் திறந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. கருவறையில் இருந்த விட்டலனின் கன்னம் வீங்கியிருந்தது. அவனது ஆடையிலும் தயிர் சிந்திய அடையாளம் இருந்தது. சோக்காமேளரை அடித்தது தவறு என உணர்ந்து பகவானிடம் மன்னிப்பு கேட்டார் அர்ச்சகர். அப்போதும் வீக்கம் குறையவில்லை. சட்டென்று அர்ச்சகர் சந்திரபாகா நதிக்கரைக்கு ஓடினார். சோக்காமேளரின் வீட்டுக்குள் நுழைந்தார். அவரது கையைப் பற்றியபடி கோயிலுக்கு அழைத்து வந்தார். சோக்காமேளர் பரவசத்துடன், ‘பாண்டுரங்கா... எனக்கா இந்த பாக்கியம்... கருவறைக்கு அருகில் வந்ததும் சோக்காமேளரின் கால்களில் விழுந்தார் அர்ச்சகர். அந்த நொடியே விட்டலனின் கன்னம் வீக்கம் போய் இயல்பாக மாறியது. விட்டலன் புன்னகைத்தான். தன் நண்பன் சோக்காமேளரின் பெருமையை உலகிற்கு உணர்த்திய செயலின் வெளிப்பாடு இது. .................... பாண்டுரங்க பக்தர்களில் முக்கிய இடம் பிடித்த மற்றொருவர் துகாராம். அவரிடம் இரண்டு அசாத்திய திறமைகள் இருந்தன. ஒன்று அற்புதமான குரல்வளம். இரண்டு கவிதை புனையும் ஆற்றல். பாண்டு ரங்க பஜனையில் ஈடுபடுவது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது. குடும்பத் தொழிலான வியாபாரத்தில் நாட்டம் சிறிதும் இல்லாத இவர், நன்கொடை வசூலித்து தான் வசித்த டேஹூ என்னும் பகுதியில் விட்டலனுக்கு கோயில் எழுப்பினார். அப்போது பஞ்சம் ஏற்படவே, தன்னிடம் இருந்த தானியங்களை ஏழைகளுக்கு தானமாக அளித்தார். இதைக் கண்ட அவரது மனைவி கமலாபாய்க்கு கோபம் உண்டானது. ‘எப்போதும் விட்டலனையே பாடிக் கொண்டிருந்தால் அவனா வந்து உங்களுக்கு சாப்பாடு தரப் போகிறான்’ எனக் கத்தினாள். தனக்கு தெரிந்த செல்வந்தர் ஒருவரிடம் தங்கக் காசுகளை கடனாகப் பெற்று கணவரிடம் கொடுத்தாள். ‘இதைக் கொண்டு தானியம் வாங்குங்கள். அதை விற்று லாபம் சம்பாதித்து வாருங்கள். குடும்பத்தை நடத்தலாம்’ என்றாள். ஒத்துக் கொண்ட துகாராம் தானியம் வாங்கியதோடு, அதை சந்தையில் விற்க மாட்டு வண்டி ஒன்றில் தானிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அடுத்த ஊருக்குச் செல்லத் தொடங்கினார். வழியில் மழை பெய்யத் தொடங்கியது. வண்டியை நிறுத்தி விட்டு துகாராம் வானத்தைப் பார்த்தார். கார்முகில்கள் அவருக்கு கார்மேக வண்ணனான கிருஷ்ணரின் கரியநிறத்தை நினைவுபடுத்தின. பெய்த மழையோ அவருக்கு விட்டலனின் அருள் மழையாகத் தோன்றியது. தன்னை மறந்த துகாராம் கண்களை மூடியபடி விட்டல கீதங்களை இசைக்கத் தொடங்கினார். அவர் வாங்கி வைத்திருந்த தானியங்கள் எல்லாம் மழைநீரில் மிதந்து கொண்டிருந்தன. சற்று நேரத்தில் துகாராமின் வீட்டின் கதவு தட்டப்பட்டது. கமலா பாய் கதவைத் திறந்த போது துகாராம் நின்று கொண்டிருந்தார். தானியங்களை விற்றுக் கிடைத்ததாக நிறைய வராகன்களை (பணத்தை) மனைவியிடம் அளித்தார். கமலாபாய்க்கு மகிழ்ச்சி பொங்கியது. கணவர் திருந்திவிட்டாரே! என மகிழ்ச்சியில் கணவரை உண்பதற்கு அழைத்தாள். அவரோ ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகச் சொல்லி புறப்பட்டார்.
அப்போது கமலாபாய்க்கு ஒரு யோசனை தோன்றியது. வீட்டில் பணம் நிறைய இருந்தால் விட்டலனின் பக்தர்களுக்கு கணவர் தானமளித்து விடுவார் என நினைத்தாள். முதல் வேலையாக தான் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என செல்வந்தரின் வீட்டுக்கு ஓடினாள். அவளைக் கண்ட செல்வந்தரோ ‘கமலாபாய், உன்னை பாராட்டுகிறேன். கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டாயே. உன் கணவர் சிறிது நேரத்திற்கு முன்பு வந்து பணத்தைக் கொடுத்துச் சென்றார்’ என்றார்.
அட... பொறுப்பு உள்ளவராக மாறி விட்டாரே... என மனதிற்குள் மகிழ்ந்தாள். வீட்டில் கணவரின் வருகைக்காக காத்திருந்தாள். ஆனால் துகாராம் வருவதாகத் தெரியவில்லை. நீண்ட நேரமானதால் கணவரை தேடிப் புறப்பட்டாள். ஆற்றுக்கு அருகில் இருந்த காட்டுப்பகுதியிலிருந்து இனிய கீதம் கேட்டது. கணவரின் குரல் அல்லவா இது? அங்கு கண்ணீர் பெருக அபங்கங்களைப் பாடிக் கொண்டிருந்தார் துகாராம். ‘ஆற்றில் குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு இங்கு என்ன செய்கிறீர்கள்?’ எனக் கேட்டாள். அமைதியாக இருந்த துகாராமிடம் நடந்ததை எல்லாம் விவரித்தாள். அதைக் கேட்ட அவர் குழப்பமடைந்தாலும் உண்மையை புரிந்து கொண்டார். தன் வடிவத்தில் மனைவிக்கு காட்சியளித்தவர் சாட்சாத் பாண்டுரங்கன்தான்! என்னே என் மீது உனக்கு கருணை... காதலாகிக் கசிந்து உருகிய துகாராமின் வாயில் இருந்து தொடர்ந்து அற்புத அபங்கங்கள் பிறக்கத் தொடங்கின.
|
|
|
|
|