|
உண்மையான பக்தருக்கு அவர் வழிபடும் தெய்வமே மனித உருவில் வந்து தொண்டு செய்யும் என்பது வேதவாக்கு. திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த தலங்களில் மணிமூர்த்தீஸ்வரர் கோயில் பல சிறப்பினை உடையது. இங்கு கருவறையில் விநாயகரே மூலவராக அருள் பாலிக்கிறார். இவ்வூரில் முன்பு பெரும் புகழோடு வாழ்ந்தவர் ஸ்தபதி அனவரதம். இவர் விநாயகப்பெருமானின் தீவிர பக்தர். தினந்தோறும் காலை, மாலை விநாயகர் கோயிலுக்கு சென்று தீப தரிசனம் பார்த்த பின்னர், வீட்டிற்கு வந்து பூஜை அறையில் இருக்கும் விநாயகருக்கும் அருகம்புல் மாலை சாற்றி வழிபட்ட பிறகே உணவு உண்பதையும், மற்ற வேலைகளையும் தொடங்குவார். எந்த நேரத்திலும் விநாயகரின் நாமத்தினையே நினைத்துக் கொண்டே இருப்பார். அனவரதத்திற்கு ஒரு விசுவாசமான பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் விநாயகம். அவருடைய அனைத்து வேலைகளையும் அவரே செய்வார். அனவரதம் வெளியே போகும் போதெல்லாம் விநாயகம் குடை பிடித்து செல்வார். ஒரு சதுர்த்தி நாள் அன்று வழக்கமான பணியில் தீவிரமாக இருந்தார் விநாயகம். அந்த நேரத்தில் மணிமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார் அனவரதம். அவர் வழிபாட்டில் இருக்கும் போது திடீர் என பெருமழை பெய்தது. தரிசனத்தை முடித்த அவர் வழக்கம் போல் விநாயகம் அருகே இருக்கிறான் என நினைத்து ‘விநாயகம் குடையை விரி’ என சொல்லி மழைக்குள் நடக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் விநாயகம் வடிவில் மணிமூர்த்தீஸ்வரர் தோன்றி அனவரதத்தின் வீடு வரைக்கும் குடை பிடித்து வந்தார். கோயிலுக்கு சென்ற முதலாளியை அழைத்து வர புறப்பட்ட விநாயகத்திற்கு, வீட்டு வாசலில் தன்னை போல ஒருவர் முதலாளிக்கு குடை பிடித்து வருவதை பார்த்த விநாயகம் ஆச்சரியம் அடைந்தார். வாசலில் விநாயகம் குடையுடன் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அனவரதம். சிறிது நேரத்தில் அவருக்கு உண்மை விளங்கியது. தனக்கு குடை பிடித்து வந்தது மணிமூர்த்தீஸ்வரரே என நினைத்து மீண்டும் மணிமூர்த்தீஸ்வரர் கோயில் இருந்த திசை நோக்கி வணங்கினார். யார் ஒருவர் தினந்தோறும் அருகம்புல் மாலை சாற்றி உள்ளன்போடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு முன்னவனே முன் நிற்பான் என்பதில் சந்தேகம் இல்லை. என்ன விநாயகருக்கு அரும்புல் மாலை சாற்றி வழிபட ஆயத்தமாகி விட்டீர்கள் போல் இருக்கே.
|
|
|
|