|
ராவணனுடனான நேரடிப் போர் தொடங்கியது. தன் தம்பியை மூர்ச்சை இழக்கச் செய்த ராவணன் மீது கோபம் கொண்டான் ராமன். ஆனால் ராவணன் தன்னுடைய தேர்மீது கம்பீரமாக நின்றவாறு போரிட, ராமன் தரையில் நின்றபடி போரிட்டான். ராவணனின் குதிரைகள் பூட்டிய தேரையும் அதன் மீது அவன் கம்பீரமாக நின்றபடி, போரிடும் வசதியை கண்டும், தன் தலைவனான ராமனுக்கு அப்படி ஒரு பாக்கியம் இல்லாதது குறித்தும் அனுமன் வருந்தினான். ராவணனை விட பராக்கிரமசாலி, வெற்றுக் காலுடன் தரை மீது நின்று போரிடுவதா என பதைபதைத்து, ‘‘ஐயனே, என் தோள்மீது ஏறிக் கொள்ளுங்கள். நானே உங்களுக்கு ரதமாவேன்’’ என்றான். ‘‘நல்லது சொன்னாய் அன்பனே. நீயே தேராக இருந்தால் எனக்குப் பலவகையில் பாதுகாப்பாக இருக்கும். உன் தோள் மீது அமர்ந்தபடி போர் தொடுப்பது வெற்றியைத் தரும்’’ என மகிழ்ந்தபடி அனுமனின் தோளில் அமர்ந்தான். உடனே செயல்படுத்திய ராமனைக் கண்டு நெகிழ்ந்தான் அனுமன். தேவர்கள் மலர் துாவி ஆசியளிக்க, தன் குழந்தையைத் தோள்மீது வீற்றிருக்கச் செய்யும் அன்புத் தந்தையாக அனுமன் செயல்பட்டான். ராமனுக்குத் தன் உடல் அசைவுகள் மூலம், அவன் போர் முறைக்கு உதவினான். ராமனுடைய கோணத்தில் இருந்து தான் பார்த்து, அதற்கேற்ப அக்கம் பக்கத்திலோ, முன் பின்னாகவோ அசைந்து, விரைந்து, வீரப்போர் நிகழ வழி அமைக்கும் தேராக விளங்கினான் அனுமன். ராமனுடைய குறிப்பறிந்து அவன் கோணம் பார்த்து தாழ்ந்து, நின்று, உயர்ந்து, இங்கும் அங்கும் நகர்ந்ததால், அவனுடைய பாணத்தால் உயிரைப் பறி கொடுத்த எதிரிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. எதிரே ராவணன் பத்துத் தலைகளுடன் உக்கிரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அனுமன் அசைந்து அசைந்து போர்த் தடத்தை மாற்றிக் கொண்ட விதம் ராமனுக்கும் பத்துத் தலையோ என பார்ப்பவர்களை அதிசயிக்க வைத்தது. ராமபாணத்தின் வேகத்துக்கும், அதன் வீச்சுக்கும், எறியப்படும் கோணத்துக்கும் ஈடு செய்தவாறே, அவற்றின் தாக்குதல் வீணாகி விடாதவாறு ராமனைச் சுமந்து வழி நடத்தினான். இயல்பாகவே ஒரு தேரின் மீது நின்று போரிடும் உணர்வுடனேயே ராவணனை எதிர்த்தான் ராமன். அவன் அவ்வாறு வில்லில் நாணேற்றி போரிட்ட போது அவனது இரு கால்களையும் பற்றிக் கொண்டு, அவன் நிலை தடுமாறாதவாறு அனுமன் பார்த்துக் கொண்டான். அதே போல உயர்நிலை கோணம் பார்த்து அம்பு எய்யும் கட்டங்களில் அவன் நிமிர்ந்து எழுந்தபோது, அவனது பாதங்களைத் தன் கைகளால் தாங்கி உயர்த்திப் பிடித்துக் கொண்டான். இதனால் உறுதியாகக் காலுான்றி, இலக்கு நோக்கிச் சரியாக அம்பு எய்ய ராமானால் முடிந்தது. விண்ணில் இருந்து இந்தப் போரின் முடிவை அதாவது ராவண வதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த வானவர்களில் தேவர் தலைவனான இந்திரனும் ஒருவன். ராவணனுக்குச் சமமான தளவாட வசதிகள் இல்லாமல் ராமன் போரிட வேண்டியிருந்ததை அவன் மிகுந்த வருத்தத்துடன் கவனித்தான். ஒரு தேர் போல அனுமன் இயங்கியதை பிரமிப்புடன் நோக்கினாலும், அந்தக் கட்டத்தில் அனுமனின் ஆற்றலும் தனித்து வெளிப்பட்டால் ராவண வதம் எளிதில் முடிந்து விடுமே எனக் கருதினான் இந்திரன். அதாவது ராமனுக்குத் தேராக இயங்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டால் அனுமன் தன் பங்கிற்கு ராவணனின் படையை நிர்மூலமாக்கி, ராம வெற்றியை சுலபம் ஆக்கலாமே! உடனே இந்திரன் தன் தேர்ப்பாகனான மாதலியை அழைத்து, ‘நம்மிடம் உள்ள இந்த தேரை எடுத்துக் கொள். இதன் மீதேறி லாவகமாகவும், எளிதாகவும் ராமன் போரிடும் விதத்தில் துணைநில்’’ என்றான். அதேபோல மாதலி தேருடன் போர்க்களம் சென்று ராமனைச் சந்தித்தான். அவனைப் பார்த்ததும், தோல்வியைத் தழுவ நேருமோ என்ற பயத்துடன் ராவணன் செய்யும் மாயவேலையோ என சந்தேகப்பட்டான் ராமன். ஆனால் மாதலி, ‘இத்தேரை சிவபெருமானின் கட்டளைப்படி இந்திரன் கொடுத்தனுப்பினார். என் பெயர் மாதலி. இந்த தேரை பரமேஸ்வரனும், பிரம்மனும் இணைந்து உருவாக்கியது. மண்ணில் மட்டுமின்றி, விண்ணிலும், நீரிலும், நெருப்பிலும் செல்லவல்லது. ‘முப்புரம் எரித்தவனும் நான்முகனும் முன்நாள் அப் பகல் இயற்றி யுளது ஆயிரம் அளக்கர்க்கு ஒப்புடையது ஊழி திரிகாறும் உலைவு இல்லா இப் பொருளில் தேர் வருவது இந்திரனது எந்தாய் – கம்பர் என்றான். பூட்டியிருந்த குதிரைகளின் தோற்றத்தாலும், தேரின் பொலிவாலும் மாதலி கூறியதை ஏற்றுக் கொண்ட ராமன், சில யுத்தப் பொறுப்புகளை அனுமனிடம் ஒப்படைத்து விட்டு தேரில் ஏறிக்கொண்டான்.
ராமனும், ராவணனும் தத்தம் சங்கை ஒலிக்க, தேரோட்டியான மாதலியும், இந்திரன் தனக்கு அளித்திருந்த சங்கை ஒலிக்கச் செய்தான். அது மட்டுமன்றி நுண்ணறிவுடன், அனுபவச் செறிவுடன், வெகு சாமர்த்தியமாகத் தேரைச் செலுத்தினான். ராவணன் மாய அஸ்திரம் ஒன்றை ஏவ, அதிலிருந்து ஏற்கனவே இறந்து போன அவனது மகன் இந்திரஜித்தும், தளபதி மகோதரனும் மீண்டும் தோன்றி ஆர்ப்பரித்தனர். ஒரு கணம் திகைத்து நின்றான் ராமன். உடனே மாதலி, ‘ஐயனே இவை எல்லாம் மாயத் தோற்றம். உங்களை மனதால் பலவீனப்படுத்த ராவணன் செய்யும் சூழ்ச்சி இது. இப்போதே தாங்கள் ஞான அஸ்திரத்தை அவன் மீது ஏவுங்கள். மாயம் எல்லாம் மறைந்து போகும்’ எனத் தெரிவித்தான். ராமனும் அவ்வாறே செய்ய, ராவணனின் மாய அஸ்திரம் மறைந்தது.
தனக்கு தக்கத் தருணத்தில் யோசனை சொன்ன மாதலியைப் பாராட்டினான் ராமன். போர் உக்கிரமடைந்தது. ராவணனின் தலைகள் ஒவ்வொன்றாக ராமனால் துண்டிக்கப்பட்ட போதும், அவை மீண்டும் முளைத்து அவன் பெற்ற வரத்தின் சக்தியைக் காட்டின. ராவணனின் தோள்களை அம்புகளால் அறுத்தெறிந்தான் ராமன். அப்போதும் ராவணன் தன் இன்னொரு கையால், வெட்டப்பட்டு கீழே கிடந்த கையை எடுத்து வீச, மாதலியின் வாயில் பட்டு ரத்தம் வெளிவந்தது. கோபமுற்ற ராமன், ராவணன் மீது பலவாறாக அம்புகள் எய்து ராவணனை சோர்வடையச் செய்தான்.
தன் பலம் அனைத்தும் இழந்து சோர்ந்த ராவணன், தன் தேர்ப்பாகனிடம், தேரை பின்னோக்கிச் செலுத்த ஆணையிட்டான். அப்படி சென்ற போது மாதலி, ‘அண்ணலே, இதுவே தக்க தருணம். பாணம் எய்து ராவணனின் வாழ்க்கையை முடித்து விடுங்கள்’ என உற்சாகப்படுத்தினான். ஆனால் ராமனோ, ‘அவ்வாறு செய்வது அறம் ஆகாது. களைத்து விழுந்தவன் மீது கணை தொடுத்தல் தகாது’ என மறுத்தான்.
ராமனின் பெருந்தன்மை கண்டு வியந்த மாதலி, ‘ஒரு போரில் வெற்றி இலக்கை அடைய வேண்டுமானால் பகைவருக்கு இரக்கம் காட்டுதல் முறையாகாது. தான் பாதுகாப்பு மிக்கத் தங்கத் தேரில் போரிட வந்த போது, நீங்கள் அனுமனையே தேராகப் பயன்படுத்தியதைக் கண்ட ராவணன், உங்களுக்கு எந்த சலுகையையாவது காட்டினானா? உங்களுடைய அந்த பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளத்தானே நினைத்தானா’ எனக் கேட்டான். இதற்கிடையில் தன் தேரோட்டி கொடுத்த ஊக்கத்தால் உற்சாகமுடன் ராவணன் எதிர்க்க, ராமனும் பிரம்மாஸ்திரத்தை எய்தான். ராவணன் நிலைகுலைந்து தேருக்குள்ளேயே சாய்ந்தான். ராவண வதம் உறுதியானதும் மாதலிக்கு நன்றியைத் தெரிவித்தான் ராமன். ‘மீண்டும் இந்திரனைச் சென்றடைக. எனக்காக உன்னோடு தேரையும் அனுப்பிய இந்திரனுக்கும், அவ்வாறு ஆணையிட்ட கயிலைநாதனுக்கும் என் வணக்கத்தை தெரிவித்திடு’. பெரியதொரு சாதனை நிகழத் தன்னால் உதவ முடிந்ததே என்ற மகிழ்ச்சியில் ராமனை வணங்கி விட்டு தேவருலகம் நோக்கி புறப்பட்டான் மாதலி.
|
|
|
|