|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » என் கனவிலும் சொல்லட்டும் |
|
பக்தி கதைகள்
|
|
ஸந்த் ஞானேஸ்வரர் எழுதிய ‘ ஹரி ஆலா’ என்று தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள். அன்பான மக்களே... எங்கும் ஹரியே இருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை. ஹரியை தரிசனம் செய்யுங்கள். எப்போதும் அவனை தியானம் செய்யுங்கள்.அவனை அன்றி வேறெதுவும் சிறப்பானதல்ல. ஹரியைப் பாடுங்கள். பேரானந்தம் அடையுங்கள். தொடக்கமும், முடிவும் அவனே. பஞ்ச பூதங்களில் நிறைந்திருப்பதும் அவனே. ரகுமாதேவியின் (ருக்மணியின்) கணவனான ஹரியே இந்த பிரபஞ்சத்தின் சக்ரவர்த்தி.
‘‘உனக்கு தெரியுமா பத்மாசினி? சீக்கியர்களின் புனித நுாலில் கூட துகாராமின் அபங்கம் இடம் பெற்றுள்ளன’’ என்றார். வியப்புடன் பார்த்த மனைவிக்கு விளக்கம் அளித்தார் பத்மநாபன். ‘தன் மனதிற்கினிய பக்தர்களுக்குள் கடவுள் புகுந்து கொள்கிறான் என்பது சீக்கியர்களின் நம்பிக்கை. அதன் பிறகு அந்த பக்தரிடம் இருந்து வெளிப்படும் வார்த்தை அனைத்தும் கடவுளுடையது தான். சீக்கியமதக் கோட்பாடுகளும் துகாராம் அபங்கங்களில் வெளிப்படுத்தும் கருத்துகளும் ஒத்திருக்கின்றன’’ என்றார். ...................... பக்தியில் ஈடுபட்டதால் வீட்டு விஷயங்களில் கவனம் செலுத்த தவறினார் துகாராம். கையிலுள்ள பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு தானம் அளித்தார். இதை பொறுக்க முடியாத மனைவி கமலாபாய் கணவரைத் திட்டினாள். இதனால் துகாராம் தியானத்திலும் பஜனையிலும் ஆழ்ந்திருப்பதும் அன்றாட நடப்பாகி விட்டது. இந்தச் சூழலில் ஒரு ஏகாதசி தினத்தன்று நீராடிய கமலாபாய் தன் புடவையை துவைத்து கொடியில் உலர வைத்தாள். பின்னர் சமைக்க ஆரம்பித்தாள். அப்போது ஏழைப்பெண் ஒருத்தி துகாராமிடம் வந்து, ‘‘சுவாமி... நானும் உங்களைப் போல விட்டல பக்தை. என்னிடம் மாற்றுப் புடவைக்கும் வழியில்லை. ஏதேனும் கந்தல் ஆடை இருந்தால் கொடுத்து உதவுங்கள்’’ எனக் கேட்டாள். மனைவி உலர வைத்த புடவை துகாராமின் கண்களில் படவே அதைக் கொடுத்தனுப்பினார். இதையறிந்த கமலாபாய் கோபத்தில் கத்தினாள். ‘‘எல்லாம் பாண்டுரங்கனால் வந்த வினை இன்று அவனை உண்டு இல்லை என்று ஆக்கப் போகிறேன்’’ என கையில் அம்மிக் கல்லை எடுத்துக் கொண்டு கோயிலை நோக்கி ஓடத் தொடங்கினாள். பதட்டமுடன் துகாராம் மனைவியைப் பின்தொடர்ந்தார். கோயிலில் விட்டலன் தன் அருகில் நின்ற ருக்மிணியைக் கண்டு புன்னகைத்தபடி, ‘‘ஏழைப் பெண்ணின் வடிவில் சென்று துகாராமிடம் புடவையைப் பெற்றாயே. இப்போது அவனது மனைவி நம்மிடம் வருகிறாள்’’ என்றான். கமலாபாய் கோயிலுக்குள் நுழைந்ததும் சன்னதிக் கதவு தானாக மூடிக்கொண்டது. மணியும், புல்லாங்குழலும் ஒலிக்கத் தொடங்கின. அம்மிக் கல்லோடு நின்ற கமலாபாயின் எதிரில் தோன்றினாள் ருக்மிணி. கமலாபாய் திகைத்தாள். அவளின் அதிர்ச்சியை இன்னும் அதிகமாக்கியது ருக்மிணி தேவி அணிந்திருந்த புடவை. அது கமலாபாய் உலர வைத்திருந்த புடவை. கமலாபாய் கதறி அழுதபடி கோயிலை விட்டு வெளியேறினாள். ருக்மணிதேவியின் அருளால் அவள் உடம்பெங்கும் தங்க நகைகளும், பட்டாடைகளும் இருந்தன. . கணவரைக் கண்டதும் ‘‘நான் ருக்மிணி தேவியை நேரிலேயே தரிசித்தேன்’’ என்றாள் தழுதழுக்கும் குரலில். முதலில் பரவசப்பட்டாலும் துகாராமுக்கு கோபம் எழுந்தது. ‘‘கடவுளே காட்சி தரும் போது பட்டாடை, நகைகள் வேண்டும் என வரம் கேட்பது? மோட்சம் தர வேண்டும் என்றல்லவா கேட்க வேண்டும்?’’ என்றார். ‘‘தனியாக எனக்கு எதற்கு மோட்சம்... உங்களுடன் வாழ்ந்தாலே மோட்சம் கிடைக்குமே’’ என விழுந்து வணங்கினாள் கமலாபாய். அதன் பின் இருவரும் பக்தியில் முழுமையாக ஈடுபட்டு விட்டலனின் திருவடியை அடைந்தனர். அபங்க பாடல்களை எழுதிப் புகழ் பெற்றார் துகாராம் என்றால் ஞானேஸ்வரி என்ற நுாலை எழுதி தனித்துவம் பெற்றவர் ஞானேஸ்வரர். கதாகாலட்சேபம் செய்வதில் வல்லவரான இவரால் பாடப்பட்ட நுாலே ஞானேஸ்வரி என்னும் பாவார்த்த தீபிகா. இவரது சமாதி புனேவுக்கு சற்று தொலைவில் இருக்கும் ஆலந்தி என்னும் நகரில் உள்ளது. இவரது உன்னதமான வாழ்க்கை தெரிந்து கொள்ளுங்கள். அரண்மனையின் கணக்கராக இருந்த கோவிந்த பண்டிதருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. விடோபா எனப் பெயரிட்டு வளர்த்தார். இளைஞனாக வளர்ந்ததும் திருமண ஏற்பாடு நடந்தது. ஆனால் உலக வாழ்வு பற்றி அறிந்த பின்னரே திருமணம் செய்வதாக சொல்லி விடோபா யாத்திரை கிளம்பினான். வழியில் ஒருநாள் சீதோபந்து என்பவரின் வீட்டில் ஒருநாள் இரவு தங்கினான். அன்றிரவு சீதோபந்துவின் கனவில் தோன்றிய விட்டலன், ‘உன் மகளை விடோபாவுக்கு திருமணம் முடித்து வை’ எனக் கட்டளையிட்டான். விடோபாவிடம் கனவைப் பற்றிச் சொன்னார் சீதோபந்து. ‘‘திருமணம் புரியும் எண்ணம் இல்லாததால் தானே யாத்திரை புறப்பட்டேன். விட்டலன் எனக்கும் கனவில் உத்தரவிட்டால் பார்க்கலாம் என்று சொல்லி அங்கிருந்து விடோபா கிளம்பினார். சீதோபந்துவின் மகளான ருக்மாபாயும் விடோபா மீது அன்பு கொண்டு அவரைப் பின்தொடர்ந்தாள். ‘‘உத்தமியான ருக்மாபாயை மணம் செய்து கொள். அதுவே என் விருப்பம்’’ என அசரீரி வானில் கேட்டது. திருமணம் முடிந்தது. யாத்திரை சென்ற மகன் மணக்கோலத்தில் வருவதைக் கண்ட பெற்றோர் மகிழ்ந்தனர். ஆனால் மணவாழ்வில் விடோபாவுக்கு நாட்டமில்லை. தொடர்ந்து எண்ணற்ற அதிசயங்கள் நடக்க ஆரம்பித்தன.
|
|
|
|
|