|
மகாவிஷ்ணு எடுத்த ராமாவதாரம் முடிய இன்னும் மூன்று நாட்களே இருந்தன. ராமபிரானை ரகசியமாக சந்திக்க எமதர்மர் வந்தார். அப்போது நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என லட்சுமணருக்கு கட்டளையிட்டார் ராமபிரான். அப்போது கோபக்காரரான துர்வாசமுனிவர் அங்கு வந்தார். அவரை அனுமதிக்க மறுத்தார் லட்சுமணர். கோபம் கொண்ட முனிவர் அயோத்தியையே அழிந்து போக சபிப்பேன் எனக் கூச்சலிட்டார். அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் முனிவருக்கு வழிவிட்டார். தன் ஆணையை மீறிய தம்பியை ‘மரமாகப் போ’ என சபித்தார் ராமபிரான். அதைக் கேட்டதும் கண்ணீருடன், ‘‘அண்ணா…தாங்கள் எனக்கு கொடுத்த சாபத்தை எண்ணி வருந்தவில்லை. தங்களுக்கு நாள்தோறும் சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்? என வருந்தினார். ‘‘லட்சுமணா! எல்லாம் தர்மத்தின் விதிப்படியே நடக்கிறது. சீதாவைக் காட்டிற்கு அனுப்பிய பாவத்திற்காக பூலோகத்தில் 16 ஆண்டு அசைவின்றி நானும் தவவாழ்வில் ஈடுபட்டு பரிகாரம் செய்ய வேண்டி இருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும் பேறு பெறுவாய்’’என்றார் ராமபிரான். அதன்படியே துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகிலுள்ள ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாராக அவதரித்தார். லட்சுமணர் புளியமரமாக நின்று கண் இமைக்காமல் சேவை செய்தார். அதை நினைவூட்டும் விதமாக இன்றும் இம்மரத்தின் இலைகள் மூடுவதில்லை. ஆதலால் இதற்கு ‘துாங்கப்புளி’ என்ற சிறப்புப் பெயருண்டு. ‘‘வாயால் பாடுவதும், உள்ளத்தால் தேடுவதும், கண்களால் காண்பதும் விரும்பி தரிசிப்பதும் நம்மாழ்வாரின் திருவடியை தான்’’ என்கிறார் வைணவ குருநாதரான மணவாள மாமுனிகள் பாடுவதெல்லாம் பராங்குசனை நெஞ்சத்தால் தேடுவதெல்லாம் புளிக்கீழ் தேசிகனை – ஓடிப்போய் காண்பதெல்லாம் நங்கையிறு கண்மணியை யான்விரும்பிப் பூண்பதெல்லாம் மாறனடிப் போது. |
|
|
|