கிழக்குப் பார்த்த கருவறையில் ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன் வைத்தும், வலது பாதத்தை பின் வைத்தும் காட்சி கொடுக்கிறார். தாமரைத் தண்டு போன்ற தனது இடது கை இடுப்பில் தாங்க, வலது கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அமைந்துள்ளது. தனது காலை சிரசில் வைத்து ஆனந்தமாக நர்த்தனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தில் இவரைக் காண்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்
மலைவையாவூர்
காஞ்சிபுரம்.
பிரார்த்தனை
இக்கோயிலின் ஆஞ்சநேயரை வேண்டுபவர் தங்கள் எண்ணங்களை வெள்ளைத் தாளில் எழுதி அதன்மீது மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள் துணியில் முடிந்து அனுமனின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர். பின்னர் அதை கோயிலில் அதற்கென இருக்கும் கொம்பில் கட்டி விட்டுச் சென்றால் நாற்பத்தெட்டு நாட்களுக்குள் அவர்களது எண்ணம் கை கூடுகிறது என்பது நம்பிக்கையாக உள்ளது.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இந்த மலை வையாவூருக்கும் பெயர் வந்ததே ஒரு வியப்பான செய்தியாகக் கூறப்படுகிறது. சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வரும் ஆஞ்சநேயர் இந்த இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டாராம். எனவே, மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி மலை வையாவூரானது என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இக்கோயிலின் எதிரே மண்டபம் அமைந்திருந்த பகுதியில் மூலவர் இருந்ததாகவும்; மண்மூடி பலகாலம் இருந்த இவர் ஒரு மகானால் கண்டறியப்பட்டு அங்கிருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு எதிர்புறத்தில் மலைமேல் தென் திருப்பதி என்று மக்களால் போற்றப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தல வரலாறு:
ராம அவதாரத்தில் ராமபிரானுக்கு ராவணனுக்கும் நடைபெற்ற போரில் ஒரு கட்டத்தில் ராமனின் தம்பி லட்சுமணன் மூர்சையாகிவிடுகிறான். அந்த பரம்பொருளான ராமன் நினைத்திருந்தால் லட்சுமணனை ஒரு நொடியில் எழுப்பிவிடலாம். அப்படிச் செய்ய அவருக்கு மனமில்லை. அருகிலிருந்த விபீடணன் ராமனுக்கு ஆறுதல் தந்ததோடு, சஞ்சீவிபர்வதத்திலிருக்கும் மூலிகையை எடுத்து வந்து லட்சுமணனை முகத்தில் படவைத்தால் மூர்ச்சையிலிருந்து எழ இயலும் என்று கூறுகிறான். இச்செயலைக் செய்ய சர்வமும் தானேயென்று இருக்கும் மகாபராக்கிரமனான ஆஞ்சநேயர் ஒருவரால்தான் இயலும் என்பதை உணர்ந்த ராமன், அனுமனிடம் வந்து உதவி கேட்கிறார். என்றும் தன் உள்ளத்தில் வைத்து பூஜிக்கும் அந்த ஸ்ரீராமனே தன்னிடம் உதவி கேட்டால் மறுப்பானா? உடனே சஞ்சீவி பர்வதத்தை அடைந்து மூலிகையைத் தேடுகிறான், ஆஞ்சநேயர். அவனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சஞ்சீவி பர்வதத்தையே தனது கைகளில் தூக்கி நிறுத்தி பறந்து வந்துவிடுகிறான். ஸ்ரீராமன் முகத்தில் அனுமனைக் கண்டதும் பரவசம் மேலிடுகிறது. விபீடணம் அடையாளம் காட்ட, சஞ்சீவி மூலிகையை லட்சுமணனின் முகத்தில் வைக்க, அவரும் மூர்ச்சையிலிருந்து விடுபட்டு எழுகிறான். தாங்க முடியாத சந்தோஷத்தில் செயற்கரிய செயலை செய்து முடித்த ஆஞ்சநேயரை ஆரத் தழுவிக் கொள்கிறார் ராமசந்திர பிரபு. அப்போது அனுமனின் கைகளை அவர் கவனிக்க, மலையை சுமந்து வந்ததால் உள்ளங்கையில் புண்கள் ஏற்பட்டு ரணமாகியிருந்தது. திடுக்குற்ற ராமர், தாமரை மலரைக் கொண்டு அனுமனின் கையை மெல்ல வருடி விடுகிறார். ஆஞ்சநேயனுக்கோ, தனது இதயத்துள் வைத்து பூஜிக்கும் ராமச்சந்திர பிரபுவே தனக்கு சேவை செய்ததில் சந்தோஷம் பிடிபடவில்லை. துள்ளிக் குதிக்கிறான். நர்த்தனமாடுகிறான். ஆம்! இப்படி நர்த்தனக் கோலத்தில் அனுமன் காட்சிதரும் புனித்தலம், மலை வையாவூர். இங்கு வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கி சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கிழக்குப் பார்த்த கருவறையில் ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன் வைத்தும், வலது பாதத்தை பின் வைத்தும் காட்சி கொடுக்கிறார். தாமரைத் தண்டு போன்ற தனது இடது கை இடுப்பில் தாங்க, வலது கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அமைந்துள்ளது. தனது காலை சிரசில் வைத்து ஆனந்தமாக நர்த்தனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தில் இவரைக் காண்பது சிறப்பு.
இருப்பிடம் : சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோடிலிருந்து வலது புறமாக வேடந்தாங்கல் சாலையில் சுமார் 8 கி.மீ. பயணித்து இத்தலத்தை அடையலாம். சென்னையிலிருந்தும், செங்கற்பட்டிலிருந்தும், தாம்பரத்திலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.