இத்தலத்து சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது சிறப்பான அமைப்பு. இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது சண்டிகேஸ்வரருக்குப் பதிலாக, கூற்றுவநாயனார் புறப்பாடாகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். அர்ச்சகரை முன்கூட்டியே தொடர்பு கொண்டால் பிற நேரங்களில் சுவாமியைத் தரிசிக்கலாம்.
முகவரி:
அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயில்,
பி.வி.களத்தூர் - 603 405,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 97890 49704, +91- 99624 67355.
பொது தகவல்:
இத்தல இறைவன் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், காலபைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளது. இக்கோயிலில் உள்ள தூண்கள் சிற்பக்கலைக்குச் சான்றாக வடிக்கப்பட்டிருக்கிறது.
பிரார்த்தனை
பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள், மன ஆறுதல் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை:
இங்கு சிவனுக்கு சேவை செய்த பக்தர் ஒருவர், அந்தணர் ஒருவரிடம் பணியாற்றினார். அந்தணர் அவருக்கு சம்பளமாக தன்னிடமிருந்த நிலத்தின் ஒரு பகுதியைக் கொடுத்தார். பணியாளர் தனது நிலத்தையும், அந்தணரின் நிலத்தையும் பராமரித்து வந்தார்.
ஒருசமயம் பணியாளருக்கு கொடுத்த நிலத்தில், குறிப்பிட்ட நேரத்தில் விதைக்கும் நெல், பொன்னாக விளையும் என்பதை அந்தணர் அறிந்தார். இதற்காக அவர் ஒரு தந்திரம் செய்தார். பணியாளனிடம் தனது வயலில் விளையும் மொத்த நெல்லையும் எடுத்துக் கொள்ளும்படியும், தனக்கு அவனது வயலில் விளையும் குறைவான நெல் போதுமென்றும் கூறினார். பணியாளனும் ஒப்புக்கொண்டு அவரது நெல்லை எடுத்துக் கொண்டான்.
பணியாளனின் வயலில் பொன் கதிர்கள் விளைந்தபோது, அந்தணர் அதை எடுத்துக் கொண்டார். விஷயம் தெரியாத பணியாளனும் அதை கண்டுகொள்ளவில்லை. இதைக் கண்ட மக்கள், அந்தணரிடம் பணியாளனுக்கும் அதில் ஒரு பங்கு கொடுக்கும்படி கேட்டனர். அவர் மறுத்துவிட்டார்.
இவ்விஷயம் மன்னனுக்குச் சென்றது. அவன், அங்கு விளைந்த நெற்கதிர்களை அரசுக்கணக்கில் எடுத்துக் கொண்டான். பணியாளனை ஏமாற்ற எண்ணிய அந்தணர், தனக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய நெல்லையும் இழந்தார். சிவனின் அருளால் பணியாளர் அதிக நெல் கிடைக்கப்பெற்றார். இவ்வாறு பொன் நெல் விளைந்ததால் ஊர், "பொன்விளைந்த களத்தூர்' என்று பெயர் பெற்றது. கூற்றுவநாயனார் சிறப்பு: இத்தலத்து சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது சிறப்பான அமைப்பு. கோயில் முன் மண்டபத்தில் கூற்றுவ நாயனார் இருக்கிறார். சிவனால், மணிமகுடம் சூட்டப்பட்ட கூற்றுவ நாயனார், பல சிவன் கோயில்களுக்கு திருப்பணி செய்து வழிபட்டார். அதில் இத்தலமும் ஒன்று. ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை நடக்கும். அப்போது இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு, புறப்பாடாவார். கோயில்களில் விசேஷ காலங்களில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகள் உலா செல்வர். ஆனால், இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது சண்டிகேஸ்வரருக்குப் பதிலாக, கூற்றுவநாயனார் புறப்பாடாகிறார்.
இவ்விழாவின்போது, சுவாமி கூற்றுவநாயனாருக்கு காட்சி தரும் வைபவமும் நடக்கும். தஞ்சாவூர் அரண்மனையில் அரசவைப்புலவராக இருந்த புகழேந்தியும் இவ்வூரில் பிறந்தவரே.
தல வரலாறு:
இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அப்பாக்கியம் வேண்டி சிவனுக்கு 108 கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தான். அவ்வாறு கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்று.
ஒருசமயம் மன்னன் இக்கோயிலுக்கு சுவாமியைத் தரிசிக்க வந்தான். அவ்வேளையில் பூஜையை முடித்த அர்ச்சகர், சுவாமிக்கு அணிவித்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். மன்னர் வந்திருப்பதை அறிந்த அர்ச்சகர், மனைவிக்கு சூடிய மாலையை கோயிலுக்கு எடுத்து வந்தார். சிவனுக்கு அணிவித்த மாலை எனச் சொல்லி அதை மன்னனுக்கு அணிவித்தார். மன்னர் மாலையில் முடி இருந்த காரணத்தைக் கேட்டார். அர்ச்சகர் அவரிடம் "லிங்கத்தின் சடாமுடியில் இருந்த முடியே அது!' என பொய் சொல்லிவிட்டார்.
மன்னன் தனக்கு சிவனிடம் முடியைக் காட்டும்படி கூறினான். அர்ச்சகர் மறுநாள் காட்டுவதாகச் சொல்லிவிட்டார். மன்னன் மறுநாள் தனக்கு அந்த தரிசனம் கிடைக்காவிட்டால், அர்ச்சகருக்கு கடும் தண்டனை கொடுக்க நேரிடும் என எச்சரித்துச் சென்றான். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சிவனை வேண்டினார். மறுநாள் மன்னர் வந்தார். அர்ச்சகர் பயத்துடனே சிவலிங்கத்தின் முன்பு தீபாராதனை காட்டினார். என்ன ஆச்சர்யம்! சிவலிங்க பாணத்தின் முன் பகுதியில் கொத்தாக முடி இருந்தது. மன்னனும் மகிழ்ந்தான். இவ்வாறு அர்ச்சகருக்காக குடுமியுடன் காட்சி தந்ததால் இவர், "முன்குடுமீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்து சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது சிறப்பான அமைப்பு.
இருப்பிடம் : செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி : காஞ்சிபுரம்
ஹோட்டல் தமிழ்நாடு +91-44-2722 2554, 2722 2553 பாபு சூரியா +91-44-2722 2555 ஜெயபாலா +91-44-2722 4348 ஹெரிடேஜ் +91-44-2722 7780 எம். எம். ஹோட்டல் +91-44-2723 0023 ஜி. ஆர். டி. +91-44-2722 5250