இங்குள்ள நரசிம்மர் ஒரு அடி உயரத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளவர் என்பது தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்
மட்டபல்லி, நல்கொண்டா
ஆந்திர மாநிலம்.
போன்:
+91 8683- 227 922
பொது தகவல்:
விஜயவாடாவில் உங்கள் பயணம் காலை 6 மணிக்கு துவங்கட்டும். இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது மங்களகிரி பானக நரசிம்மர் கோயில். காலை 8மணிக்கு இங்கிருந்து 60 கி.மீ.தூரத்திலுள்ள வேதாத்ரியை 2மணி நேரத்தில் அடையலாம். இங்கு 12 மணி வரை தரிசனம் செய்யலாம். வேதாத்ரியில் மதிய உணவுக்குப் பின், மட்டபல்லி செல்லுங்கள். மாலை 4 மணிக்கு அடைந்து விடலாம். இங்கு தரிசனம் முடித்து அருகிலுள்ள ஹுசூர்நகரில் இரவு தங்கலாம்.
காலை 6 மணிக்கு இங்கிருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள வடபல்லியை அடையலாம். இங்கு செல்லும்முன் அர்ச்சகருக்கு போன் செய்யுங்கள். வடபல்லியில் இருந்து கேதவரத்துக்கு 60 கி.மீ., இங்கு அர்ச்சகர் இருப்பதில்லை. அருகிலுள்ள வீட்டிலுள்ள வாட்ச்மேன் கோயிலைத் திறந்து காட்டுவார். மலைக்கோயிலுக்கு செல்ல விரும்பினால், உள்ளூர் ஆட்களின் துணையைக் கேளுங்கள். மாலை 3 மணிக்குள் தரிசனம் முடித்து கிளம்புங்கள். விஜயவாடாவை 6 மணிக்குள் அடைந்து விடலாம்.
சென்னையில் இருந்து: 12077- சென்னை-விஜயவாடா (ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 7 மணி. இது தவிரவும் சில ரயில்கள் உள்ளன.
புதுச்சேரியில் இருந்து: 22403-புதுச்சேரி- டில்லி (டில்லி எக்ஸ்பிரஸ்)- புதன் காலை 9.05 மணி. 12868- புதுச்சேரி-ஹவுரா (ஹவுரா எக்ஸ்பிரஸ்)- புதன் பகல் 12.30 மணி. 12897- புதுச்சேரி- புவனேஸ்வரம் (புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்) புதன் மாலை 6.30 மணி.
கோவையில் இருந்து: 12625-திருவனந்தபுரம் -டில்லி (கேரளா எக்ஸ்பிரஸ்)- தினமும் இரவு 7.55 மணி. 13352-ஆலப்புழை -தன்பாத் (தன்பாத் எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 11.55 மணி. 12522-எர்ணாகுளம்- பிர்வானி (பிர்வானி எக்ஸ்பிரஸ்) - வெள்ளி காலை 10.10 மணி. 12969-கோவை-ஜெய்ப்பூர் (ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ்) வெள்ளி காலை 9.15 மணி. 16323-திருவனந்தபுரம்- விஜயவாடா(ஷாலிமர் எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, ஞாயிறு அதிகாலை 1.25மணி மதுரையில் இருந்து: 12641- கன்னியாகுமரி- நிஜாமுதீன் (திருக்குறள் எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 11.45 மணி. 12651- மதுரை- நிஜாமுதீன் (சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ்) - திங்கள், சனி இரவு 11.35 மணி. 12666- கன்னியாகுமரி-ஹவுரா (கேப் ஹவுரா எக்ஸ்பிரஸ்)- சனி பகல் 12.35 மணி. 16787- திருநெல்வேலி-ஜம்முதாவி (ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, திங்கள் இரவு 7மணி. 14259- ராமேஸ்வரம்-வாரணாசி (வாரணாசி எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 8.05 மணி.(வழி: மானாமதுரை)
பிரார்த்தனை
திருமணபாக்கியம், குழந்தைப்பேறு, தீராத நோய்கள் தீர, வீடு கட்டுதல் பணி துவங்க என அனைத்துக் காரியங்களும் துவங்கும் முன் இவரை வழிபட்டு விட்டுத் துவங்குகின்றனர்.
நேர்த்திக்கடன்:
நோய்கள் குணமானவர்கள் ஒரு தடவைக்கு 32 முறை வீதம், காலை மதியம் மாலை ஆகிய மூன்று வேளை 11 நாட்கள் அடி பிரதட்சணம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இக்கோயிலைக் கட்டிய மன்னர் மச்சிரெட்டி பல தெய்வீக பணிகளைப் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீசைலம், காசி விஸ்வநாதர், தங்கெடா கோபாலர் கோயில் விமானங்களுக்கு தங்க கலசம் அமைத்துக் கொடுத்துள்ளார். இவர் வாழ்ந்த கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆன்மிக உபன்யாசகர் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் இந்தக் கோயிலுக்கு பல கைங்கர்யம் செய்துள்ளார். இங்குள்ள நரசிம்மரின் சக்தி பற்றி தனது குறையொன்றுமில்லை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது சக்தி பற்றிய செவிவழிச் செய்தி ஒன்றும் இருக்கிறது. மொகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் பல கோயில்கள் அழிக்கப்பட்டன. மட்டபல்லியையும் தாக்க அவர் உத்தரவிட்டார். நரசிம்மரின் தீவிர பக்தையான சென்னூரி கீரம்மா என்பவருக்கு இது தெரியவந்தது. நரசிம்மா! உன் பக்தர்கள் உன்னை. எக்காலமும் வணங்க வேண்டுமென்றே, ரிஷிகள் உன்னை இங்கு பிரதிஷ்டை செய்தனர். கலியுகம் முடியும் வரை நீ இங்கு இருக்க வேண்டும். உன்னை வணங்கும் பாக்கியத்தை இனிவரும் சந்ததிக்கும் கொடு என்று உருக்கமாகப் பிரார்த்தித்தார். மொகலாயப்படைகள் கோயிலை முற்றுகையிட சென்றன. என்ன ஆச்சரியம்! பெரிய வண்டுகள் அவர்களை நோக்கி பறந்து வந்தன. அவர்களைக் கொட்டித் தீர்த்தன. அவற்றின் தாக்குதலை தாங்க முடியாத படையினர், தப்பிப்பிழைத்தால் போதுமென ஓடிவிட்டனர். எத்தகைய, ஆபத்தில் இருந்தும் காக்கும் தெய்வம் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.
இங்குள்ள கருவறை குகை போன்ற அமைப்பில் உள்ளது. கருவறையின் நுழைவு மேல்வாசலில், லட்சுமி நரசிம்மர் சுதைச்சிற்பமும், கஜலட்சுமி சிற்பமும் உள்ளது. கருவறையின் மேல்பகுதி பாறையால் ஆனது. எனவே, குனிந்தே கருவறைக்குள் செல்ல முடியும். மூலவர் யோகானந்த நரசிம்மர், பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளார். அந்த சிற்பத்தின் மேலுள்ள பாறை, ஆதிசேஷனைப் போல உள்ளதால், பாம்பு குடைபிடிப்பது போல் உள்ளது. நரசிம்மர் ஒரு அடி உயரமே உள்ளார். பத்மாசனத்தில் அமர்ந்துள்ள இவர் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். கீழ் இடதுகையை மூட்டுப்பகுதியில் வைத்துள்ளார். கீழ் வலதுகை இருக்குமிடம் மறைந்திருக்கிறது. நரசிம்மரின் இடதுபுறம் அலங்கரிக்கப்பட்ட மூன்று திருநாமங்களும், இரண்டு கண்களும் உள்ளன. இதை நரசிம்ம பக்தனான பிரகலாதனின் வடிவம் என்கின்றனர். நரசிம்மரின் திருவடியில் சக்ரி என்ற பக்தர் ஒரு அடி நீள செவ்வகப் பாறை வடிவில் உள்ளார். தனக்கு முக்தி கிடைக்க பெருமாளின் திருவடியை சரணடைந்தார் இவர். எனவே, தான் வேறு, அந்த பக்தன் வேறல்ல என்பதை எடுத்துக்காட்ட பெருமாள் அவனை தன் காலடியில் பாறையாக வைத்துக் கொண்டார். இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது. நரசிம்மரின் அருகில் ஒன்றரை அடி உயர லட்சுமி தாயார் தாமரை மலரில் அமர்ந்துள்ள சிற்பம் உள்ளது. மற்றொரு லட்சுமி சிற்பமும் பாறையில் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் தெளிவாக இல்லை.
எனவே, 1975ல், உலோகத்தலான ராஜ்யலட்சுமி தாயார் சிற்பம் வைக்கப்பட்டது. ராஜ்யம் ஆள்பவள் என்பதால் அவளது சிரசில் மகுடம் சூட்டப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் மற்றும் உற்சவர் சிலைகள் சுவாமியின் முன் உள்ளன. சுவாமியின் வலதுபுற பாறையில் 12க்கு பதிலாக 11 ஆழ்வார்களின் சிற்பங்கள் மட்டும் உள்ளன. இதில் ஏழு ஆழ்வார்கள் மேற்காகவும், நால்வர் கிழக்காகவும் உள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒன்று இருளில் மறைந்திருக்கலாம் என தெரிகிறது. கருவறை முன்புள்ள முக்தி மண்டபத்தில் 21 தூண்கள் உள்ளன. நரசிம்மர் முன் கருடனே காட்சி அளிப்பார். இங்கு கருடனுடன் ஆஞ்சநேயரும் இணைந்து கருவறையை வணங்குவது போன்ற சன்னதி உள்ளது. அழகான ஊஞ்சல் மண்டபமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. முக்தி மண்டபத்தின் இடப்பகுதியில் கோதாதேவி(ஆண்டாள்) சன்னதி, பிருகு, அத்திரி, கஷ்யபர், வைகானச ஆசார்யலு சன்னதி ஆகியவை உள்ளன.
நோய் தீர்க்கும் வழிபாடு: தீராத நோய் உள்ளவர்கள், இங்கு 11 நாட்கள் தங்கி, கிருஷ்ணாநதியில் நீராடி ஒரு தடவைக்கு 32 முறை வீதம், அதிகாலை, மதியபூஜை, மாலை வேளையில் கோயிலை வலம் வந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.
பக்தர்களுக்கு எச்சரிக்கை : கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள இந்தக் கோயிலில் பக்தர்கள் நீராட படித்துறை உள்ளது. இந்த படித்துறை எல்கைக்குள் மட்டுமே பக்தர்கள் நீராட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் ஆழமான பகுதி என்பதால் முதலைகள் வசிப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
தல வரலாறு:
இப்போதும் கூட அடர்ந்த வனமாய் இருக்கும் மட்டபல்லி, முற்காலத்தில் எப்படி இருந்திருக்கும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த வனத்திற்குள் கிருஷ்ணாநதி மிக அமைதியாகப் பரந்து விரிந்து பாய்ந்து கொண்டிருக்கிறது. இங்கு பரத்வாஜ முனிவரும், அவரது சீடர்களும், பிற ரிஷிகளும் தங்கியிருந்து, ஒரு குகைக்குள் அருள்பாலித்த நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். காலம் கடந்தது. அடர்ந்த காடாக இருந்ததால், நரசிம்மர் இருப்பதே யாருக்கும் தெரியாமல் போனது. கலியுகத்தில், அநியாயம் பெருகும்போது, மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள இந்த நரசிம்மர் வெளிப்படுவார் என ஆரூடம் கூறினார் பரத்வாஜர். அதன்படி, ஒருசமயம், தங்கெடா என்ற பகுதியை ஆண்ட ஸ்ரீஅனுமலா மச்சிரெட்டி என்ற மன்னரின் கனவில் நரசிம்மர் தோன்றினார். மன்னா! நான் உன் ஆட்சிக்குட்பட்ட மட்டபல்லியிலுள்ள குகையில் இருக்கிறேன். எனக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய், என்று கூறி மறைந்தார். மறுநாளே, மன்னர் தன் அமைச்சர்களுக்கு, அந்த குகையை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். மன்னரும், அமைச்சர்களும், பண்டிதர்களும் குகையைத் தேடி அலைந்தனர். ஆனால், குகை இருந்த இடம் தெரியவில்லை. மன்னரின் மனதில் கவலை ஏற்பட்டது. பல இடங்களிலும் அலைந்து திரிந்ததால் களைப்பு மேலிட உறங்கி விட்டார். அப்போதும், நரசிம்மர் கனவில் வந்தார். மன்னா! என்னை நெருங்கி விட்டாய். நீ தேடும் குகை ஒரு மரத்தின் பின்னே செடிகொடிகள் மூடி கிடக்கிறது. அங்கு தான் நான் இருக்கிறேன், என்றார். மகிழ்ந்த மன்னர், உடனடியாகப் பணியைத் துவக்கவே, குகை தெரிந்தது. அந்த குகைக்குள் நுழைந்து பார்த்தபோது, ஆதிசேஷன் குடை பிடிக்க, சங்கு சக்கரதாரியாக, கதாயுதம் தாங்கி, அமர்ந்த நிலையில் நரசிம்மர் சிலை ஒன்று இருந்ததைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார். அந்தச்சிலையை அதே குகையில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். தன் நாட்டு மக்கள் வழிபடும் வகையில் பாதையும் அமைத்துக் கொடுத்தார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள நரசிம்மர் ஒரு அடி உயரத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளவர் என்பது தலத்தின் சிறப்பு.
இருப்பிடம் : விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் செல்லும் ரோட்டில் 100 கி.மீ., கடந்தால் கோதாடா என்ற சிறுநகரம். இங்கிருந்து ஹுசூர்நகர் வழியாக மட்டபல்லிக்கு 40 கி.மீ,. மட்டபல்லியில் பெரிய கடைகள் இல்லை. ஹுசூர்நகரில் ஓட்டல்கள், கடைகள் உள்ளன.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
விஜயவாடா
அருகிலுள்ள விமான நிலையம் :
விஜயவாடா
தங்கும் வசதி :
விஜயவாடாவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.