வைகுண்ட ஏகாதசி, சித்திரை மாதம் விஷு முதலிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தல சிறப்பு:
பட்டுப் போன நிலையிலுள்ள பலாமரத்தை பக்தர்கள் வணங்கி செல்வது இத்தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாலகிருஷ்ணர் திருக்கோயில்
நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம்-695 121
கேரள மாநிலம்.
போன்:
+91 471- 222 2780
பொது தகவல்:
மாதத்தில் ஒருநாள் திறப்பு: பிரகாரத்தில் சாஸ்தா, கணபதி, நாகர், பள்ளியறை பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அதிக சக்தி வாய்ந்த பள்ளியறை பகவதி சன்னிதானம் மட்டும் மாதத்தில் முதல் வெள்ளி மட்டுமே திறக்கப்படுகிறது.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்குள்ள கிருஷ்ணரை வழிபட்டுச் செல்லுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறியவுடன் இங்குள்ள கிருஷ்ணருக்கு நெய்விளக்கு ஏற்றி, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கோயில் நுழைவு வாயிலில், கிருஷ்ணரின் கீதாஉபதேசக் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. நவநீதகிருஷ்ணனின் திருமேனி சிறிதாக இருந்தாலும் பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் காணப்படுகிறது. திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் மாவு பொடியில் முழுகாப்பு, சந்தனக்காப்பு செய்து, பால்பாயாச நைவேத்தியம் செய்கின்றனர்.
எமபயம் நீக்கும் பலா: நுழைவு வாயிலின் இடது புறம் பலிபீடத்தின் அருகில் புராதன பலா மரத்தின் அடிப்பாகம் மட்டும் காணப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் காணப்படும் பொந்தில் தான் மன்னர் பதுங்கி இருந்துள்ளார். மன்னரின் உயிரை காப்பாற்றிய இந்த மரத்திற்கு அம்மச்சி பிலாவு என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த மரத்தை வணங்கினால் ஆயுள்விருத்தியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. கிருஷ்ணரின் திருக்கையில் வெண்ணெய் வைத்து வழிபாடு செய்யும் சடங்கும் நடக்கிறது.
கல்லை தூக்கினால் வேலை: மன்னரின் உயிரை காப்பாற்றிய இடம் என்பதால், மார்த்தாண்டவர்மா தன்னுடைய படைக்கு ஆள்களை இங்கு வைத்து தேர்வு செய்துள்ளார். பணியில் சேரவிரும்புபவர்கள் கோயிலுக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். கோயில் முன்புள்ள உருண்டை கல்லை தூக்குபவர்களை படைக்கு தேர்வு செய்வார்கள். தற்போதும் அந்தக் கல் காணப்படுகிறது, ஆனால், எவராலும் தூக்க முடியவில்லை.
தல வரலாறு:
திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா பத்மநாப புரத்திலுள்ள அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தார். ராஜகுடும்பத்துக்கு எதிரானவர்கள், மன்னரின் பயணத்திற்கு எதிராக சதி வேலையில் ஈடுபட முடிவு செய்தனர். இதனை அறிந்த மன்னர் வழக்கமான பாதையை மாற்றி, நெய்யாற்றின் கரை வழியாக செல்ல முடிவு செய்து ஆற்றங்கரையை அடைந்தார். அங்கிருந்த பரிசல் ஓட்டிகள் மன்னரை அக்கரைக்கு அழைத்துசென்றனர். விபரமறிந்த எதிரிகளும் பின்தொடர்ந்தனர். மன்னர் ஒளிவதற்கான இடம் தேடிய போது, அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், மன்னரை அங்கிருந்த பலாமரப் பொந்தில் பதுங்கி இருக்க செய்தனர். தன் உயிரைக் காப்பாற்றிய சிறுவர்களுக்கு பரிசளிக்க மன்னர் அவர்களைத் தேடிய போது, அவர்களைக் காணவில்லை. பசுமாடு மேய்க்கும் சிறுவர்களின் வடிவில் பகவான் கிருஷ்ணரே, தன் உயிரை காப்பாற்றியதாக நினைத்த மன்னர், அங்கே கிருஷ்ணருக்கு கோயில் அமைத்தார். சுவாமிக்கு நவநீதகிருஷ்ணன் என திருநாமம் சூட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பட்டுப் போன நிலையிலுள்ள பலாமரத்தை பக்தர்கள் வணங்கி செல்வது இத்தலத்தின் சிறப்பு.