108 சங்காபிஷேகம், கார்த்திகையில் முருகன் வீதியுலா, மார்கழி பஞ்சமூர்த்தி வீதியுலா, மாசி உற்ஸவம்
தல சிறப்பு:
இங்கு சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவே சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தனி சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் மணி 8 வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சரணாகரட்சகர் திருக்கோயில்,
திருக்கடையூர், தில்லையாடி, நாகப்பட்டினம் மாவட்டம்.
பொது தகவல்:
சங்கர நாராயணர், கங்கா விசர்ஜன மூர்த்தி, தேவியர் சமேதராக மூன்று சன்னதிகள் கொண்டிருக்கும் முருகப் பெருமான் மற்றும் அஷ்ட விநாயகர்கள், அகத்தியர், தனி சன்னதியில் சனிபகவான் ஆகியோரை தரிசிக்கலாம்.
கோயிலின் முன்பு சக்கர தீர்த்தம் உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளோடு அறுபதடி உயரத்தில் வானளாவி விளங்குகின்றது. அதன் கீழ் இளங்கார முனிவர் ஈசனை வணங்குவதுபோன்ற சிற்பம் காணப்படுகின்றது. அடுத்து இடதுபுறம், கருவறையில் மூலவரான சார்ந்தாரைக் காத்த சுவாமி காட்சி அளிக்கிறார். மூலவருக்கு வலப்புறம் சுரங்கப்பாதை உள்ளது. நிருதிமூலையில் சோழ மன்னனுக்கு கண்ணொளி தந்த நேத்ர விநாயகர் கஜப் பிருஷ்ட விமானத்தின்கீழ் சோழ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். பொதுவாக சுவாமி சன்னதி தான் கஜப்பிருஷ்ட விமானத்துடன் அமைந்திருக்கும். இங்கோ சுவாமி இந்திர விமானத்துடனும், சோழ விநாயகர் கஜப்பிருஷ்ட (யானையின் பின்பகுதி போல் அமைப்பு) விமானத்துடன் இருப்பது தனிச்சிறப்பு. சுப்ரமணியர் கோயில் தனியாக உள்ளது. சனிபகவான் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. அதற்கு பின்புறம் சூரியனும், பைரவரும் மேற்கு நோக்கி அருள்புரிகிறார்கள். திருநள்ளாறில் உள்ளது போல் சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் மத்தியில் தனிச்சன்னதியுடன் சனி அருள் புரிகிறார். இதன் இடதுபுறம் வில்வமரம், வலது புறம் வன்னிமரம் உள்ளது. கொடிமரத்தில் திருமால் யாளிவடிவில் ஈசனை வணங்குவதுபோல் பொறிக்கப்பட்டுள்ளது. தெற்கு நோக்கிய அம்பிகை பெரிய நாயகி ஆனந்தமாய், அறிவாய், அமுதாய் இன்பம் தரும் நிலையில் அருள்புரிகிறாள். ஆடிப்பூர நாளில் வளையல் அணிவிப்பு நிகழ்ச்சியில் மணப்பேறு, மக்கட்பேறு கிடைக்க அருள்புரிவாள். அம்பாளுக்கு தனிச்சுற்றுடன் கூடிய தனிச்சன்னதி உள்ளது. வெளி மகா மண்டபத்தில் கோஷ்டத்தில் ஆஞ்சனேயர் அருள்புரிகிறார்.
பிரார்த்தனை
மணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் ஸித்திக்கவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் இங்குள்ள அம்பாளையும், சுவாமியையும் வழிபட்டு வர இன்னல்கள் யாவும் நீங்கும்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்கு வந்து சுவாமி-அம்பாளுக்கும் தாமரை மலர் சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றியும், சனி பகவானுக்கு நீல நிற சங்கு புஷ்ப மாலை சார்த்தி 9 வாரங்கள் வழிபட்டும், எடைக்கு எடை கற்கண்டு, பூ, பழம், சேலை-வேட்டி சமர்ப்பித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சித்திரை வருடப்பிறப்பு துவங்கி மாதந்திர விசேஷங்கள் அனைத்தும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன. ஆடிப்பூரத்தன்று சந்தானபரமேஸ்வரி ஹோமத்தில் கலந்துகொண்டு அம்பாளுக்கு வளையல் சார்த்தியும், அவளின் சன்னதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதேபோன்று புரட்டாசி நவராத்தியின்போது, அம்பாளுக்கு ராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்குமாம். சோமவார (திங்கட்கிழமைகளில்) நாளில் 108 சங்காபிஷேகம், கார்த்திகையில் முருகன் வீதியுலா, மார்கழி பஞ்சமூர்த்தி வீதியுலா, மாசி உற்ஸவம் ஆகிய வைபவங்களும் இங்கே விசேஷம். அதே போன்று பங்குனி உத்திரத் திருநாளில்... 21 தட்டுகளில் பூ, பழம், சேலை - வேட்டி என வரிசை வைத்து, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் நடைபெறும் திருக்கல்யாணத்தைக் காணக் கண்ணிரண்டு போதாது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், திருமணம் ஆகாத பெண்களும் இங்கு வந்து ஸ்வாமி - அம்பாளுக்குத் தாமரை மலர் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட, வேண்டியது நிறைவேறும். அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் நடுவே சன்னதி கொண்டிருக்கும் சனி பகவானுக்கு ருத்ரஹோமம் அபிஷேகம் செய்வது விசேஷம். மேலும் நீல நிற சங்குபுஷ்ப மாலை சார்த்தி, 18 எள் தீபங்கள் ஏற்றி வைத்து, தொடர்ந்து 9 வாரங்கள் இவரை வழிபட்டால், சகல பிரச்னைகளும் கண் தொடர்பான நோய்களும் நீங்கும்.
இளங்கார முனிவர் தவமிருந்து மெய்ஞ்ஞானம் பெற்ற பெருமை வாய்ந்ததும், காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், திருமால், சனி, இந்திரன் முதலானோர் வழிபட்டு பேறு பெற்றது சிறப்பு.
திருமால் வழிபட்டது : முராரியான திருமால் முன்னொரு காலத்தில் இரண்யாசுரன் என்ற அசுரனைக் கொன்றார். அதனால் அவருக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசனிடம் சக்ராயுதத்தைப் பெற்று, திருக்கடவூர் அருகிலுள்ள தில்லைவனமான தில்லையாடியைச் சார்ந்தார். தன் சக்ராயுதத்தால் இங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, புனல், மலராதி கொண்டு சார்ந்தாரைக் காத்தநாதரை யாளி (குதிரை) வடிவில் அர்ச்சித்து வழிபடலானார். சிவபெருமான் அவர்முன் தோன்றி அவருக்குண்டான வீரஹத்தி தோஷத்தை நீக்கியருளினார். திருமால் உருவாக்கிய தீர்த்தம் சக்கரதீர்த்தம் என்றாயிற்று. தில்லைவனம் என்பது தில்லையாளி என்றானது. தேவேந்திரன் தில்லைவன நாதரை வணங்கி, தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடியதுபோல் இந்த தலத்திலும் திருநடனம் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டதன் பேரில், இந்திரனுக்காக ஆனந்த நடனம் ஆடியருளியதால் தில்லையாடி என பெயர் பெற்றது. தில்லைவனம், வள்ளியம்மை நகர், தில்லையாளி என்ற பெயர்கள் இருந்தாலும் தற்போது நடைமுறையில் தில்லையாடி என்றே விளங்கப் பெறுகிறது. சனி பகவான் பூஜித்தது : நவநாயகர்களில் நீதி தவறாத நீதிபதியாக தன் கடமையைச் செய்பவர் சனி பகவான். தன் கடமையைச் செய்கின்ற சனி பகவானுக்கு அபவாதப் பெயர் தான் வருகிறது. இந்த அபவாதப் பெயர் நீங்கவும், தன்னை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பிய சனி பகவான், தில்லையாடிக்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி எண்ணற்ற நாட்கள் தவங்கிடந்தார். எம்பெருமானும் சனி பகவானின் அன்பிற்கு எளியராகி, தன்னை சரணடைந்த அடியார்கட்கு வேண்டுவனவெல்லாம் நல்கும் திறனை சனி பகவானுக்கு அருளினார்.
தல வரலாறு:
விக்ரம சோழனின் ஆட்சிக் காலம். அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரர், திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், தில்லையாடி திருக்கோயிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்துகொண்டிருந்தார் அந்த மந்திரி. சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே மந்திரியை அழைத்து, தில்லையாடி கோயிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார். அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன், தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது பேரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன். ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னனின் பார்வை பறிபோனது. தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான். இந்தத் தலத்துக்கு ஓடோடி வந்து, ஈஸ்வரனைச் சரணடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப்பெற்றான். இதனால், இந்தத் தலத்தின் சிவனார், சரணாகரட்சகர் (சார்ந்தாரைக் காத்த ஸ்வாமி) என்று திருப்பெயர் பெற்றாராம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவே சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தனி சிறப்பு.