தூங்கானை மாடக் கோயில் வகையில் காஞ்சிக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையில் 18-ம் கோயிலாக இத்தலம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர், செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் சிவத் தலங்கள் இரண்டும் ஒரே சிற்பியால் கட்டப்பட்டவை. வீமீஸ்வரர் ஆறடி உயர லிங்கத் திருமேனியாராகக் கோயில் கொண்டுள்ளார். இடப்பாகத்தில் தேவி ஸ்வர்ணம் பிகை தெற்குநோக்கி அருள்கிறார். சுவாமிக்கு எதிரில் யுகத்திலிருந்து எழுந்து வருவது போன்று ஒரு கல்லிலிருந்து நின்ற நிலையில் சிவபெருமான் உள்ளார். இந்த ஆலயத்தில் மிகப்பெரிய இரண்டு நந்திதேவர்கள் இறைவனை நோக்கியவாறு அமர்ந்துள்ளனர். இத்தலத்தின் சிவனை தொடர்ந்து மூன்று பிரதோஷ காலத்தில், இரண்டு நந்திதேவனையும் வழிபட்டபின் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் ஆண் குழந்தை பிறக்க வழி உண்டாகும் என்கிறார்கள்.
தல வரலாறு:
கி.பி 1182-ம் ஆண்டில் தமிழும் கிரந்த லிபியும் சேர்ந்தவாறு பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆலயத்தின் கருவறை மண்டபத்தைச் சுற்றிலும் காணப்படுகின்றன. இவ்வூர் பெருவஞ்சூர் என அழைக்கப்பட்டு, மூன்றாம் குலோத்துங்க மன்னன் ஆட்சிபுரிந்தபோது இந்த ஆலயத் திருப்பணிகள் செய்துள்ளான். அதோடு இவ்வூர் ராஜேந்திர சோழ நல்லூர், கேசரி நல்லூர் என்ற பெயர்களுடனும் விளங்கி வந்துள்ளது தெரிய வருகிறது. நவகிரகங்களின் தலைவனாகவும், ஆரோக்கியகாரகன் என்றும் வர்ணிக்கப்படும் சூரியன், உலக மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களையும் பாப கர்மங்களையும் விலக்கிக் கொள்ள பூமியில் சக்தி வாய்ந்த சிவாலயத்தைத் தேடினான். அப்போது ரதசப்தமி காலமானதால் தனது தேர்ச்சக்கரத்தை தெற்கிருந்து வடக்காகத் திருப்பியபோது இத்தலத்தில் இருந்து சிவனைக் கண்டு பூமிக்கு வந்து ஒரு தீர்த்தத்தை உண்டு பண்ணி, நீராடி மனமுருகிப் பிரார்த்தனை செய்தான். ஒளிக்கடவுளாய் விளங்கும் சூரிய பகவானுக்கே தோஷம் ஏற்பட்டுள்ளபோது, நாமும் அங்கு சென்று பரமனை பயபக்தியோடு வழிபட்டுப் பாவச் சுமைகளை விலக்கிடும்படி வேண்டுவது நல்லது என்று எண்ணி மண்ணுலகுக்கு வந்து சிவ வழிபாடு செய்தனர். விண்மீன்கள் வழிபட்டதால், விண்மீன்கள் ஈஸ்வரர் எனப்பட்டு காலப்போக்கில் வீமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார், இங்குள்ள இறைவன் அம்பிகைக்கு ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு.
நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன், இத்தலத்தில் தானும் அமர்வதற்கு ஓர் இடம் தந்து அருளவேண்டும் என்றும், இங்கு வருவோரின் மாங்கல்ய தோஷங்களை தான் நீக்கிட அருள்க எனவும் தேவியை வேண்டினான். தன் கழுத்தில் இருந்த ஸ்வர்ண ஆபரணத்தைக் கழற்றித் தந்தாள் ஈஸ்வரி. நவகிரகத் தலைவனே நேரில் வந்து இறைவனை வழிபடும்போது, நீ மட்டும் தனிச்சிறப்பை வேண்டுதல் கூடாது. நவகிரகங்களின் சாந்நித்யம் பரமனுக்கே உரித்தானது என்றாள். அதைக் கேட்ட சுக்கிரன் அடக்கத்தோடு, ஸ்வர்ணத்தைப் பெற்றுக் கொண்டு, எனக்கு ஸ்வர்ணத்தை அளித்து அருளியமையால், தாங்கள் ஸ்வர்ணாம்பிகையாகக் காட்சி தந்து இத்தலம் வந்து வழிபடுபவர்களுக்கு (தங்கமும்) பொருள் பலமும் கூட வேண்டும் என்று வேண்டிட, தேவியார் அப்படியே அருள் செய்தார், இதனால் தேவிக்கு ஸ்வர்ணாம்பிகை என்ற பெயர் நிலைப்பெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மாசியில் காலை 7 மணிக்கு சூரிய ஒளி சிவனைச் சுற்றி விழுவது தலத்தின் சிறப்பு.