|
முன் யுகத்தில் அபிஜித் என்ற மன்னன், தன் பட்டத்து ராணி குணவதியுடன் அரசாண்டு வந்தான். எல்லாச் செல்வங்கள் இருந்தும், அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை. வைசம்பாயனர் என்னும் முனிவர், அவர்களை காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள உபதேசித்தார். அவர்களும் அப்படியே செய்தனர். அவர்கள் செய்த கடும் தவத்தினால் ராணி குணவதி ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு கணராஜன் என்ற பெயர் சூட்டப்பட்டது. பலசாலியாக வளர்ந்தாலும் இளவரசனிடம் பொறுமையின்மையே அதிகம் குடிகொண்டது. கணராஜன் ஒருமுறை தனது பரிவாரங்களுடன் வேட்டையாட காட்டிற்குச் செல்கிறான். அவர்கள் களைப்படைந்த நேரத்தில் கபில முனியின் ஆசிரமத்தின் அருகில் இருக்க நேர்ந்தது. இளவரசனை அன்புடன் வரவேற்ற முனிவர், அவர்களை ஆசிரமத்திலேயே தங்கி இளைப்பாற வேண்டுகிறார். தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறான். சிறிது நேரத்தில் அவன் மட்டுமல்லாமல் அவனது முழுப்படைகளும் இளைப்பாற வசதிகளுடன் அறுசுவை உணவும் தயாராகிவிட்டதென கபில முனிவர் தெரிவிக்கிறார். இது எப்படி சாத்தியம்? என கணராஜன் குழம்புகிறான். இளவரசன் மனதை அறிந்து கொண்ட கபிலமுனி, அதற்கு விடையளிக்கிறார்.
இந்திரன் எனக்கு அளித்த சிந்தாமணி என்கின்ற அபூர்வ ஆபரணம் இது! காமதேனு, அட்சயபாத்திரம் போன்று சக்தி வாய்ந்தது. இதன் மூலமே உங்கள் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்தேன் என்று கபிலமுனி கூறியவாறு சிந்தாமணியை கணராஜனுக்குக் காண்பிக்கிறார். ஒளி மிகுந்த அந்த ஆபரணத்தைக் கண்கொட்டாமல் பார்த்த கணராஜனுக்கு பேராசை அதிகமானது. சிந்தாமணியைத் தனக்குத் தருமாறு கபிலமுனியிடம் கேட்கிறான். இதை சற்றும் எதிர்பாராத முனிவர் தடுமாறுகிறார். இந்திரன் தந்தது. அதனால் தர இயலாது என்று பணிவுடன் அவனுக்குத் தெரிவிக்கிறார். பலமுறை வேண்டியும் முனிவர் சிந்தாமணியை தர மறுக்கவே, வெகுண்ட இளவரசன், பொறுமையிழந்து சிந்தாமணியை வலியப் பறித்துச் சென்று விடுகிறான். கபில முனிவர் துக்கத்தில் ஆழ்கிறார். அவர் துர்க்காதேவியின் தீவிர பக்தர். ஒருநாள் அவர் கனவில் வந்த தேவி, விநாயகர் உபாசனையைத் தொடருமாறு அவரை அறிவுறுத்துகிறாள். அதன்படி முனிவர் இடைவிடாமல் விநாயகப் பெருமானை வழிபடத் தொடங்க, கணபதி அவருக்குக் காட்சி தந்து வேண்டியதைக் கேட்கப் பணிக்கிறார். சிந்தாமணி ஆபரணத்தை மீட்டுத் தருமாறு இறைஞ்சுகிறார். அவரது கோரிக்கைக்குச் செவி சாய்க்கிறார், விநாயகர். இளவரசன் கணராஜனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் பெரிய யுத்தம் தொடங்குகிறது. வனத்தில் கடம்ப விருட்சத்தின் கீழ் விநாயகர் கணராஜனை மாய்க்கிறார். மன்னன் அபிஜித் அவரைச் சரணடைந்து சிந்தாமணியைத் தருகிறான். இது நடந்த இடம், தேவூர். கடம்ப தீர்த்தம் என்ற பெயரும் இதற்கு உண்டு. சிந்தாமணி தன்னிடம் இருப்பதைவிட விநாயகரிடம் இருப்பதே சாலச் சிறந்தது என கபிலமுனி முடிவெடுத்து, அதை அவரிடம் அளிக்கிறார். அந்தக் கடம்ப விருட்சத்தின் அருகே சிறிய ஆலயத்தை கபிலமுனி எழுப்பி, விநாயகர் விக்ரகத்தையும் நிறுவுகிறார். அவர்தான் சிந்தாமணி விநாயகர் என்ற பெயருடன் தேவூரில் அருளாசி தருகிறார். |
|