காலை 6 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோயில்
திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91 94439 86202
பொது தகவல்:
பழமையான இந்தக்கோயில் சிதிலமடைந்துள்ளது. கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கோதண்ட ராமர் சன்னதி, அமிர்தவல்லித் தாயார் கர்ப்பக்கிரகம், முன் மண்டபம், சுற்று மதில்கள், ஆஞ்சநேயர் கோயில், மடப்பள்ளி, வாயில் முகப்பு, ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. திருப்பணியில் பங்கேற்று பெருமாள் திருவருள் பெறலாம்.
பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து நெய்விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
இந்தக் கோயிலில் ராமானுஜர் வழிப்பட்டுள்ளார். அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த பிறகு, அமிர்தநாராயணப் பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன் முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. ராகு- கேது பரிகார தலமாகவும் கருதப்படுகிறது. கல்தூண் இல்லாமல் முழுவதும் சுட்டசெங்கற்களால் கட்டப்பட்ட கோயில். குழந்தை புத்திகூர்மை, வலிமை, பயமின்மை, சாதுர்யம், நற்பண்பு, வியாபார, தொழில், படிப்பு அபிவிருத்திக்காக பெருமாளுக்கும் தாயாருக்கும் நெய்விளக்கு ஏற்றலாம்.
தல வரலாறு:
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து கிடைத்த அமிர்தம் எடுத்தனர். அசுரர்களை ஏமாற்றிய விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார். மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது. பார்வதிதேவியின் அருள் இல்லாததால் தான் இவ்வாறு மாற்றம் ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார். தனது மார்பில் அணிந்திருந்த திருவாபரணங்களை கழற்றி, அவற்றைப் பார்வதிதேவியாகக் கருதி பூஜித்தார். அப்போது அம்பாள் அபிராமி என்ற திருநாமத்துடன் அங்கு தோன்றி, அமிர்தம் கிடைக்க அருள்பாலித்தாள். அமிர்தத்தை தேவர்களுக்கு விஷ்ணு பங்கிட்டு கொடுத்தார். இதனை அறிந்த ஒரு அசுரன், தேவரைப் போல வடிவம் தாங்கி அமிர்தத்தை பருகினான். சாகாவரமும் தேவபலமும் பெற்றான். அவனை வெட்டினார் விஷ்ணு. அமிர்தம் பருகியதால் அவனுக்கு உயிர் போகவில்லை. துண்டான உடல்கள் ராகு, கேது என்ற பெயர் பெற்று, நவக்கிரக மண்டலத்தில் இணைந்தனர். அபிராமி அம்மையின் தோற்றத்திற்கும், தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க காரணமான விஷ்ணு திருக்கடையூரில் அமிர்த நாராயண பெருமாள் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவியும் உள்ளனர். அமிர்தவல்லித் தாயாரிடம் திருமணமாகாத பெண்கள் வேண்டிக்கொண்டால் சிறந்த மணமகன் அமைவார் என்பது நம்பிக்கை.