இங்கு விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, அகிலாண்டேஸ்வரி, நவகிரகங்கள், ஒரே சன்னதியில் ஐந்து லிங்கங்கள் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரவும், திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு கிடைக்க இங்குள்ள சிவபெருமானையும், அம்மனையும் வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பஞ்ச பாண்டவர்கள் ஒரு ஆண்டு இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வூரின் புராணப்பெயர் விராட ÷க்ஷத்திரத்தில் திருமலை சுவாமி சித்தர் வழிபட்டுள்ளார். ராமேஸ்வரம், கும்பகோணம்,காஞ்சிபுரம் நகரிலுள்ள கோயில்களில் உள்ள மணல்லிங்கங்களுக்குஅபிஷேகம் நடப்பதில்லை. ஆனால், இங்குதினமும் அபிஷேகம் நடந்து வருகிறது. எண்ணெய் காப்பு சாத்தும் முன் இந்த லிங்கத்தில், மணலில் சேர்ந்துள்ள காக்கா பொன் என்னும் துகள் ஜொலிப்பதைக் காணலாம். இந்த லிங்கத்தை இங்கு ஸ்தாபிதம் செய்யும் முன்பு, இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட அகஸ்தியர், இவ்வூரில்காசியில் இருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அது முடியாமல் போனதால், அமராவதி ஆற்றை கங்கையாக எண்ணி, இங்குள்ள மணலை பிடித்தே லிங்கம் வடித்தார். இதனால், தடையில்லாமல் விரைவில் செயல்களை முடிக்க இந்த அகஸ்தீஸ்வரரை வணங்குகின்றனர். குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் முடிவுக்குவரவும், தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கவும், படித்து முடித்ததும் தாமதமின்றி வேலை கிடைக்கவும், முன்னேற்ற திருப்பங்கள் ஏற்படவும் பூஜை செய்து வரலாம்.
பஞ்சலிங்க வழிபாடு: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்சபூதங்களையும் வணங்கும் வகையில் ஒரே சன்னதியில் ஐந்து லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை உயரத்தில் மாறுபட்டவை. சிவராத்திரி மற்றும் பிரதோஷ காலங்களில் பஞ்சலிங்கங்களை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளும் கிடைக்கும். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி அம்பிகை சன்னதியில், கன்னியர்கள் திருமணத்தடையை நீக்கவும்,திருமணமான பெண்கள் சுமங்கலி பாக்கியம் வேண்டியும் வழிபடுகின்றனர். அமராவதி ஆற்றில் குளித்து ஈரப்புடவையுடன் அம்பாளை பயபக்தியுடன் வணங்குவதை காணமுடிகிறது . அத்துடன் அம்பாள் சன்னதியிலோ, வீட்டிலோ திரிசதி 300 நாமாவளியை ஐந்து அல்லது ஒன்பது வெள்ளிக்கிழமை பூஜித்து வந்தால் திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு ஆகிய பலன்கள் கிடைக்கும்.
குறைதீர்க்கும் பெருமாள்: கோயில் வாசலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி எழுந்தருளியுள்ளார். பெருமாளை வணங்கிவிட்டு அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு உள்ளே செல்லும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெருமாள் மனக்குறையைத் தீர்த்து வைப்பவராக உள்ளார்.
தல வரலாறு:
கயிலாயத்தில் சிவபிரான், பார்வதிதேவியை திருமணம் செய்த போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லுமாறு, அகத்தியருக்கு சிவன் கட்டளையிட்டார். அங்கு செல்லும் வழியில், அகத்தியர் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அமராவதி ஆற்றங்கரைக்கு வந்த போது, மணலில் ஒரு லிங்கம் வடித்தார். அகஸ்தியர் வடித்த லிங்கம் என்பதால் சுவாமிக்கு அகஸ்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், லிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் வடிக்கப்பட்டது. இந்த ஊரே தற்போதைய தாராபுரம்.