நந்திகேஸ்வரர் கதை: இக்கோயிலில் சிவனை பார்த்தபடி கிழக்கு நோக்கி உள்ள நந்திக்கும் ஒருகதை உண்டு. அந்த நந்தியை பார்த்தால், எழுந்திருக்க போவது போல இருக்கும். தேவலோக தலைவனான இந்திரன் ஒருமுறை சிவனது கோபத்திற்கு ஆளானான். அதற்கு விமோசனமாக, நான் மேற்கு நோக்கி சுயம்புவாக இருக்கும் கோயிலில் நந்திகேஸ்வரரை பிரதிஷ்டை செய், என கூறினார். இந்திரனும் உலகின் முதல் சிற்பியான மயனை கொண்டு நந்தி சிலையை வடித்தான். சிற்ப சாஸ்திரங்களின்படி ஒருசிலை உயிரோட்டமாக எந்த குறையும் இல்லாமல் வடிக்கப்பட்டதால் அது உயிர்பெற்றது. எழுவதற்காக கால்களை துக்கியது. எனவே ஒரு உளியால் நந்தியின் முதுகில் கீறலை ஏற்படுத்தினார். அதன் பிறகே நந்தி அங்கே இருந்தது. மயன் அப்போது ஏற்படுத்திய கீறல் இன்றளவும் நுட்பமாக தெரிகிறது.
பரமகல்யாணி: இங்கு அமர்ந்துள்ள சிவனுக்கு சொந்த ஊர் சிவசைலம். அவரது துணைவி பரமகல்யாணிக்கு சொந்த ஊர் அருகில் உள்ள கீழ ஆம்பூர். இவளது விக்ரகம் இங்குள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது. தற்போது அந்த கிணறு அக்ரஹார தெருவில் உள்ளது. எனவே மனித திருமணங்களில் பெண் வீட்டார் மாப்பிளை வீட்டாருக்கு சீதனங்கள் தருவது போல, இன்றளவும் திருக்கல்யாணத்தன்று தங்கள் ஊர் பெண்ணுக்கு மக்கள் சீதனம் கொடுக்கின்றனர். இந்த பகுதியில் வசித்த அக்னிஹோத்ரி தம்பதிக்கு குழந்தை, இல்லை. அவர்களது வேண்டுதலுக்கு செவிசாய்த்த உமையவள், ஒரு கிணறு வெட்டுங்கள். அதில் கல்யாணியாக நான் கிடைப்பேன். அதனை எடுத்து பிரதிஷ்டை செய்யுங்கள், என கூறினாள்.
பெண்கள் இழுக்கும் தேர்: சிவசைலத்தில் முக்கியமானது பங்குனித்திருவிழா. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் கடைசிநாள் தேரோட்டம் நடக்கிறது. அதில் அம்பாள் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள்.
உரலில் மஞ்சள்: சிவன் சன்னதிக்கு அருகில் ஒரு உரலும் உலக்கையும் உள்ளன. திருமணம் ஆகாதவர்கள் அதில் போடப்பட்டிருக்கும் மஞ்சளை உலக்கையால் இடித்து அதில் கொஞ்சம் எடுத்து பூசிக்கொண்டால் திருமணம் நடக்கும் என்பதும் நம்பிக்கையாகும். இதற்காக மஞ்சள், உலக்கையுடன் கூடிய உரல் வைக்கப்பட்டுள்ளது. |