புரட்டாசி சனிக்கிழமை, அனுமன் ஜெயந்தி, ராமநவமி, அமாவாசை காலங்களிலும், அனைத்து சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
தல சிறப்பு:
மூலவர் பாலஆஞ்சநேயர் சன்னதிக்கு மேல் விமானத்திற்கு பதில் ஆஞ்சநேயர் வால் சுருட்டி அதன் மேல் அமர்ந்திருப்பது போன்று சுதை வடிவில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பால ஆஞ்சநேயர் திருக்கோயில், அரண்மனை வாசல். ராமநாதபுரம் - 623 501
போன்:
+91 99408 16093
பொது தகவல்:
ஆஞ்சநேயரே இங்கு பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் இல்லை.
பிரார்த்தனை
புத்திர பாக்கியம் கிடைக்க, பயம், மனக்குழப்பம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பக்தர்கள் தாங்கள் என்ன வேண்டினாலும் இந்த அனுமான் நிறைவேற்றித்தருவதாக கூறுகிறார்கள். தங்களின் நியாயமான வேண்டுதல் நிறைவேற வெண்ணெய் காப்பு சாற்றுதல், பட்டு சாற்றுதல், பழ அலங்காரம் செய்தல், வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி வழிபடுதல் என வேண்டிக்கொள்கிறார்கள். சனிப்பெயர்ச்சி காலங்களில் இவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷ பாதிப்பு குறையும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாற்றியும், அபிஷேகம் ஆராதனைகள் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
வாயு பகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் நன்மகனாய் தோன்றிய அனுமனின் பெருமை சொல்லிலும், ஏட்டிலும் அடங்காது. ராமபிரானுக்கு தன்னைத்தானே அடிமையாக்கிக் கொண்டு அளவிடற்கரிய பேராற்றல் பெற்றவர் ஆஞ்சநேயர். இத்தகைய ஆஞ்சநேயர் இங்கு சிறுவன் வடிவில் பாலஆஞ்சநேயராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வால்கோட்டை: ஆஞ்சநேயருக்கு அவரது வாலில் சக்தி அதிகம். இங்கு ராஜகோபுரமானது வால்கோட்டையாக அமைக்கப்பட்டுள்ளது. வால்கோட்டை கோபுரத்தினுள் ராமர் லட்சுமணர் சீதையுடனும் அவரை வணங்கும் வடிவில் பாலஆஞ்சநேயர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கயிறு பிரார்த்தனை: பக்தர்கள் தங்களது பயம் மற்றும் நோய் நீங்க இங்குள்ள பாலஆஞ்சநேயரை வணங்கி கையில் கயிறு கட்டி செல்கின்றனர். அவ்வாறு சென்றால் பயம் மற்றும் நோய் நீங்கி குணம் அடைவதாக கூறப்படுகிறது.
தல வரலாறு:
பல நுõறு ஆண்டுகளுக்கு முன் ஒரு மரத்தடியில் வைத்து பலஆஞ்சநேயரை வழிபட்டு வந்துள்ளனர். கி.பி. 1964 ஆம் ஆண்டு மிகப் பெரிய புயல் ஏற்பட்டது. அப்புயலில் மரமானது மற்றும் அப்பகுதியே முழுவதும் அழிந்துவிட்டது. இப்புயலில்தான் தனுசுகோடிஎன்ற ஒரு நகரமே அழிந்தது. இத்தகைய பெரிய புயலிலும் பாலஆஞ்சநேயர் எந்த சேதமும்மின்றி அப்படியே நின்றார். இந்த ஆஞ்சநேயர் மீது பக்திகொண்ட ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி மன்னர் பால ஆஞ்சநேயர்க்கு கோயிலை எழுப்பி கும்பாபிஷேகம் செய்து வழிப்பட்டார். தற்போது 2015 ஆம் ஆண்டிலும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று கம்பீரமாக பால ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் பாலஆஞ்சநேயர் சன்னதிக்கு மேல் விமானத்திற்கு பதில் ஆஞ்சநேயர் வால் சுருட்டி அதன் மேல் அமர்ந்திருப்பது போன்று சுதை வடிவில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.