சோமவார வழிபாடு, மாத சிவராத்திரி, பவுர்ணமி, திருவாதிரை, மகம், சதயம், ஆனித்திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி திருவெம்பாவை, தைப்பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், வருடத்தில் 6 நாட்கள் நடராஜர் அபிஷேகம்.
தல சிறப்பு:
சிவலிங்கத்திருமேனி (உமையொரு பாகர்). திருநீற்றம்மை-செம்பொற்சோதிநாதர். திசை : வடக்கு நோக்கிய சன்னதி. அம்மை சுவாமிக்கு வலப்புறம் திகழ்வதால் திருமணக்கோலம். சுவாமி குபேரதிசை பார்வை. இம்மையில் சகல செல்வயோகமிக்க பெருவாழ்வு அருளி மறுமையில் சிவானந்த கயிலை வாழ்வு நிலைபெறும்.
வடக்கு நோக்கிய சன்னதி, கருங்கல் திருப்பணி, மாடக்கோயில், தரைத்தளம், திருநாவுக்கரசர் திருமடம், தேவாசிரிய மண்டபம், சிமென்ட் திருப்பணி, தெற்கு திசை நோக்கிய திருச்சிற்றம்பலம் கோயில். நடராஜர், சிவகாமியம்மை, மாணிக்கவாசகர், ஐம்பொன் திருமேனி, யாளி அலங்கரிக்கும் ஐந்து படியுடன் கூடிய, யாளி தூண்களுடன் தாமரை விதானம் அமையப்பெற்ற கல் திருப்பணி. யாளி தூண்களில் விநாயகர், முருகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், ஆலமர் செல்வர், நில லிங்கம், நீர் லிங்கம், நெருப்பு லிங்கம், காற்று லிங்கம், ஆகாய லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆன்ம லிங்கம் என எட்டு லிங்க அமைப்பை உடையது. எண் திசை யானைகளை உடைய கருங்கல் திருப்பணி. கருவறை 24 அடி உயரமும், 9.6 9.6 அடி நீள அகலம். விமானம் 31 அடி உயரம் : செங்கல் திருப்பணி.
பிரார்த்தனை
அம்மை சுவாமியின் வலப்புறம் கோமுகமாக உள்ளதால் திருமணக்கோல காட்சி - திருமணம் கைகூடும். அம்மை திருநீற்றுவடிவாக உள்ளதால் இறைவனை வழிபட்டு திருநீறு பேணி அணிந்தவர் சிவம்-சக்தியாக மண்ணில் நல்ல வண்ணம் மங்கலமாக வாழ்வர். அம்மையில் வலப்புறம் விநாயகர் தோன்றி அருள்வதால், புத்திர சந்தானம் எனும் பிள்ளைப்பேறு உரிய காலத்தில் வாய்க்கும். சுவாமியின் இடப்புறம் வேல்கொண்ட முருகன் விளங்குவதால் எமபயம் நீங்கியும், எதிரிகள் நண்பர்களாகவும், சகல தோஷங்கள் நீங்கி நாளும் நலமுடனும், வளமுடனும் வாழலாம்.
சுவாமியின் மிக அருகில் நந்தி அமைந்துள்ளதால் இங்கு வந்து வழிபடுபவர்கள் தீய பழக்க வழக்கங்கள் நீங்கப்பெற்று நன்மனிதர்களாக வாழ்ந்து வளம்பெறுவர். சுவாமி சிறப்பாக குபேர திசையை நோக்குவதால் வழிபடுபவர்கள் குபேர சம்பத்தை அடைவர். இறைவனுக்கு பன்னிரு திருமுறைகள் விண்ணப்பம் செய்வதால் சிவனடியார்கள் இவ்வையகத்தில் நிலைபெற வாழ்ந்து இறைவனின் திருவடி எய்தி இன்புறுவர். இகபர சுகம் பெறுவர்.
நேர்த்திக்கடன்:
வழிபட்டு திருமணம் கைகூடியவர்கள் இந்த திருக்கோயிலிலேயே திருமணம் செய்கின்றனர். மேலும் பங்குனி உத்திரத்தில் சுவாமி திருக்கல்யாணத்திலும் பங்கேற்கின்றனர். வழிபட்டு பிள்ளைப்பேறு வாய்க்கப்பெற்றவர்கள் துலாபாரம் எனும் குழந்தையின் எடைக்கு எடை நாணயம் வழங்குகின்றனர். வழிபட்டு குடும்ப சிக்கல் நீங்கியவர்கள் சுமங்கலிகளுக்கு தானம் வழங்கியும், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்தும் மகிழ்கின்றனர். வழிபட்டு எதிரி, பகை நீங்கியவர்கள் சுவாமிக்கு மாத சிவராத்திரி வழிபாடு செய்கின்றனர்.
வழிபட்டு உருத்திராட்சம் அணிந்து தீய பழக்க வழக்கங்களை நீக்கியவர்கள் நாளும் இறைவனுக்கு அடிமை பூண்டு நன்னெறியில் வாழ்கின்றனர். வழிபட்டு நினைவாற்றலும், கல்வி வளமும், நல்ல மதிப்பெண்ணும் பெற்ற பள்ளி மாணவர்கள் குருவார வழிபாடாம் ஆலமர் செல்வர் விழா செய்கின்றனர். வழிபட்டு நோய் நீங்கியவர்கள் இறைவனுக்கு வில்வ அபிஷேகம் செய்கின்றனர். வழிபட்டு கடன் தொல்லை நீங்கியவர்கள், பொருளாதார உயர்வு அடைந்தவர்கள் சுவாமிக்கு சொர்ணாபிஷேகம் செய்கின்றனர். வழிபடும் அடியார்கள் அடியார் நடுவுள் இருக்கும் அருள்பெற்று என்றும் இன்பம் பெருகி புகழ் நிலை பெற வாழ்கின்றனர்.
மேற்கண்ட அனைவரும் தங்கள் பிறந்தநாள், பள்ளி சேர்ந்தநாள், தேர்வுநாள், திருமண நாள், பணி நியமன நாள், முன்னோர் நினைவு நாள், தேசிய நாள், தேசத்தலைவர்கள் நாள், பண்டிகை நாள், தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு நாள், இன்னபிற நாட்களில் கூழ்ச்சாலை கட்டளையில் 500 பேர் பசியாற்றுகின்றனர். (வடதிசை சிவாலயங்கள் : 1. குளித்தலை, கோயம்பேடு, நீலமங்கலம்). இன்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன் கரபாத்திர சுவாமிகளால் திருப்பணி செய்யப்பெற்று நாள் வழிபாடு, நாளும் அன்னதாமும் நடைபெற்ற தலம். பொதுமக்களால் சாமியார் மடம் என விளங்கி, அரசு பதிவேட்டிலும் சாமியார் மடம் என இடம் பெற்றது.
தலபெருமை:
சிவாலய அனைத்து வழிபாடுகளும் நடைபெறும். தினமும் 500 பேருக்கு கூழ் வழங்குதல். தினமும் சுவாமிக்கு கேழ்வரகு கூழ் படையல். பிரதி ஞாயிறு தோறும் 7 முதல் 15 வயதிலான குழந்தைகளுக்கு திருமுறை இசைப்பயிற்சி. பிரதி செவ்வாய்க்கிழமை குழந்தைகளுக்கு பரத நாட்டிய வகுப்பு. பிரதி ஞாயிறு பெரிய புராண சொற்பொழிவு. மூன்றாம் ஞாயிறு சைவப்பாட வகுப்பு. பிரதி சதயம் தோறும் திருநாவுக்கரசு குருபூஜை, அன்னதானம். திருவாசக முற்றோதல் கோயிலிலும் வேண்டுபவர் இல்லங்களிலும் நடைபெறுகிறது. ஆங்கில கடை ஞாயிறுதோறும் உழவாரத்திருப்பணி நடைபெறுகிறது.
திருக்கோயிலின் சார்பில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விரும்பி அழைக்கும் கோயில்களில் திருநெறி தீந்தமிழ் திருமுறை மந்திரங்களை ஓதி திருக்குட நன்னீராட்டு நடைபெறுகிறது. இப்பகுதிவாழ் மக்களின் விருப்பப்படி வாழ்வியல் சடங்குகள், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டுவிழா, திருமணம், மணிவயறு வாய்த்த(வளைகாப்பு) மங்கல வழிபாடு முதலியவையும், நீத்தார் இறுதி வழிபாடு, முன்னோர் நினைவுநாள் வழிபாடு, மங்களமரமாக வாழும் பொன்விழா, மணிவிழா, முத்துவிழா வழிபாடுகள் கோயில் சார்பில் நடைபெறுகிறது. சுவாமி திருக்கோயில் என்பதால் திருமணங்கள், மணமக்களின் கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் நடைபெறுகிறது. இத்திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு கண்ட பிரதி மார்கழி 28ம் நாள் தோறும் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகிறது.
தல வரலாறு:
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் சாமியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரின் உரிமையான நிலத்தில் சிவன்கோயில் அவர் ஏற்படுத்தியதா அல்லது பழமையானதா என்பது தெரிந்திலா. தினமும் கோயில் வழிபாடும், வருவோர்க்கு பசி நீக்கும் அன்னதானம் நடைபெற்றது. இப்பாதையில் வருபவர்கள் பசி நீங்கி இளைப்பு, களைப்பு நீங்கிச் செல்வர். இவரால் இவ்விடம் சாமியார்மடம் என விளங்கியது. ஒவ்வொரு நாளும் அன்னதானம் முடிந்ததும் ஊருக்குள் சென்று தனது கரங்களையே பாத்திரமாக பிச்சை வாங்கி தனது பசிக்கு உண்டதால் கரபாத்தி சுவாமிகள் என அழைக்கப்பெற்றவர். இப்பகுதிவாழ் மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு நோய், நொடி வந்தால் இங்கு வந்து இத்திருக்கோயில் மண்ணை எடுத்து கரபாத்திரம் என்று குழந்தைகளுக்கு பூச, நோய் நொடி நீங்கும்.
தங்கள் கால்நடைகளுக்கு நோய் கண்டால் இங்கு இருந்த ஆகாய கங்கை எனும் குளத்தில் (இன்று இந்த ஆகாயகங்கை எனும் குளம் நகரின் புறவழிச்சாலையாக்க அரசு எடுத்துக்கொண்டது) தற்போது பாதாள கங்கையாக உள்ளது. கரபாத்திர சுவாமிகள் வாழ்தலம் ஜீவசமாதி இங்கு உள்ளது. இவரின் வாரிசுகள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய வாரிசுகள் திருமிகு பிச்சப்பிள்ளை-புஷ்பா அம்மை குடும்பத்தின் இந்தக் கோயிலை (18 சென்ட் இடம்) திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்டத்திற்கு தானமாக கொடுத்துள்ளனர். கோயிலின் வழிபாடும், நிர்வாகமும் திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்ட அமைப்பாளரும், தலைவருமான மீளா அடிமை க.நாச்சியப்பன் பராமரித்து வருகிறார். இத்திருக்கோயிலில் சிவனடியார்கள் தாங்களே கருவறையில் வழிபாடு செய்யலாம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சிவலிங்கத்திருமேனி (உமையொரு பாகர்). திருநீற்றம்மை-செம்பொற்சோதிநாதர். திசை : வடக்கு நோக்கிய சன்னதி. அம்மை சுவாமிக்கு வலப்புறம் திகழ்வதால் திருமணக்கோலம். சுவாமி குபேரதிசை பார்வை. இம்மையில் சகல செல்வயோகமிக்க பெருவாழ்வு அருளி மறுமையில் சிவானந்த கயிலை வாழ்வு நிலைபெறும்.