-திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 83வது தலம்.
திருவிழா:
சித்திரை பிரமோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி.
தல சிறப்பு:
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிங்காரவேலர் வேல் வாங்கி வீராவேசத்துடன் வரும் சமயத்தில் அவர் திருமேனியில் வியர்வைத்துளிகள் உண்டாவதை சஷ்டி காலத்தில் பார்க்கலாம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 146 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில்,
சிக்கல்-611108. நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4365 - 245 452, 245 350.
பொது தகவல்:
இத்ததல விநாயகர், சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்புடைய மூர்த்திகளாக இருப்பதால் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது என்பர். கோயிலின் வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.
கோலமயில் வாகனன் புகழ்பாடும் கோயிலில் திருமால், கோவவாமனர் எனும் திருநாமத்தோடு எழிற்கோலம் விளங்க அருள்கோலம் பூண்டு தனி சன்னதி கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்.
பிரார்த்தனை
கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல இறைவன் வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
தலபெருமை:
கோலவாமனப்பெருமாள்: ஒரு முறை தேவர்கள், அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர். இதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் "கோலவாமனப்பெருமாள்' என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
சிறப்பு: அம்மனின் 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனி சிறப்பாகும். அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப் பெருமானுக்கு "திரி சதை' செய்து வேண்டிக் கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார். சிங்கார வேலனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு "சத்ரு சம்ஹார திரி சதை' அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.
அறுபடை வீடுகளில் குன்று தோறாடலும் ஒன்று. அவ்வகையில் இத்தலம் கட்டுமலை ஆதலின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதலாம் என்பர்.
தல வரலாறு:
விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டதாகவும், இதை அறிந்த சிவன், பசுவை புலியாக மாறும் படி சபித்ததாகவும் கூறப்படுகிறது. வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. மனமிறங்கிய சிவன்,""பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள இறைவனை பூஜித்தால் சாபம் விலகும்,''என்றார். சிவனின் அறிவுரைப்படி காமதேனு இத்தலம் வந்து குளம் அமைத்து நீராடிய போது, அதன் மடியில் இருந்த பால் பெருகி குளம் முழுவதும் பால் பொங்கியது. இதனால் இந்த குளம் பாற்குளம் ஆனது. தேங்கிய பாற்குளத்திலிருந்து வெண்ணெய் திரண்டது. சிவனின் ஆணைப்படி வசிட்டர் இத்தலம் வந்து, இந்த வெண்ணெய் மூலம் லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். இதனால் இத்தல இறைவன் "வெண்ணெய் நாதர்' ஆனார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் "சிக்கல்' என்றழைக்கப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது.
இங்குள்ள சிங்காரவேலர் , வேல் வாங்கி வீராவேசத்துடன் வரும் சமயத்தில் அவர் திருமேனியில் வியர்வைத்துளிகள் உண்டாவதை சஷ்டி காலத்தில் பார்க்கலாம்.