கிண்ணிமங்கலம் ஏகநாதர் சுவாமி ஜீவா சமாதியில் நித்தம் பூஜை நடைபெறுகிறது ஒவ்வொரு பிரதோஷ நன்னாளிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகிறது. சத்குருநாதர் ஜீவா சமாதி அடைந்த பெருநாளில் சிறப்பான விசேஷ அபிஷேக ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெறுகிறது. மாசி மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர சங்கடகர சதுர்த்தியில் கணபதிக்கும், கார்த்திகையில் சுப்ரமணியருக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஏகநாதர் சுவாமி திருக்கோயில்,
கிண்ணிமங்கலம்,
செக்கானூரணி,
மதுரை.
பொது தகவல்:
காவல் தெய்வமாக வீரபத்திரரும் பைரவரும் நின்று காத்து இரட்சிகின்றனர். கன்னி மூலையில் கணபதியும் வாயுமூலையில் வள்ளி தெய்வானை உடன் உறைய வண்ணமயில் மீதமர்ந்த வள்ளல் சுப்ரமணியரும் அருளாட்சி புரிந்துகொண்டுள்ளனர்.
தல வரலாறு:
நீண்டகாலத்திற்கு முன்னாள் அருளானந்த சற்குரு அவர்கள் தன் தவவழிமையால் அஷ்டமா சித்திகள் கைவரப்பெற்று தான் ஜீவ சமாதி அடைவதற்குரிய காலம் கனிந்துவர தான் சமாதிநிலை அடைவதற்கான யோகபூமியைத் தேர்தெடுக்கத் திருவுளம் கொண்டார். நாகமலையில் நாகதீர்தத்திற்கு அருகாமையில் தவம் செய்து வந்தார். அப்பொழுது அங்கு மாடு மேய்க்கவரும் சிறுவனிடம் தூரில்லாத காந்தக் கிண்ணியைக் கொடுத்து காராம்பசுவில் பால் கரந்துவருமாறு கூறியுள்ளார். வியப்படைந்த அச்சிறுவன் ஓட்டைக் கிண்ணியில் எப்படி சாமி பால் கரந்து வரமுடியுமெனக் கேட்டான். அதற்கு சுவாமிகள் போய் கரந்துபார் என்றார். சிறுவனோ தயக்கத்துடன் சென்று பாலைக்கரக்க அப்பால் ஒரு துளி கூட சிந்தாமல் கிண்ணி நிரம்பியது. ஆச்சரியம் அடைந்த சிறுவன் சுவாமி அவர்களிடம் பாலைக் கொடுத்து வணங்கினான். பின்னர் வீடு திரும்பிய அச்சிறுவன் அன்று நடந்த அதிசியத்தை ஊர்மக்களிடம் கூறினான். அது கேட்ட மக்கள் அனைவரும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர். இச்செய்தி காடுத்தீ போல சுற்றியுள்ள ஊர்களுக்கெல்லாம் பரவியது.
நாகமலையைச் சுற்றியுள்ள பல கிராமத்தினர் திரண்டு சென்று சுவாமி அவர்களை வணங்கி அருளாசி பெற்றனர். பின்னர் ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டனர். அவர்கள் வேண்டுகோலை ஏற்றுக் கொண்ட சுவாமிகள் தாம் எந்த இடத்திற்கு வரவேண்டுமென்பதை இந்த காந்தக் கிண்ணி தீர்மானிக்கும் எனக்கூறி சக்திவாய்ந்த இந்தக் காந்த கிண்ணியை இங்கிருந்து எறிகிறேன் அது எங்கு விழுகிறதோ அங்கு தான் நான் வந்து தங்கி அங்கேயே ஜீவசமாதி அடையவும் திருவுளங்கொண்டுள்ளேன் எனக்கூறினார். அதுகேட்டு அங்கிருந்த கிராமத்தினர்கள் எல்லாம் தத்தமது ஊருக்கு அந்தப் பேரு கிடைக்கவேண்டுமென மனமுருகி வேண்டினர். சுவாமிகள் அருள் நிறைந்த அந்த காந்தக் கிண்ணியை ஆனந்தமாக ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்தார். அந்தக் கிண்ணியோ மங்கலப்பட்டி என்று வழங்கப்பட்ட ஊருக்கு அருகில் வந்து விழுந்தது. விழுந்தவுடன் பலத்த சங்குநாதம் அவ்விடத்தில் இருந்து ஒழிக்க ஆரம்பித்தது. அங்கு கூடி இருந்த மக்கள் எல்லாம் சங்கொலியை நோக்கி ஓட ஆரம்பித்தனர். அங்கு கிண்ணியைக் கண்ட மக்கள் ஆனந்தத்தில் கூத்தாடினர். சுவாமி அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வந்தனர்.
கிண்ணி வந்து விழுந்ததால் அன்று முதல் அந்த இடம் கிண்ணிமங்கலம் என்ற திரு நாமத்தால் வழங்கப்படுகிறது. சுவாமிகள் அங்குள்ள குட்டிச் சுவரில் அமர்ந்து கொண்டு கூடி இருந்தவர்களுக்கெல்லாம் மண்ணை அல்லி அவரவர் விரும்பிய பதார்த்தங்களை தன் அஷ்டமாசித்தியால் வரவழைத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த மன்னன் தான் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு வழி இல்லாமல் கூட்டமாகக் கூடி நின்ற மக்களை பார்த்து வெகுண்டேழுந்தான். இதற்கு காரணமான சுவாமி அவர்களிடம் வந்த மன்னன், ஒரு குட்டி சுவரில் அமர்திருக்கும் சாமியாராகிய உனக்கு அவ்வளவு செருக்கா! நான் வருவது கூட உன் கண்களுக்குத் தெரியவில்லையா? எனக் கோபத்துடன் கேட்டான். அது கேட்ட சுவாமிகள் ஆனந்தப் புன்னகையுடன் தான் அமர்திருந்த குட்டிச் சுவரை தன் திருகரத்தால் தட்டினார் அவரது தவவலிமையால் குட்டி சுவரு கடிவேகக் குதிரையானது. இந்த அதிசயத்தைக் கண்ட மன்னன் ஆச்சரியமும் கோபமும் அடைந்தான். எங்கே உன் குதிரையையும் என் குதிரையையும் ஓடவிடுவோம் எந்த குதிரை ஜெயிக்கிறது என பார்ப்போம் என்றான். போட்டிக்கு ஒத்துக்கொண்டார் சுவாமிகள். இரு குதிரைகளையும் ஓடவிட்டனர். சுவாமி அவர்களின் குதிரையோ சற்று தூரம் ஓடுவதும் சற்று விண்ணில் பறப்பதும் பின்னர் தரையில் ஓடுவதுமாக அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.
தரையில் ஓடும் குதிரையைப் பார்த்திருக்கிறேன் விண்ணில் பறக்கும் அதிசயக் குதிரையை இங்கு தான் கண்டேன் என கூறி சுவாமி அவர்களின் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து வணங்கித் தான் அறியாமல் செய்த பிழையைப் பொருத்தருளுமாறு வேண்டி நின்றான். அருள்நிறை அமுதக்கடலான ஸ்வாமிகள் ஆனந்த புன்னகையுடன் தன் தவறை உணர்ந்த மன்னனை மன்னித்து அருளாசி வழங்கினார்கள். மன்னன் சுவாமி அவர்களிடம் பணிவுடன் தங்களுக்கு ஏதாவது திருப்பணி செய்யவிரும்புவதாகக் கூறி, சுவாமி அவர்களின் கட்டளையை வேண்டி நின்றான். சுவாமி அவர்கள் அவன் வேண்டுகோளை ஏற்று தான் ஜீவா சமாதி அடைய உள்ளதாகவும் அதற்கு அழகிய திருகோயிலை நிர்மானிக்கும் படி பணித்தார். மேலும் மடாலாயத்திற்கு மானியமாக தன் குதிரை கால் பதித்து வட்டமிட்ட நிலத்தினை வழங்குமாறும் கட்டளையிட்டார். சுவாமி அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்ட மன்னன் கோயில் திருப்பணிகளை ஆரம்பித்தான். ஸ்வாமிகள் மடாலயத்தின் அக்கினிமூலையில் அக்கினி தீர்த்தத்தை உருவாக்கினார்.
அங்கு மடாலய திருப்பணிக்கு வந்த சிற்பிகளில் ஒருவன் கண் பார்வையற்றவனாக இருந்தான். அவனை கண்ணுற்ற ஸ்வாமிகள் தான் உருவாகிய அக்கினி தீர்த்தத்தில் குளித்து வர பணித்தார். அவ்வாறே அந்த சிற்பியும் செய்ய கண் பார்வை பெற்று பேருவகை கொண்டான். காணொளி தந்த கருணை கடலுக்கு சிற்றுளியால் ஒளி வீசும் பல அழகிய சிற்பங்கள் நிறைந்த இந்த மடாலயத்தை அமைத்து கொடுத்தான். சுவாமிகள் ஜீவனை சிவனாக்கி அன்பே சிவமயமாய் அமர்ந்து அருள்பாலிக்க திருவுளம் கொண்டு கிண்ணிமங்கலம், சோழவந்தான், மதுரையில் காகாதோப்பு, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய ஐந்து ஊர்களில் மடாலயங்கள் நிறுவினார். தன் சீடர்களை அழைத்து வைகாசி மாதம் பூரம் நட்சத்திரமும் அட்டமி திதியும் கூடிய சுப தினத்தில் ஜீவா சமாதி அடையப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பணித்தார். அவ்வாறே குறித்த சுப தினத்தில் அருட்பெரும் ஜோதி தனிபெருங்கருணையான சுவாமிகள் ஜீவா ஜோதியாக ஜீவா சமாதி எய்தி ஒரே நேரத்தில் மேலே குறிப்பிட்ட ஐந்து ஊர்களிலும் உள்ள தன் அடியவர்களுக்கு அருள் காட்சியளித்து ஆட்கொண்டு அருளிகொண்டிருகின்றார். கருணாமூர்த்தி எம்பெருமான் ஏகநாதர் என்ற திருநாமத்துடன் அஷ்டதிக்கு பாலகர்கள் சுற்றிலும் அமர்திருக்க ஆனந்த வல்லியம்மையுடன் பேரானந்தமாய், அருளாந்தமாய் தன் அன்பர்களுக்கு அருளாரமுதை அள்ளி வழங்கிகொண்டுள்ளார்.
இருப்பிடம் : கிண்ணிமங்கலம்- மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் உள்ள செக்கானூரணியில் இருந்து 3 கி.மீ தொலைவில் திருமங்கலம் செல்லும் சாலையில் சிக்கம்பட்டியில் இருந்து பிரியும் கீழ்புறச் சாலையில் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.