மாதந்தோறும் பவுர்ணமியில், இங்கு நடைபெறும் திருவிளக்கு பூஜை. வைகாசி மாதத்தில் 16 நாள் நடைபெறும் திருவிழா.
தல சிறப்பு:
பொதுவாக சந்தோஷி மாதாவிற்கு வடஇந்தியாவில் தான் கோயில்கள் உண்டு. தென்னிந்தியாவில் சந்தோஷி மாதாவுக்கென வழிபாடுகள் மிகவும் குறைவு. விநாயகரின் புதல்வியான சந்தோஷி மாதாவுக்கு இத்தலத்தில் தனிச்சன்னதி இருப்பதும் இத்துடன் சித்ரகுப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில்
தவிட்டு சந்தை, மதுரை.
பொது தகவல்:
திரவுபதி அம்மன், சந்தோஷி மாதா, சனீஸ்வரர், குரு, வலம்புரி விநாயகர், ஸ்ரீபத்ரகாளி, ஸ்ரீமுத்தாலு முத்தர் சுவாமி, ஸ்ரீசத்யநாராயணா ஸ்வாமி, திருநங்கைகள் போற்றி வணங்கும் ஸ்ரீநல்லமுடி அரவான், காவல் தெய்வமான ஸ்ரீவீரபத்திரர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
பிரார்த்தனை
தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீசந்தோஷி மாதாவை வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சேர்க்காமல் விரதமிருந்து, ஸ்ரீசந்தோஷி மாதாவின் ஸ்துதியைப் பாடிப் பாராயணம் செய்து வழிபட பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்; சகல ஐஸ்வரியங்களும் பெற்றுச் சந்தோஷமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள். திருமணப் பாக்கியம் கிடைக்கவும், தீய சக்திகளால் பாதிக்கப்படாமல் இருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சித்ரகுப்தரை வழிபடுவது சிறப்பு.
நேர்த்திக்கடன்:
ராகு காலத்தில் அம்மனுக்கு உகந்த அரளிப் பூமாலை சார்த்தி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
வியாழக்கிழமை ஸ்ரீகுரு பகவானையும், வெள்ளிக் கிழமை ஸ்ரீதிரௌபதியம்மனையும், சனிக்கிழமை ஸ்ரீசனீஸ்வரரையும் என வாரத்தில் மூன்று நாட்கள் இங்கு வந்து, சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு பிரார்த்திப்பதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
தல வரலாறு:
கண்ணகி தனது கணவன் கோவலனை கொன்றதற்காக பாண்டிய மன்னன் மீதும், பாண்டிய நாட்டின் மீதும் கோபம் கொண்டு மதுரையை எரித்தாள். இனிவரும் காலங்களில் மதுரை எந்தவித பாதிப்பும் அடையாமல் இருக்க பாண்டிய நாட்டு மக்கள் பார்வதியை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பார்வதி அசரீரியாக, பஞ்ச பாண்டவர்களின் துணைவி திரவுபதி. பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் சக்தியாக இவள் கருதப்படுகிறாள். பஞ்சபூத சீற்றங்களினால் மதுரை நகரம் பாதிப்படையாமல் இருப்பதற்காக இவளுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள் என்று கூறியதாகவும் அதன் அடிப்படையில் இப்பகுதி மக்கள் திரவுபதிக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருவதாகவும் தல வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பொதுவாக சந்தோஷி மாதாவிற்கு வடஇந்தியாவில் தான் கோயில்கள் உண்டு. தென்னிந்தியாவில் சந்தோஷி மாதாவுக்கென வழிபாடுகள் மிகவும் குறைவு. விநாயகரின் புதல்வியான சந்தோஷி மாதாவுக்கு இத்தலத்தில் தனிச்சன்னதி இருப்பதும் இத்துடன் சித்ரகுப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் சிறப்பு.