இங்கு சிவன் சன்னதிக்கு எதிரேயுள்ள நந்தி சிலை, கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது தட்டும்போது வெண்கல ஓசை எழுகிறது
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு தர்மேஸ்வரசுவாமி திருக்கோயில்,
மணிமங்கலம் - 601 301.
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 44 - 2717 8157, 98400 24594
பொது தகவல்:
தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இது. சிவன் சன்னதி, அம்பாள் சன்னதிகள் தனித்தனி கோயில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது.
சதுர்வேத விநாயகர் , பைரவர், சனீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், அனுக்கை விநாயகர்,
சுந்தரர், நாவுக்கரசர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர்.
பிரார்த்தனை
தர்மம் தழைக்கவும், நீதி கிடைக்கவும் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறக்க அம்பிகை, சதுர்வேத விநயாகரை வழிபடுகிறார்கள்
நேர்த்திக்கடன்:
இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தலபெருமை:
கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அமைந்த சன்னதியில் சிவன், சதுர வடிவ ஆவுடையாருடன் காட்சி தருகிறார். இவ்வகையான விமானங்கள், தரையிலிருந்து சன்னதியுடன் சேர்த்துதான் கட்டப்படும். ஆனால், இக்கோயிலில் சன்னதியின் மேல் பகுதி மட்டும் கஜபிருஷ்ட அமைப்பில் (யானையின் பின்பகுதி போன்ற அமைப்பு) கட்டப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு சுவாமியிடம் வேண்டிக் கொள்ள, தர்மம் செய்யும் எண்ணம் உண்டாகும். அதர்மம் இழைக்கப்பட்டவர்கள் இவரை வழிபட, நீதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாத பவுர்ணமியன்று, இவருக்கு அன்னாபிஷேகம் செய்கின்றனர். மார்கழி திருவாதிரையன்று விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சிவராத்திரியன்று இரவில் 2008 தீபங்களை ஏற்றி வழிபடுகின்றனர்.
வேதங்களின் தலைவி: அம்பாள் வேதநாயகி தனிச்சன்னதியில், சதுர பீடத்தில் நின்றபடி இருக்கிறாள். இவள் வேதங்களின் இருப்பிடமாக இத்தலத்தில் அருளுகிறாள். எனவே இவள் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். பவுர்ணமிதோறும் இவள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். புரட்டாசி மாத பவுர்ணமியன்று இவளது சன்னதியில் "நிறைமணிக்காட்சி' வைபவம் நடக்கும். அப்போது தானியங்கள், பழம், காய்கறிகள், மலர் போன்றவற்றை சன்னதி முன்மண்டபத்தில் கட்டி அலங்கரிக்கின்றனர். இந்த தரிசனம் கண்டால், பசி, பட்டினி இருக்காது என்பது நம்பிக்கை. ஆடிப்பூரம், நவராத்திரி, ஆடி, தை வெள்ளி, சித்ராபவுர்ணமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது. கல்வியில் சிறக்க இவளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.
சதுர்வேத விநாயகர்: அரிதாக சில சிவன் கோயில்களில், ஒரே சன்னதியில் இரண்டு அல்லது மூன்று விநாயகர்கள் அடுத்தடுத்து இருப்பர். ஆனால் இவ்வூரில் ஒரே சன்னதியில் வரிசையாக நான்கு விநாயகர்களைத் தரிசிக்கலாம். ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும், இங்கு விநாயகரை வழிபட்டதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில், ஒரே சன்னதியில் நான்கு விநாயகர்கள், அடுத்தடுத்து காட்சி தருகின்றனர். நான்கு விநாயகருக்கும் பொதுவாக எதிரில் ஒரு யானை வாகனம் இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியன்று நான்கு விநாயகர்களுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.
கோயில் பிரகாரத்தில் பின்புறம் இரண்டு திசைகளிலும், இரண்டு விநாயகர்கள் இருக்கின்றனர். இதில் ஒருவருக்கு வெண்ணிற வஸ்திரம், மற்றொரு காவி நிறத்தில் வஸ்திரம் அணிவிப்பது சிறப்பு.
தல வரலாறு:
முற்காலத்தில் இப்பகுதியை பல்லவ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், தானதர்மங்கள் செய்வதில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக, சிவாலயம் எழுப்பி வழிபட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எவ்விடத்தில், எப்படி கோயில் அமைப்பது என அவனுக்குத் தெரியவில்லை.
ஒருசமயம் சிவன், அடியார் வேடத்தில் அவனிடம் சென்றார். தான் பரம ஏழை என்றும், தனக்கு ஏதாவது தர்மம் செய்யும்படியும் வேண்டி நின்றார். மன்னன், அவருக்கு தானம் செய்ய முயன்றான். அப்போது அவர், ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு ஒரு சிவன் கோயில் கட்டி தானமாக தரும்படி கேட்டார். மன்னன் வியந்து நின்றான். அப்போது, அடியாராக வந்த சிவன் சுயரூபம் காட்டியருளினார். மகிழ்ந்த மன்னன், சிவன் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் கோயில் எழுப்பினான். சுவாமிக்கு, "தர்மேஸ்வரர்' என்றே பெயர் சூட்டினான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு சிவன் சன்னதிக்கு எதிரேயுள்ள நந்தி சிலை, கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது தட்டும்போது வெண்கல ஓசை எழுகிறது.
இருப்பிடம் : சென்னை தாம்பரத்தில் இருந்து 9 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் 55 என், 55 எஸ், எம் 52 எச், எம் 80 ஆகிய வழித்தட பஸ்கள் இவ்வூர் வழியே செல்கிறது.
விநாயகர் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, கோயிலுக்கு எளிதில் சென்று விடலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
தாம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை மீனம்பாக்கம்
தங்கும் வசதி : சென்னை
தாஜ் கோரமண்டல் +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் +91-44-2811 0101 தி பார்க் +91-44-4214 4000 கன்னிமாரா +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ +91-44-4225 2525 அசோகா +91-44-2855 3413 குரு +91-44-2855 4060 காஞ்சி +91-44-2827 1100 ஷெரிமனி +91-44-2860 4401 அபிராமி +91-44-2819 4547 கிங்ஸ் +91-44-2819 1471