பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, ரதசப்தமி, புரட்டாசி சனிக்கிழமைகள்.
தல சிறப்பு:
இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனது மாமாவான திருமாலுக்கு மரியாதை தரும் விதமாக விநாயகர் நின்ற கோலத்தில் இருப்பதும், கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதம் வைத்திருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரது பீடத்தில் கருடாழ்வார் மண்டியிட்டு அமர்ந்து வணங்கியபடி இருக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில்,
தெற்குமாசி வீதி,
மதுரை- 625 001.
மதுரை மாவட்டம்
போன்:
+91- 452- 233 2138, 99421 19165.
பொது தகவல்:
அஞ்சலி ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், சுதர்சனர், பள்ளிகொண்ட பெருமாள், ரகுமாயி தாயாருடன் பாண்டுரங்கன், ராமர், நரசிம்மர் மற்றும் நடனகோபால நாயகி சுவாமி ஆகியோருக்கும் சன்னதிகள் இருக்கிறது.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் கிடைக்க, கிருஷ்ணருக்கு அவல், பாயசம் படைத்து வேண்டிக்கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெற, இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தலாம். லட்சுமி ஹயக்ரீவருக்கு வியாழக்கிழமைகளில் கற்கண்டு, பேரீச்சை படைத்து, துளசி, ஏலக்காய் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
நவநீதகிருஷ்ணர்: மூலஸ்தானத்தில் வெங்கடேசப் பெருமாள் இருக்கிறார். இவர் திருப்பதி பெருமாளின் அமைப்பில் காட்சி தருவது விசேஷம். முன்மண்டபத்தில் கிருஷ்ணருக்கு சன்னதி இருக்கிறது. இவர், நர்த்தன (நடனம்) கோலத்தில் காட்சி தருகிறார். இவர் ஆதியில் வழிபடப்பட்ட மூர்த்தி என்பதால், முதல் பூஜை இவருக்கே நடக்கிறது. "நவநீத கிருஷ்ணர்' உற்சவராக அருளுகிறார்.ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரத்தன்றும் இவர் தொட்டிலில் புறப்பாடாவது விசேஷம். இவருக்கு வெண்ணெய், அவல் பாயாசம், சுக்கு ஆகியவற்றை நைவேத்யமாக படைக்கின்றனர். அறிவாற்றல்மிக்க குழந்தை பிறக்க, துளசி மாலை அணிவித்து, அவல் பாயாசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.கிருஷ்ண ஜெயந்தியன்று மாலையில் கிருஷ்ணர் பிறக்கும் வைபவத்தை இத்தலத்தில் பாவனையாக நடத்துகின்றனர். மறுநாள் சுவாமி, தங்கதொட்டிலில் புறப்பாடாகி, உறியடி உற்ஸவம் காண்கிறார்.
மாற்றுத்திருக்கோலம்:ஆண்டாளுக்கு பிரகாரத்தில் சன்னதி இருக்கிறது. ஆடிப்பூரத்தன்று, சுவாமி ஆண்டாள் வேடத்திலும், ஆண்டாள் சுவாமி வேடத்திலும் பூப்பல்லக்கில் பவனி வருவர். இதனை, "மாற்றுத்திருக்கோல சேவை' என்கின்றனர்.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார். மாசி பவுர்ணமியன்று சுவாமி வைகைக்கு எழுந்தருளி கஜேந்திர மோட்சம் தரும் வைபவமும், அன்றிரவில் தசாவதார நிகழ்ச்சியும் நடக்கும். பங்குனி உத்திரத்தன்று சுவாமி, வைகைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார்.
சங்கு சக்கர விநாயகர்: கோயில் நுழைவு வாயிலில் மேற்கு நோக்கி, "வைஷ்ணவ விக்னேஷ்வர்' (விநாயகர்) சன்னதி இருக்கிறது. வியாசர், மகாபாரதத்தை சொன்னபோது, விநாயகர் தனது ஒரு தந்தத்தை உடைத்து அதை எழுதினார்.இதன் அடிப்படையில் கோயில்களில் விநாயகர், ஒரு தந்தம் ஒடிந்த நிலையில் காட்சி தருவார். ஆனால், இந்த விநாயகர் ஒடியாத இரண்டு தந்தங்களுடன் காட்சி தருகிறார். எனவே இவர், மகாபாரத காலத்திற்கும் முந்தைய மூர்த்தியாக கருதப் படுகிறார்.தனது மாமாவான திருமாலுக்கு மரியாதை தரும் விதமாக இவர், நின்ற கோலத்தில் இருப்பதும், கைகளில் சங்கு, கரம் மற்றும் கதாயுதம் வைத்திருப்பதும் வித்தியாசமான அமைப்பு.இவரது பீடத்தில் கருடாழ்வார் மண்டியிட்டு அமர்ந்து வணங்கியபடி இருக்கிறார்.லட்சுமி ஹயக்ரீவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.
தல வரலாறு:
பல்லாண்டுகளுக்கு முன்பு பெருமாள் பக்தர் ஒருவர், கிருஷ்ணனுக்கு சிலை வடித்து பூஜித்து வந்தார். குழந்தையாக கிருஷ்ணனை வணங்கி வந்த அவர், சுவாமியை பெரிய மூர்த்தியாக தரிசிக்க வேண்டுமென விரும்பினார். தன் விருப்பத்தை கிருஷ்ணரிடம் முறையிட்டு வேண்டினார்.அவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர், வைகையாற்றில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு பெரிய மூர்த்தியாக இருப்பதை உணர்த்தினார். பக்தர் அந்தச் சிலையைக் கண்டெடுத்து அவரை பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் இவரே மூலவராகி விட்டார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
இருப்பிடம் : மதுரை தெற்கு மாசி வீதியிலிருந்து பிரியும், தெற்கு கிருஷ்ணர் கோயில் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்று விடலாம். இக்கோயிலை தெற்கு கிருஷ்ணர் கோயில் என்றால்தான் தெரியும்.