Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சொக்கநாதர்
  அம்மன்/தாயார்: மீனாட்சி
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: சிவ தீர்த்தம்
  புராண பெயர்: கோவிச்சடையன்
  ஊர்: கோச்சடை
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை மாதம் - திருக்கல்யாண உற்சவம் - ஒருநாள் திருவிழா - மதுரை பெரியகோயிலான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யானம் நடப்பது போல் இங்கும் அதே நேரத்தில் திருக்கல்யாணம் நடப்பது மிகவும் முக்கியமான விழா ஆகும். ஏராளமான சுமங்கலிப் பெண்கள் கோயிலில் தரப்படும் புதுத்தாலியை அணிந்து கொள்வர். பிட்டுத்திருவிழா - ஆவணி மூல நட்சத்திரம் - இத்தலத்தின் பெருமைக்கு காரணமாக இருந்த விழா இது. மதுரையில் நடக்கும்போது இங்கும் அவ்விழா நடக்கும். ஒவ்வொரு மாதமும் பிரதோச தினத்தின்போது இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு இறைவனுக்கு அபிசேக அர்ச்சனைகள் செய்வர். தவிர வருடத்தின் முக்கிய பண்டிகை நாட்களான பொங்கல், தீபாவளி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண் வில்வ மரமும் பெண் வில்வமரமும் அருகருகே ஒருங்கே அதுவும் சுவாமிக்கு மிகவும் பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் மிக முக்கியச் சிறப்பு. மதுரைப் பகுதிகளில் உள்ள சிவதலங்களிலேயே சுமார் 4 அடி உயரமுள்ள பிரம்மாண்ட மூர்த்தி வீற்றிருக்கும் தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை, மதுரை- 625 016.  
   
போன்:
   
  +91 93645 09621 
    
 பொது தகவல்:
     
  மதுரை மாநகரில் உள்ள மிகப் பழமையான கோயிலில் இதுவும் ஒன்று இது பாண்டியர் கால புராதன கோயில் ஆகும்.

இத்தலத்தின் முன் உள்ள அம்மச்சியம்மன் கிராம தேவதை ஆவார். இவர் துர்க்கையின் அம்சம் உள்ளவர். சங்கு சக்கரதாரி, வடக்கு பார்த்த முகம் என்று மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் அருகில் உள்ள கோச்சடை முத்தையா சுவாமி கோயிலில் சுவாமி புறப்பாட்டின்போது இத்தலம் வந்து பொங்கல் வைத்து வழிபட்ட பின்புதான் அக்கோயிலுக்கு செல்வார்கள்.

இக்கோயிலின் மண்டபங்களை ஆராய்ச்சி செய்த தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் மிகவும் பழமையான காலத்தில் ஏற்பட்ட கோயில்தான் இது என்பதை உறுதி செய்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை வரம், கல்யாண வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறுகிறது.

குடும்ப ஐஸ்வர்யம் மற்றும் செல்வ செழிப்பு ஆகியவற்றுக்காக இங்கு பிரார்த்தனைக்காக பெரிய அளவில் வருகை தருகின்றனர்.

தொழில் முடக்கம், கடன் தொல்லை, பிணி பீடை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட பெருமாள் வீற்றிருக்கும் தலம் என்பதால் இங்கு சுவாமிக்கு நேர்த்திக்கடனாக புட்டு செய்து படைத்து வழிபடுகிறார்கள். சுவாமி அம்பாளுக்கு வேட்டி, புடவை சாத்துகிறார்கள். பொங்கல் வைத்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதம் தருகிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  வேறு எந்த சிவதலத்திலும் இல்லாத பெருமைவாய்ந்த இரு வில்வ மரங்கள் இத்தலத்தில் உள்ளது. ஆண் வில்வ மரமும் பெண் வில்வமரமும் அருகருகே ஒருங்கே அதுவும் சுவாமிக்கு மிகவும் பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் மிக முக்கியச் சிறப்பு.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் இங்குள்ள ஆண் மரத்தின் ஒரு இணுக்கில் மூன்று வில்வ இலைகள் இருக்கும். இன்னொரு மரமான பெண் வில்வ மரத்தில் ஒரே இணுக்கில் 7 வில்வ இலைகள் வரை இருப்பது அதிசயம். பொதுவாக அரசமரமும் வேப்ப மரமும் ஒருங்கே அமையப்பெற்ற இடத்தில் விநாயகர் இருப்பது சிறப்பு. ஆனால் இங்கோ தமது தந்தைக்கு மிகவும் உகந்த வில்வ மரத்தினடியில் அதுவும் ஆண்பெண் என இரு மரங்களும் ஒருங்கே அமைந்துள்ள இடத்தில் உள்ளது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் முக்கியமான புட்டுக்கு மண் சுமந்த படலம் இத்த தலத்தில் நிகழப்பெற்றதாக கூறப்படுகிறது. புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமாள் வீற்றிருக்கும் தலம்.  கோவிச்ச சடையான் என்ற இத்தல நாயகனே கோச்சடை என்ற பெயர் வரக்காரணமாக இருந்தவர். பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த சிவ தலம்.

சுமார் 300 வருடங்களுக்கு முன் பிருந்துதான் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் புட்டுத்திருவிழா நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பு இத்தலத்தில்தான் அந்த திருவிழா நடந்து வந்துள்ளதாக தெரிகிறது. மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்ததாக தெரியவருகிறது. பிட்டுக்கு மண் சுமந்த பிரம்படி பெற்ற  பெருமானே இத்தலத்தின் மூலவர்.

மதுரைப் பகுதிகளில் உள்ள சிவதலங்களிலேயே சுமார் 4 அடி உயரமுள்ள பிரம்மாண்ட மூர்த்தி வீற்றிருக்கும் தலம். மீனாம்பிகை அம்பாள் மதுரை மீனாட்சி போலவே அழகுற அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

அருகிலுள்ள திருவேடகம் தலத்து கதையான ஏடு ஏறிய படத்திலும் இந்த தலம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. வைகை ஆற்றில் உருவான சுயம்பு லிங்க மூர்த்தி என்றும் குறிப்பிடுகிறார்கள். மூர்த்தி தலம் தீர்த்தம் என சிறப்பு வாய்ந்த தலம். இத்தலத்தின் காவல் தெய்வமாக திகழ்கிறார் முனீசுவரர்.

கோவித்துக் கொண்டதால் கோவிச்ச சடையான் என்ற  பெயர் பெற்று பின்னர் அதுவே கோவிச்சடை என்றாகி பின்பு கோச்சடை என்ற பெயர் வந்தது. ரணதீர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது.  இக்கோயிலின் உள்ள பூஜைச் சாமான்கள் கிட்டதட்ட 100 வருடங்களுக்கு முந்தையதாக உள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  வைகையில் பெரும் வெள்ளம்  வருகிறது. வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்திரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் வைகை வெள்ளத்தை அடைக்க மண் சுமக்க வேண்டும் என்பதால் வந்தி எனும் வயதான பாட்டி தனக்கென ஆள்யாரும் இல்லையே என்று யோசிக்கும் வேளையில் சிவபெருமான் வாலிபப் பையன் வேடத்தில் வந்து வந்தியிடம் பாட்டி உனக்காக நான் மண் சுமந்து போடுகிறேன், எனக்கு புட்டு தருவாயா என கேட்கிறார்.

அதாவது நீ அவிக்கும் புட்டில் உதிர்ந்துள்ள புட்டெல்லாம் எனக்கு உதிராத புட்டெல்லாம் உனக்கு என்று கூற வந்தியும் ஒப்புக் கொள்கிறாள்.

வந்தி அவிக்கும் புட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே இருக்க அதையெல்லாம் இவரே சாப்பிட்டு விட்டு கரையை அடைக்க மண் சுமக்காமல் உண்ட மயக்கத்தில் அயர்ந்து தூங்கி விடுகிறார். அவ்வழியே வந்த மன்னன் கரையை அடைக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதால் கோபமடைந்து பிரம்பால் அடிக்கிறார்.

முதுகில் பிரம்படி வாங்கிய பெருமான் துள்ளி ஓடிச் சென்று ஒரு கூடையில் மண்ணை அள்ளிப் போட அதுவரை அடைக்க முடியாத  வெள்ளத்துக்கு அணை  போடப்பட்ட அதிசயத்தை அனைவரும் கண்டு வியக்கின்றனர்.

மேலும் அனைவரது முதுகிலும் பிரம்படி  தடம் இருப்பது தெரிய வருகிறது. வந்தது ஈசன்தான் என்பதை மன்னர் உட்பட அனைவரும் உணர்ந்து அவன் தாள் பணிந்து வணங்குகின்றனர். இந்த திருவிளையாடல் புராண வரலாறு நிகழ்ந்த தலம் தான் இது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar