இக்கோயிலில் பல விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும் "குழிமாற்று விழா' என்ற எங்குமே நடைபெறாத குழந்தைகளை உயிரோடு புதைக்கும் அதிசய நேர்த்திக் கடன் வழங்கும் விழாதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், அம்மனுக்கு "நேர்த்திக் கடனாக' குழந்தைகள் மற்றும் பெரியவர்களை உயிரோடு குழி தோண்டி புதைத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் உயிரோடு எடுக்கின்றனர்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழா கடந்த 400 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
தல சிறப்பு:
ஒரு வேண்டுதலின் மூலம் இந்தியாவையே தன் பக்கம் திரும்பச் செய்த முத்துக்குழி அம்மன் மிகப்பெரிய காவல் தெய்வம்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், அம்மனுக்கு "நேர்த்திக்கடனாக' குழந்தைகள் மற்றும் பெரியவர்களை உயிரோடு குழி தோண்டி புதைத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் உயிரோடு எடுக்கின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு முத்துக்குழி அம்மன் திருக்கோயில்,
பேரையூர்-
மதுரை மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
உயிரினங்களை பலி கொடுப்பதைக் கூட நம்மவர்களில் ஒரு பகுதியினர் விரும்புவதில்லை. தான் படைத்த உயிர்களை அம்பாள் பலியாகக் கேட்பாளா என்பதே இவர்களின் வாதம்.
அதுபோல முத்துக்குழி அம்மன் கோயிலில் காலம் காலமாக நடந்து வரும் இந்த வழிபாடு தொடர்வதும் அந்த தேவியின் கையில் தான் இருக்கிறது.
பிரார்த்தனை
முத்துக்குழி மாரியம்மன் கோயிலில் அம்மனை வணங்கினால், தீராத நோய்களும் தீருமென்றும், நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் நம்பிக்கை.
கடுமையான விரதம்: 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி அமாவாசையை அடுத்து வரும் இரண்டாவது புதன் கிழமையில் இவ்விழா நடக்கிறது. இதற்காக விழாவை நடத்துபவர்கள் ஆடி 1ம் தேதியில் இருந்து ஒரு மாத காலத்திற்கு காலில் செருப்பு அணியாமலும், பீடி, சிகரெட், மது குடிக்காமலும், சினிமா பார்க்காமலும் கடுமையான விரதம் இருக்க வேண்டும்.
குழந்தைகள் புதைப்பு: நேர்ந்து கொண்ட குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் அவர்களின் தாய்மாமன் வீடுகளுக்கு கொண்டு வரப்படுகின்றனர். அங்கே கோயில் பூஜாரிகள் கையில் மண்வெட்டியுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்கின்றனர். பின்னர் பூஜாரி குழந்தைகள் மீது மஞ்சள் நீரை தெளித்ததும் அவை மயக்க நிலைக்கு செல்லும் (அவ்வாறு மயக்க நிலையை அடையாதவர்கள் குழிமாற்று நேர்த்திக் கடனில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர்).
மயக்கமடைந்த குழந்தைகள் உடல் முழுவதும் ஈர மஞ்சள் துணியால் சுற்றப்பட்டு தாய்மாமன்களால் கோயிலுக்கு தூக்கிச் செல்லப்படுகின்றனர். கோயிலுக்கு முன்பு உள்ள இடத்தில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு 2 அடி ஆழமுள்ள குழியை மண்வெட்டியோடு வரும் பூசாரி தோண்டியவுடன் குழந்தையை அதில் இறக்கி மண்ணை போட்டு மூடி அதன் மேல் இலந்தை முட்களை பரப்புகின்றனர். 45 வினாடியில் இருந்து ஒன்றரை நிமிடங்கள் வரை குழந்தைகள் குழிகளுக்குள் இருக்கின்றனர். பின்பு பூஜாரி பூஜை செய்து "சைகை' செய்தவுடன் மண்ணை அகற்றி குழந்தைகளை வெளியே எடுக்கின்றனர். மயக்க நிலையில் இருக்கும் அவர்களின் மீது நீர் தெளித்து, விபூதி பூசியதும் சுய நினைவுக்கு வருகின்றனர். ஆண் குழந்தைகள் கூட பெண்ணாக "பாவிக்க'ப்பட்டுத் தான் புதைக்கப்படுகின்றனர். அப்போது அவர்களுக்கு கொலுசு, வளையல், கழுத்தில் நகை அணிவிக்கப்படுகிறது.
இந்த நேர்த்திக் கடனைச் செலுத்த ஆணாக இருந்தால் திருமணம் ஆகியிருக்கக் கூடாது என்றும், பெண்ணாக இருந்தால் "வயதுக்கு' வந்திருக்க கூடாது என்றும் விதிமுறைகள் உண்டு.
அம்மனின் சக்தி: கடந்த 400 ஆண்டுகளில் சுமார் 8 ஆயிரம் பேர் இவ்வாறு புதைக்கப்பட்டு நேர்த்திக் கடன் செய்யப்பட்டுள்ளதாகவும்,. இதுவரை எந்தக் குழந்தையின் உயிருக்கும் ஆபத்தோ எந்த விதமான அசம்பாவிதமோ ஏற்பட்டதில்லை. எல்லாமே அம்மனின் அருள்தான் என்றும் பொது மக்கள் கூறுகின்றனர்.
தல வரலாறு:
400 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது கோயில் அமைந்துள்ள இடத்தில் ஒரு மரம் மட்டுமே இருந்துள்ளது. அப்போது ஒரு பெண் குழந்தைக்கு "அம்மை' வந்தது. குழந்தையின் நோய் தீர அம்மனிடம் வேண்டிக் கொண்டனர். ஆனால் குழந்தை இறந்து போய் விட்டது.
அம்மன் குழந்தையை காப்பாற்றாமல் கைவிட்டு விட்டாளே என்ற கவலையுடன் குழந்தையை அம்மரத்தின் அடியில் புதைத்து விட்டு திரும்பினர். அப்போது ஒரு பெண்ணின் மேல் அம்மன் இறங்கி "அருள்' வந்து அவர், "என்னை நம்பியவர்களை நான் கைவிட மாட்டேன். குழந்தை இறக்கவில்லை. புதைத்த குழியைத் தோண்டி பாருங்கள்' எனக் கூற குழியைத் தோண்டி பார்த்த போது குழந்தை உயிரோடு இருந்ததாம். அன்றிலிருந்து இவ்வாறு புதைத்து நேர்த்திக் கடன் செலுத்தப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஒரு வேண்டுதலின் மூலம் இந்தியாவையே தன் பக்கம் திரும்பச் செய்த முத்துக்குழி அம்மன் மிகப்பெரிய காவல் தெய்வம்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், அம்மனுக்கு "நேர்த்திக்கடனாக' குழந்தைகள் மற்றும் பெரியவர்களை உயிரோடு குழி தோண்டி புதைத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் உயிரோடு எடுக்கின்றனர்.
இருப்பிடம் : மதுரை- டி.கல்லுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் டி.கல்லுப்பட்டியில் பிரிவில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பேரையூர் கிராமத்தில் முத்துக்குழி மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ளது.