கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி பல்லவ மன்னர்களின் கலை நயத்தைச் சொல்லும் வண்ணம் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்பவர்மன் எனும் மன்னனால் இது கட்டப்பட்டது. நந்தி மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, மிகப்பெரிய விமானங்களுடன் கலை நுட்பங்களும், அழகிய தூண்களும் மணி மண்டபமும் கொண்டு மிகப்பெரிய கோயிலாக இது விளங்கி வருகிறது.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடிய விடிய தீபம் துலங்குவதற்கு மூன்று பெரிய நந்தா விளக்குகளை வழங்கினான் கம்பவர்மன். இந்த தீபங்கள் தடை இல்லாமல் ஏற்ற வேண்டும் என்பதற்காக பொன்னும், பொருளும், நிலமும் அளித்தான்.
தல வரலாறு:
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பிரதேசத்தை ஆண்ட பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த ஊத்துக்காடு புகழ்பெற்ற ஒரு கோட்டமாக பெரும் சிறப்புடன் விளங்கி வந்தது. தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளைப் பதினெட்டுக் கோட்டங்களாகப் பிரித்து ஆட்சி செலுத்தினார்கள். அதில் ஊத்துக்காடும் ஒன்று என்கிறது கல்வெட்டுத் தகவல். ஒரு சமயம் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் இங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவனின் கையில் ஏதோ வழுவழுப்பான ஒன்று தென்பட்டது. உடனே தன் கையிலிருந்த குச்சியைக் கொண்டு தோண்டுகையில் ஒரு அழகான பாணலிங்கம் இருப்பதைக் கண்டான். இதை கவனித்த மற்ற சிறுவர்கள் அனைவரும் இது நம் முன்னோர்கள் வழிபட்ட கோயில் என்பதை உணர்ந்து நமசிவாய என கோஷமிட்டனர். பின் ஊருக்குள் சென்று நடந்ததை அனைத்தையும் ஊர் பெரியவர்களிடம் கூறி அவர்களை அழைத்து வந்தனர். பின் ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தினர்.அழகான மகா மண்டபம், பிரகாரம், ஓரிரு கல்வெட்டுகள், ஈசனின் லிங்கத் திருமேனி, நந்தி, பைரவர் சிலைகளை கண்டெடுத்தார்கள். தீபம் ஏற்றி சிவனுக்கு வஸ்திரம் அணிவித்தார்கள். இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை ஆகி இருந்த சிவலிங்கத் திருமேனியின் நாமம் என்ன என்பது எவருக்கும் தெரியாததால் அங்குள்ள பெரியவரிடம் நடந்ததைக் கூறினார்கள். இத்தனை நாள் மண்ணுக்குள் புதைந்து இருந்த சிவனை மகாலிங்கேஸ்வரர் எனவும், அம்மனை பெரியநாயகி எனவும் அழைக்குமாறு கூறியுள்ளார். அதன்படியே திருநாமம் வைத்து திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள சிவபெருமான் பாணலிங்க வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.
இருப்பிடம் : சென்னை தாம்பரத்தில் இருந்து படப்பை வழியாகக் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் ஓரகடம் கூட் ரோட்டுக்கும், வாலாஜாபாத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது. படப்பையிலிருந்து 20 கி.மீ., வாலாஜாபாத்தில் இருந்து 5 கி.மீ., ஓரகடம் கூட் ரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ., காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி : காஞ்சிபுரம் ஹோட்டல் தமிழ்நாடு போன்: +91-44-2722 2554, 2722 2553 பாபு சூரியா போன்: +91-44-2722 2555 ஜெயபாலா போன்: +91-44-2722 4348 ஹெரிடேஜ் போன்: +91-44-2722 7780 எம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023 ஜி. ஆர். டி. போன்: +91-44-2722 5250.