பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மகாமண்பத்தின் வாயிலின் இடதுபுறம் பிரம்மா சிவபெருமானை பூஜிக்கும் காட்சி புடைப்புச் சிறப் வடிவில் உள்ளது. இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் பிள்ளையார், பாலமுருகன், கஜலட்சுமி சன்னதிகளும், வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னதியும் உள்ளன. மண்டபத்தின் இடதுபுறம் வேணுகோபால பெருமாள், ருக்மணி, சத்யபாமா, கருடாழ்வார் ஆகியோர் அருள்பாலிக்கும் தனிச் சன்னதி உள்ளது. வலது புறம் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
பிரார்த்தனை
பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி இங்குள்ள பாலமுருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ஆலய முகப்பைக் கடந்ததும் சிறப்பு மண்டபமும், அதை அடுத்து மகா மண்டபமும், உள்ளன. மகா மண்டபத்தின் இடதுபுறம் ஆபத்துக் காத்த விநாயகர் அருள்பாலிக்கிறார். வழக்கமான விநாயகர் திருமேனிகளை விட சற்றே அளவில் பெரியதாகவும், அகன்ற மேனியுடனும் அருள்பாலிக்கிறார். ஆனைமுகன் எத்தகைய ஆபத்தாக இருந்தாலும், அதிலிருந்து தனது பக்தர்களைக் காத்து அருள் புரியக்கூடியவர். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பிரம்மாவின் கர்வத்தைப் போக்கியவர் இவர். மகா மண்டபத்தின் இடதுபுறம், பெருமாளின் தனி சன்னதி உள்ளது. சிவாலயத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருப்பது அரிது. சைவ வைணவ நல் இணக்கத்திற்கு எடுத்துக்காட்டு இது. பெருமாள் வேணுகோபாலராக ருக்மணி சத்யபாமாவுடன் சேவை சாதிக்கிறார். இவரை தரிசித்தால் வாழ்வில் மங்களங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. எதிரே கருடாழ்வாரின் திருமேனி உள்ளது. அன்னை இட்சுரச நாயகிக்கு தனிக் கோயில் உள்ளது. கரும்புச் சாறு போன்று பக்தர்களுக்கு இன் அருளையும் இனிய வாழ்வையும் அளிப்பவள் என்பதால் அன்னைக்கு இப்பெயர். (இட்சு என்றால் சமஸ்கிருதத்தில் கரும்பு, ரசம் என்றால் சாறு.) அன்னை நின்ற திருக்கோலத்தில் கீழ்த் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் உள்ளது பால முருகனின் சன்னதி. குமாரவயலூரில் உள்ளது போலவே இங்கும் தன் தந்தையை முன் நிறுத்தி, பின்னே நின்று அருள்பாலிக்கிறான் பாலமுருகன்.
அன்னையின் சன்னதி அருகிலேயே இருப்பதால், அவளது நேரடி கண்காணிப்பில் பாலமுருகன் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு. குழந்தையாய் இருந்தபோது முருகன் வளர்ந்த தலமாம். இத்தலத்தில்தான் அன்னை பார்வதி தேவி குழந்தை பாலமுருகனை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டுப் பாடி, தூங்க வைத்தாளாம். பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், இந்த ஊர் மக்களிடையே ஓர் வினோதமான பழக்கம் ஒன்று உள்ளது. பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை. முருகன் தொட்டிலில் வளர்ந்த தலமானதால் இந்த ஊர் வளர்தொட்டி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டதாம். அது மருவி விளத்தொட்டி என்று தற்போது அழைக்கப்படுகிறது. பாலமுருகன், குழந்தையாக மட்டுமல்லாமல் காவல் தெய்வமாகவும் திகழ்கிறான்.
தல வரலாறு:
ஆரம்பத்தில் ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா, சிவனைப்போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். படிப்படியாக அதுவே தலைக்கனமாக மாறிவிட, தன்னைவிட உயர்ந்தவர் எந்த உலகிலும் எவருமில்லை என்ற கர்வத்தோடு, தான்தோன்றித் தனமாகத் திரிந்தார். அவரது அகந்தை அளவுமீறிப் போகவே ஒரு கட்டத்தில் சினந்த சிவபெருமான், பிரம்மாவின் தலைகளுள் ஒன்றைக் கொய்தார். அதோடு அவருடைய படைப்பாற்றலையும் பறித்தார். தலைபோனதும் தலைக்கனமும் போய்விட, தன் தவறை உணர்ந்தார், பிரம்மா. மன்னிக்கும்படி வேண்டி, சிவபெருமான் அருள்பாலிக்கும் பல தலங்களுக்குச் சென்று ஆராதித்தார். இவ்வாறு பிரம்மா பூஜித்த இடங்களிலெல்லாம் உள்ள சிவபெருமான், பிரம்ம புரீஸ்வரர் என்று அழைக்கப்படலானார். அந்த வகையில் நான்முகன் சிவபூஜை புரிந்த தலங்களுள் விளத்தொட்டியும் ஒன்று. அதுவே இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படக் காரணமானது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை.
இருப்பிடம் : சீர்காழி - பந்தநல்லூர் பேருந்து தடத்தில், பந்தநல்லூரிலிருந்து 5கி.மீ. தொலைவில் உள்ளது விளத்தொட்டி என்ற இந்த தலம். மயிலாடுதுறை, மணல் மேடு, பந்தநல்லூர், திருப்பனந்தாள், கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிற்றம்பலம் வர நிறைய பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து விளத்தொட்டி செல்ல மினி பஸ் வசதி உள்ளது.