கிடைக்காத (எட்டாத)தையும் கிடைக்க வைக்கும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இத்தல இறைவன் எட்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு எழிலார்குழலி உடனுறை எட்டீஸ்வரர் திருக்கோயில், பையனூர், செங்கல்பட்டு வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91 99415 34893
பொது தகவல்:
நந்திதேவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, காலபைரவர், சரபேஸ்வரர், சைவ நால்வர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், எழிலார் குழலிஅம்மன், சித்தர் இடைக்காடர் போன்ற பல சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
வழக்கு விவகாரங்களில் நீதி கிடைக்காமல் திண்டாடுவோரும், சகல செல்வங்கள் கிடைக்கவும் இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமி எட்டீஸ்வரருக்கும், அன்னை எழிலார் குழலிக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சோழ மண்டலத்தில் இன்று காணும் திசை எல்லாம் திருக்கோயில்கள் தரிசனம் தருகின்றன என்றால், அதற்குக் காரணம் அந்தப் பகுதியை ஆண்ட சோழப் பேரரசர்களின் அபரிமிதமான இறை பக்தியே காரணம் எனலாம். தங்களது ஆட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் சைவம் - வைணவம் என்கிற பேதம் இல்லாமல் திருக்கோயில்களைக் கட்டி வழிபாட்டைப் பெருக்கினர் சோழர்கள். அதுபோல் காஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு பல்லவ தேசத்தை ஆண்ட பல்லவ மன்னர்களும் தங்கள் காலத்தில் சென்னை, காஞ்சி ஆகிய பகுதிகளைச் சுற்றி ஏராளமான திருக்கோயில்களைக் கட்டினர். குடிமக்களிடையே பக்தி பெருகவும், நாடு வளம் பெறவும் ஆலய வழிபாடுகளைத் தடை இல்லாமல் நடத்தி வந்தார்கள். தங்கள் காலத்துக்குப் பிறகும் பூஜைகள் நிரந்தரமாக நடப்பதற்கு எண்ணற்ற நிலங்களையும் ஏற்படுத்தி விட்டுப் போனார்கள் பல்லவர்கள்.
பல்லவ மன்னர்கள் கட்டிச் சிறப்பித்த பல கோயில்களுள் ஒன்றுதான் பையனூர் ஸ்ரீஎட்டீஸ்வரர் ஆலயம். கருங்கல் கொண்டு கட்டப்பட்ட இந்த அற்புதமான திருக்கோயில், காலத்தின் கோலத்தால் உருக்குலைந்து சின்னாபின்னமாகிப் போனது. சைவம் - வைணவம் இரண்டும் ஒற்றுமையாக இருந்து வந்துள்ள கிராமம் பையனூர். இதை நிரூபிக்கும் வகையில் எட்டீஸ்வரர் சிவாலயமும், அருளாளப் பெருமாள் வைணவ ஆலயமும் ஊரில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இரண்டு ஆலயங்களுக்கும் நடுவே ஒரு திருக்குளம் காணப்படுகிறது. பைரவர் குளம் என்பது பெயர். விஜய நந்தி விக்கிரமப் பல்லவனால் கி.பி. 773 - ஆம் ஆண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கல்வெட்டுத் தகவல். முழுக்க முழுக்கக் கருங்கல்லைக் கொண்டே கட்டப்பட்ட அருமையான கற்றளி கோயிலாக அந்தக் காலத்தில் இருந்து வந்துள்ளது. மிகவும் விஸ்தாரமான நிலப்பரப்பில் ஆலயம் சகல வசதிகளோடும் இருந்திருக்கிறது. மூலவரான ஸ்ரீஎட்டீஸ்வரர் கருவறை கஜ பிருஷ்ட அமைப்பில் ஆனது. கி.பி. 768 - ல் விஜய நந்தி விக்கிரமப் பல்லவனின் ஆட்சிக் காலத்திய கல்வெட்டு ஒன்று பையனூர் ஆலய இறைவனார் பெயர் ஸ்ரீஎட்டீஸ்வரர் என்று குறிப்பிடுகிறது. சற்றே காலத்தால் மாறுபட்ட இன்னொரு கல்வெட்டு இறையனார் பெயர் பையனூர் எட்டீஸ்வரமுடைய நாயனார் என்று குறிப்பிடுகிறது. பைனூரின் பெயர் இராஜசேரி சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது.
முதலாம் குலோத்துங்கனின் சிற்றரசனான கங்கரையன் என்பவன் பையனூர் ஆலயத்துக்குச் சொந்தமான ஒரு நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றை கி.பி. 1098-ல் தீர்த்து வைத்துள்ளதாக ஒரு கல்வெட்டு மகிமைகளை சொல்கிறது. அதோடு, இந்த ஈசனின் தானங்களையும் இந்த ஆலயத்துக்கு அளித்துள்ளானாம்.
தல வரலாறு:
பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரம் (மாமல்லபுரம்), வியாபாரத் தலைநகராக இருந்தது. ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி. 773) மகாபலிபுரத்தில் வசித்து வந்தவன் நாகன் எனும் எட்டீஸ்வரரின் பக்தன். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி செய்து. ஆலயத்துக்குச் சேர வேண்டியதை அங்கு சேர்த்து விட்டு, தங்களுக்கு உரிய கூலியை ஊர் சபையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். பையனூரில் உள்ள பெரிய ஏரியை நாகனே தூர் வாரி சுத்தம் செய்ததாகவும் ஒரு செய்தி உண்டு.
விளைச்சலைப் பெற்றுக் கொள்ளும் ஊர் சபையின் உறுப்பினர்கள் சிலர், நாகனுக்கான கூலியைக் கொடுக்கும்போது மட்டும், அவனை வெறுங்கையோடு அனுப்பினர். அதாவது, உனக்கெல்லாம் கூலி எதுவும் இல்லை என்பது போல் அவனிடம் அலட்சியமாகப் பேசி விரட்டி விடுவார்களாம். கூலி இருந்தால்தானே வீட்டில் அடுப்பு எரியும்? அன்றாடப் பொழுது நல்லபடியாகப் போகும்? வேலையும் செய்து விட்டு, அதற்குரிய பலன் இல்லா விட்டால் என்ன பயன்? பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாகன், அந்த எட்டீஸ்வரரிடமே தன் குறையைக் கொட்டினான். அவரது சன்னதிக்கு முன்னால் நின்று கண்ணீர் மல்கத் தன் குறையைச் சொன்னான். பிறகு வீடு திரும்பினான். அடுத்த நாள் எட்டீஸ்வரர் ஆலயத்தின் முன்னால் எல்லோருக்கும் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. வழக்கம்போல் நாகனின் முறை வரும்போது அவனிடம், உனக்கெல்லாம் கூலி கிடையாது. போ போ என்றனர் ஊர் சபை உறுப்பினர்கள் சிலர். நாகன் மிகவும் நொந்து போனான். பிறகு கோபம் வந்தவனாக, எனக்குரிய கூலியைத் தர மறுப்பது தர்மத்தை மீறும் செயலாகும். இதற்குரிய தண்டனையை என்றேனும் ஒரு நாள் நீங்கள் அனைவரும் அனுபவிக்கத்தான் போகிறீர்கள்என்றான்.நாகன் சொல்வதை ஊர் சபையினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வில்லை, சரிதான் போப்பா என்று அலட்சியமாகச் சொல்லி விட்டு, அடுத்த ஆளுக்குக்கூலியை அளிக்க முற்பட்டனர். அப்போது நாகன் சிவாலயத்தின் முன் வந்து நின்று ஈசனிடம் இந்த முறைகேடு பற்றி மீண்டும் முறையிட்டான். அதற்குள் ஊர் சபை கலைய ஆரம்பித்தது. அப்போது அனைவரும் கேட்கும்படியாக, அனைவரும் நில்லுங்கள் அப்படியே என்றொரு குரல் அதிகாரமாகக் கேட்டது. வீட்டுக்குச் செல்ல முற்பட்டவர்கள் துணுக்குற்றுக் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்கள். எவரும் இல்லை. யார்... எவனர் நம்மை அதிகாரத்தோடு அழைத்தது? என்று ஒருவருக்கொருவர் பயம் கலந்த முகந்துடன் விசாரித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒலித்தது அந்த அசரீரி.
நாகனுக்கு உரிய கூலியைக் கொடுங்கள். அப்படி மறுத்தால், இது சம்பந்தப்பட்ட அனைவரையும் தீவினைகள் துரத்தும். குடும்பத்தில் நிம்மதியை இழப்பீர்கள். நோயினால் அவஸ்தைப்படுவீர்கள் என்றெல்லாம் அந்த அசரீரி சொன்னது. பிறகு குரல் வந்த திசையில் பிரகாசமான ஒரு ஜோதி தோன்றி,அது மெள்ள மெள்ள நகர்ந்து ஸ்ரீஎட்டீஸ்வரரின் கருவறைக்குள் போய் மறைந்தது. இதன் பின்னால்தான் இது எட்டீஸ்வரரின் எச்சரிக்கை என்பதை ஊர் சபையினர் உணர்ந்தார்கள். அதன் பின், இறைவனின் சந்நிதிக்குப் போய் மன்னிப்புக் கேட்டதோடு, நாகனிடமும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அவனுக்குச் சேர வேண்டிய கூலியை மொத்தமாகக் கொடுத்தனர். இனிமேலும் இது போல் எதுவும் நிகழாது. எங்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேண்டாம் என்று இறைவனிடம் சொல் என்று நாகனிடம் கெஞ்சலாக வேண்டிக் கொண்டனர். நாகனும் அவர்களை மன்னித்து, இறைவனுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கிடைக்காத (எட்டாத)தையும் கிடைக்க வைக்கும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இத்தல இறைவன் எட்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.
இருப்பிடம் : சென்னையின் தெற்கே 52 கி.மீ. தொலைவு. சென்னை - மகாபலிபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்) திருப்போரூருக்கு தெற்கே 8 கி.மீ. தொலைவு. மகாபலிபுரத்துக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவு. செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 22 கி.மீ. தொலைவு. சென்னை, செங்கல்பட்டு, மகாபலிபுரம் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு. சென்னையில் கோயம்பேடு, தாம்பரம்,பிராட்வேயில் இருந்து பையனூர் வழியாகச் செல்லும் பேருந்துகளில் சென்று ரைஸ்மில் பஸ் ஸ்டாப் என்று இறங்க வேண்டும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி : சென்னை
தாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101 தி பார்க் போன்: +91-44-4214 4000 கன்னிமாரா போன்: +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525 அசோகா போன்: +91-44-2855 3413 குரு போன்: +91-44-2855 4060 காஞ்சி போன்: +91-44-2827 1100 ஷெரிமனி போன்: +91-44-2860 4401, 2860 4403 அபிராமி போன்: +91-44-2819 4547, 2819 2784 கிங்ஸ் போன்: +91-44-2819 1471 சன் பார்க் போன்: +91-44-4263 2060, 4264 2060.