இங்கு பிரம்மோற்ஸவம் பங்குனி பவுர்ணமிக்கு முந்தைய சதுர்த்தசி நாளில் துவங்குகிறது. கிருஷ்ணரின் மகன் பிரத்யும்னன், தனது பிறந்தநாளை ஒரு வாரம் கொண்டாட வேண்டுமென வேண்டிக் கொண்டான். அதன்படி இந்த விழாவை நடத்துகின்றனர். தற்போது 11 நாட்கள் விழா நடக்கிறது. திருப்பதியை போல தினமும் வாகனசேவை உண்டு.
தல சிறப்பு:
பித்தளை வாயுடன் கூடிய நரசிம்மருக்கு பானகத்தை நைவேத்தியமாக அருளுவது இத்தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
மலைக்கோயில்: காலை 6- மதியம் 2மணி. (மதியத்திற்கு மேல் இங்கு தேவர்கள் பூஜை செய்வதாக ஐதீகம்)
முகவரி:
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்.
மங்களகிரி மலை, விஜயவாடா, ஆந்திர மாநிலம்
போன்:
+91 08645- 232 945 08645- 233 174
பொது தகவல்:
ஆஞ்சநேயரின் வழிகாட்டுதலின்படி, ராமபிரான் பூலோக சொர்க்கமான இந்த மலைக்கு வருகை தந்துள்ளார். கோயிலின் பின்புறம் லட்சுமி தாயாருக்கு சன்னதி உள்ளது. நரசிம்மர் சன்னதிக்கு வெளியே குகை ஒன்றின் வாசல் இருக்கிறது. இதனுள் விஷ்ணு சிலை இருக்கிறது. இந்தக் குகை ஒன்பது கி.மீ., தூரம் உடையது. உண்டவல்லி என்னும் இடத்திலுள்ள 25 அடி நீள ரங்கநாதர் சிலையை இந்த குகைப்பாதை சென்றடைகிறது. பாதுகாப்பு கருதி குகையின் வாசலை மூடிவிட்டனர். முற்காலத்தில், இந்த குகைக்குள் தபஸ்விகளும், புத்தமத துறவிகளும் வாழ்ந்ததற்கு ஆதாரம் உள்ளது.
செல்லும் பாதை: மலைக்கோயிலுக்குச் செல்ல மங்களகிரி அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு இருக்கிறது. பக்தர்களின் வருகை அதிகமாகவே, மலைக்கே கார், ஆட்டோ செல்லும் வகையில், 2004ம் ஆண்டில் ஒரு கி.மீ., தூரத்துக்கு ரோடு போடப்பட்டது. மலை உச்சியில் காந்தாலயம் என்ற கோயில் உள்ளது. இங்கு சிற்பங்கள் ஏதுமில்லை. பக்தர்கள் தங்கள் குறை தீர விளக்கேற்றுகின்றனர்.
விஜயவாடாவில் உங்கள் பயணம் காலை 6 மணிக்கு துவங்கட்டும். இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது மங்களகிரி பானக நரசிம்மர் கோயில். காலை 8மணிக்கு இங்கிருந்து 60 கி.மீ.தூரத்திலுள்ள வேதாத்ரியை 2மணி நேரத்தில் அடையலாம். இங்கு 12 மணி வரை தரிசனம் செய்யலாம். வேதாத்ரியில் மதிய உணவுக்குப் பின், மட்டபல்லி செல்லுங்கள். மாலை 4 மணிக்கு அடைந்து விடலாம். இங்கு தரிசனம் முடித்து அருகிலுள்ள ஹுசூர்நகரில் இரவு தங்கலாம்.
காலை 6 மணிக்கு இங்கிருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள வடபல்லியை அடையலாம். இங்கு செல்லும்முன் அர்ச்சகருக்கு போன் செய்யுங்கள். வடபல்லியில் இருந்து கேதவரத்துக்கு 60 கி.மீ., இங்கு அர்ச்சகர் இருப்பதில்லை. அருகிலுள்ள வீட்டிலுள்ள வாட்ச்மேன் கோயிலைத் திறந்து காட்டுவார். மலைக்கோயிலுக்கு செல்ல விரும்பினால், உள்ளூர் ஆட்களின் துணையைக் கேளுங்கள். மாலை 3 மணிக்குள் தரிசனம் முடித்து கிளம்புங்கள். விஜயவாடாவை 6 மணிக்குள் அடைந்து விடலாம்.
சென்னையில் இருந்து: 12077- சென்னை-விஜயவாடா (ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 7 மணி. இது தவிரவும் சில ரயில்கள் உள்ளன.
புதுச்சேரியில் இருந்து: 22403-புதுச்சேரி- டில்லி (டில்லி எக்ஸ்பிரஸ்)- புதன் காலை 9.05 மணி. 12868- புதுச்சேரி-ஹவுரா (ஹவுரா எக்ஸ்பிரஸ்)- புதன் பகல் 12.30 மணி. 12897- புதுச்சேரி- புவனேஸ்வரம் (புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்) புதன் மாலை 6.30 மணி.
கோவையில் இருந்து: 12625-திருவனந்தபுரம் -டில்லி (கேரளா எக்ஸ்பிரஸ்)- தினமும் இரவு 7.55 மணி. 13352-ஆலப்புழை -தன்பாத் (தன்பாத் எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 11.55 மணி. 12522-எர்ணாகுளம்- பிர்வானி (பிர்வானி எக்ஸ்பிரஸ்) - வெள்ளி காலை 10.10 மணி. 12969-கோவை-ஜெய்ப்பூர் (ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ்) வெள்ளி காலை 9.15 மணி. 16323-திருவனந்தபுரம்- விஜயவாடா(ஷாலிமர் எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, ஞாயிறு அதிகாலை 1.25மணி
மதுரையில் இருந்து: 12641- கன்னியாகுமரி- நிஜாமுதீன் (திருக்குறள் எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 11.45 மணி. 12651- மதுரை- நிஜாமுதீன் (சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ்) - திங்கள், சனி இரவு 11.35 மணி. 12666- கன்னியாகுமரி-ஹவுரா (கேப் ஹவுரா எக்ஸ்பிரஸ்)- சனி பகல் 12.35 மணி. 16787- திருநெல்வேலி-ஜம்முதாவி (ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, திங்கள் இரவு 7மணி. 14259- ராமேஸ்வரம்-வாரணாசி (வாரணாசி எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 8.05 மணி.(வழி: மானாமதுரை)
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது குறைகள் தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நரசிம்மருக்கு பானகம் தயாரித்துக் கொடுத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பானகம் குடிக்கும் முறை: நரசிம்மர் சிலை அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. பெரிய சட்டிகளில் பானகம் தயாரித்து வைத்துள்ளனர். இதில் நான்கைந்து சட்டி பானகத்தை நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றுகிறார் அர்ச்சகர். அப்போது மடக் மடக் என மிடறல் சத்தம் கேட்கிறது. குறிப்பிட்ட அளவு குடித்ததும் சத்தம் நின்று விடுகிறது. சட்டியில் இருக்கும் மீதி பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுகிறார். சில சமயங்களில் நரசிம்மர் வாயில் இருந்து பானகம் வெளியேயும் வருகிறது. இந்த வழிபாட்டுக்கு கட்டணம் ரூ.45. கோயிலிலேயே பானகம் கிடைக்கிறது. இந்த மலை முன்பு எரிமலையாக இருந்ததாம். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், வெல்லமும், பானக நீரும், தேங்காய் உடைத்த தண்ணீரும் கொட்டிக்கிடந்தாலும், நரசிம்மர் சன்னதியில் ஒரு ஈயோ எறும்போ பார்க்க முடியாது. சர்க்கரையும், எலுமிச்சையும் சேர்ந்த கரைசல் இந்தப்பாறையில் படும்போது, அதன் சூடு தணிந்து, எரிமலை வெடிக்கும் வாய்ப்பு குறைவதற்காக இவ்வாறு செய்யும் பழக்கம் வந்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு பெரிய விஞ்ஞான ஆர்வலர்கள் என்பதற்கு இதுவே சான்று. பிறப்பற்ற நிலை உறுதி: கிருதயுகத்தில் தாங்கள் செய்த நன்மைக்காக சொர்க்கத்தை அனுபவித்த உயிர்கள் மீண்டும் பிறப்பை சந்திக்க காத்திருந்தன. மீண்டும் பூலோகம் செல்ல வேண்டியிருந்ததை எண்ணி வருந்தி இந்திரனிடம் முறையிட்டன. இந்திரன் அவற்றிடம், பூலோகத்திலுள்ள மங்களகிரிக்கு சென்று நரசிம்மரை யார் வழிபடுகிறாரோ, அவர் மீண்டும் சொர்க்கம் பெறுவார், என்றான். அதுபோல, திரேதாயுகத்தில் உயிர்கள் செய்த பாவமும் மங்களகிரி வந்ததால் நீங்கி, பிறப்பற்ற நிலை பெற்றனர். இந்த ஊர் அஞ்சனாத்ரி, தோட்டாத்ரி, முக்தியாத்ரி, மங்களகிரி என்ற பெயர்களால் யுகவாரியாக அழைக்கப்பட்டிருக்கிறது.
அடிவாரக் கோயில் கோபுர அதிசயம்: மலைஅடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர் கோயில் முன் 153 அடி உயர கோபுரம் உள்ளது. 49 அடி அகலமுடைய இந்தக் கோபுரம் 11 நிலைகளைக் கொண்டது. இந்தக் கோபுரம் கட்டி முடிந்ததும் சற்று திசைமாறி நின்றதாம். கட்டடக் கலைஞர்கள் திகைத்தனர். உடனடியாக, காஞ்சிபுரத்தில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு கோபுரத்தை ஆய்வு செய்தனர். கோபுரத்தின் எதிரில் ஒரு குளம் தோண்டினால் கோபுரத்தின் திசை சீராகுமென முடிவெடுத்தனர். அதன்படி குளம் வெட்டவே, கோபுரம் கிழக்கு நோக்கி சரியான திசைக்கு திரும்பியது. நமது தமிழகக் கலைஞர்கள் ஆந்திராவுக்கு செய்த மிகப்பெரிய கைங்கர்யம் இது. இந்தக் கோபுரம் தவிர மேற்கு, வடக்கு, தெற்கு திசை நோக்கியும் கோபுரங்கள் உள்ளன. வடக்கு கோபுரத்தை வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலுக்காக திறக்கின்றனர். இந்தக் கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மரை பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் பிரதிஷ்டை செய்தார். இந்த நரசிம்மருக்கு 108 சாளக்கிராம கற்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரமும் திருப்பதி பெருமாள் போல, நகைகளுடன் திவ்யமாக காட்சியளிப்பார். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் வழங்கப்பட்ட தட்சிணவிருத்த சங்கு நரசிம்மரிடம் உள்ளது. இதை கிருஷ்ணரே பயன்படுத்தியதாகச் சொல்கின்றனர். சிற்ப வேலைப்பாடு கொண்ட ரதமும் இங்கு இருக்கிறது. திம்மராஜு தேவராஜு என்பவர் கோயிலில் மண்டபம், பிரகாரங்களை எழுப்பினார். ராஜ்யலட்சுமி தாயாருக்கு சன்னதி உள்ளது. இங்கு நாரத முனிவர் ஒரு அரசியின் சாபம் காரணமாக பால் மரமாக நிற்பதாக ஐதீகம். இந்த மரத்தை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தல வரலாறு:
நமுச்சி என்ற அசுரன் பிரம்மாவை வேண்டி, ஈரமான அல்லது காய்ந்த வஸ்துக்களால் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்ற வரம் பெற்றான். இதன் காரணமாக, அவன் இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் தொல்லை கொடுத்துவந்தான். எந்த ஆயுதத்தாலும் அவனை அழிக்க முடியவில்லை. இந்திரன் மகாவிஷ்ணுவை சரணடைந்து தங்களைக் காப்பாற்ற வேண்டினான். விஷ்ணு, கடும் கோபத்துடன் தனது சக்ராயுதத்தை ஏவினார். அது கடலில் மூழ்கி நுரையில் புரண்டது. ஈரம் போலவும், காய்ந்தது போலவும் காட்சியளிக்கும் நுரை கொண்ட சக்கரம் வேகமாகப் பாய்ந்து வந்தது. இதையறிந்த நமுச்சி, தன் உயிர் போய்விடும் என பயந்து, ஒரு குகையில் போய் ஒளிந்தான். தன் உடம்பை சுருக்கிக் கொண்டு, மிக குள்ளமாக மாறி தப்பிக்க எண்ணினான். ஆனால், சக்ராயுதம் மிகப்பெரும் வடிவெடுத்து குகைக்குள் காற்றே புகாதபடி தடுத்தது. நமுச்சி மூச்சுத்திணறி சாய்ந்தான். அப்போது அவனது தலையை அறுத்தது சக்கரம். நமுச்சியை வதம் செய்த பிறகும் கூட, விஷ்ணுவின் உக்கிரம் தணியவில்லை. தேவர்கள் அவரைப் பணிவுடன் வணங்கி கோபம் தீர வேண்டினர். அவரும் அமிர்தம் பருகி சாந்தமானார். அதன்பிறகு, விஷ்ணு தனது உக்கிர சக்தியான நரசிம்ம வடிவத்தில் அந்த மலையில் அகன்ற வாயுடன் தங்கினார். துவாபரயுகத்தில் அவரைச் சாந்தப்படுத்த வாயில் நெய் ஊற்றினர். துவாபராயுகத்தில் பால் குடித்தார். கலியுகத்தில் வெல்லம், எலுமிச்சை சாறு சேர்த்த பானகம் குடித்து வருகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பித்தளை வாயுடன் கூடிய நரசிம்மருக்கு பானகத்தை நைவேத்தியமாக அருளுவது இத்தலத்தின் சிறப்பு.