தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுதலங்களில் இது முதலாவது தலம்.
திருவிழா:
சித்திரை மாதம் நடக்கும் சித்திரைத் திருவிழாவின் போது மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், தேர் ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை.
நவராத்திரி, ஆவணி மூல திருவிழா , தை மாதத்தில் தெப்பத் திருவிழா தை மாதம், ஆடிப்பூரம்.
இது தவிர மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்த வண்ணமாக இருக்கும்.
இவை தவிர பொங்கல், தீபாவளி, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், விநாயகர் சதுர்த்தி ஆகிய முக்கிய விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.
தல சிறப்பு:
சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும் போது சிவனின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய இத்தலத்தில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட பாவம் நீங்கியது. எனவே இந்திர விமானத்துடன் கூடிய இந்த பெருங்கோயிலை கட்டினான் என்பர். எனவே இது இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. 18 சித்தர்களில் சுந்தரானந்த சித்தர் பீடம் இது. தமிழ்நாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயருடைய 366 கோயில்களில் முதன்மையானது. இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும், தலத்தின் பெயரை படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்றும் கூறுவர். பொற்றாமரைக்குளம் : நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே இந்தக் குளம் . கோயிலுக்குரிய தீர்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் பெயர். இந்திரன் தான் பூஜிப்பதற்கு பொன் தாமரையைப் பெற்ற இடம். இந்தக்குளத்தில் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகணகாலம், வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால் வேண்டும் சித்திகளைப்பெறலாம் என்பது ஐதீகம். இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலை நாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம். இங்கு ஸ்படிக லிங்கம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. விநாயகரின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 192 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமள சக்தி பீடம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
மதுரை 625 001.
மதுரை மாவட்டம்.
போன்:
+91- 452-234 9868, 234 4360
பொது தகவல்:
மீனாட்சி அங்கயற்கண்ணி: இங்குள்ள அம்மனின் பெயர் மீனாட்சி. தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார்.
மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார். அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன.
நடராஜர் கால் மாறி ஆடிய காரணம்: மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத்தில் தேவர்களும், முனிவர்களும் கலந்து கொண்டனர். அதில் பதஞ்சலி மகரிஷியும் வியாக்ரபாதரும் அடங்குவர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை உணவு அருந்துவதற்காக சிவனும், மீனாட்சியும் அழைத்தனர். அப்போது பதஞ்சலியும், வியாக்ரபாதரும் சிவனிடம், ""இறைவா! நாங்கள் இருவரும் தங்கள் பொன்னம்பல நடனத்தை பார்த்த பின்தான் உணவு அருந்துவது வழக்கம்'' என்றனர்.
இதைக்கேட்ட இறைவன், இவர்களின் நியமத்தை காக்கும்பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே திருநடனம் புரிந்து அருள்பாலிக்க வெள்ளியம்பலத்தை ஏற்படுத்துகிறார். இந்த வெள்ளியம்பலத்தில் நடனமாடிய இறைவனின் திருநடனத்தை கண்ட பின் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் உணவு அருந்துகின்றனர்.
இந்த வெள்ளியம்பல நடராஜர் திருநடனம் புரியும் மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின் மகன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆயகலைகள் 64ல் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். மீதி ஒரு கலை தான் நடனம். இந்த நடனமானது நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருப்பதால் நாம் எப்படி கற்பது என நினைத்தான்.
இதே காலத்தில் வாழ்ந்த கரிகாற்சோழன் என்ற மன்னன் 64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை ஒரு புலவன் பாண்டியனிடம் தெரிவித்தான். உடனே பாண்டியனும் நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெறுகிறான். இப்படி நடனம் கற்கும் போது உடம்பெல்லாம் வலிப்பதால் நடனக்கலை எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்கிறான். 64 கலைகளையும் கற்ற திருப்தியில் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீவாதம் வாங்க வருகிறான். அப்போது நடனம் கற்பதே கஷ்டமாக இருக்கும் போது காலம் காலமாக வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கி நடனமாடிக் கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்படுகிறான்.
இதை யாரிடம், எப்படி கேட்பது. முன் காலங்களில் வாழ்ந்த தேவர்கள் முனிவர்கள் எல்லோரும் இதைப்பற்றி பேசாமல் இருக்கும்போது நாம் எப்படி சிவனிடம் கேட்பது என நினைத்து மிகவும் வருத்தப்பட்டான். இந்நிலையில் ஒரு சிவராத்திரி திருவிழா வருகிறது. மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு, நடராஜரின் எதிரில் நின்று, ""ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கும் இறைவா! எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா?'' என வருந்திகேட்கிறான். ""அப்படி நீ கால் மாறி ஆடா விட்டால் என் முன்னால் கத்தி வைத்து அதில் விழுந்து உயிர் துறப்பேன்'' என இறைவனிடம் கண் மூடி மன்றாடுகிறான். சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்க்கிறான் ராஜசேகர பாண்டியன். அப்படியே மெய்சிலிர்த்து நின்று விடுகிறான். காரணம், பக்தனுக்காக இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி ஆடுகிறார் நடராஜப்பெருமான். உடனே மன்னன்
இப்படி பலவாறாக பாடிதுதித்து மகிழ்ந்து ஆனந்தத்தில் அழுது விழுந்து தொழுது ""எனக்காக கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் மதுரையிலேயே இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும்'' என்ற வரமும் வாங்கி விடுகிறான். அன்றிலிருந்து தான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கிறார்.
இந்நிகழ்ச்சி பரஞ்சோதி முனிவர் எழுதிய சிவனின் 64 திருவிளையாடலில் கூடற்காண்டத்தில் 24வது படலமாக "கால் மாறி ஆடிய படலம்' 6வது திருவிளையாடலாக வருகிறது.
எல்லாம்வல்ல சித்தர் : மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில், உலக நாயகனான சோமசுந்தரக்கடவுள் சித்தர் வடிவம் எடுத்து மதுரையின் எல்லாப்பகுதியையும் சுற்றி வருகிறார். அப்போது அவர் கிழவனைக் குமரனாக்கியும், ஆணைப் பெண்ணாக்கியும், இரும்பை தங்கமாக்கியும், முடவனை நடக்கவைத்தும், ஊமையை பேசவைத்தும், ஊசியை நிறுத்தி அதன் மேல் கால் பெருவிரலால் ஆடியும் பல சித்து விளையாட்டுக்களை செய்து காட்டி மதுரை மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட அபிஷேகப் பாண்டியன் இவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினான். வந்தவர்களும் இவரது சித்து விளையாட்டை பார்த்து பிரமித்துப்போய் விடுகின்றனர். அழைக்கச்சென்றவர்கள் வராமல் போகவே, தன் அமைச்சரை அனுப்பி சித்தரை அழைக்க அனுப்பினார். ஆனால் சித்தரோ அரசனால் எனக்கென்ன பயன், என்னைப்பார்க்க வேண்டுமானால் அரசனை வரச்சொல்லுங்கள் என்று கூறி அனுப்பிவிடுகிறார்.
மன்னர் தன்னைப்பார்க்க வருவதை அறிந்த சித்தர், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று வாயு மூலையில் யோக நிஷ்டையில் அமர்ந்து கொள்கிறார். (இவர் அமர்ந்த இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னதிக்கு அருகில் உள்ளது) அரசனுடன் வந்த ஆட்களால் சித்தரின் நிஷ்டையை கலைக்க முடியவில்லை. கலைக்க சென்றவர்களில் கைகள் தூக்கிய நிலையிலேயே நின்றுவிட்டது. அதிர்ந்து போனான் அரசன்.
சித்தரிடம் பணிவுடன் ""சித்தர் பெருமானே தாங்கள் இப்படி அமர்ந்து கொண்டால் எப்படி? தங்களுக்கு ஏதாவது தேவையென்றால் கேளுங்கள். அத்துடன் தாங்கள் உண்மையிலேயே சித்தர் தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது'' என்று கூறினான். சித்தர் உருவிலிருந்த சோமசுந்தரர், நிஷ்டையிலிருந்து கண்விழித்து அரசனே "" நான் தான் அனைத்தும், நானே ஆதியும் அந்தமும், நான் எங்கும் சஞ்சரிப்பவன், தற்போது இங்குள்ள மக்களுக்கு சித்து விளையாட்டை காட்டி அவர்களுக்கு என்ன வரம் வேண்டுமோ அதையெல்லாம் கொடுக்கும் என் பெயர் "எல்லாம் வல்ல சித்தர்' என்றார். ஆனாலும் நம்பிக்கையில்லாத அரசன், ""தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல்யானையை தின்ன செய்யுங்கள்'' என்றான். சித்தரும் அமைதியுடன் அருகிலிருந்த கல் யானையை பார்த்து கண் அசைக்க யானை சடாரென அரசனிடமிருந்த கரும்பைத்தின்றது.
அத்துடன் அரசனின் கழுத்திலிருந்த மாலையையும் பறித்தது. பதறிய சேவகர்கள் சித்தரை அடிக்கவந்தனர். சித்தரின் சைகையால் அடிக்க வந்தவர்கள் சித்திரம் போல் ஆனார்கள். உண்மை நிலையறிந்த அரசன் சித்தரின் காலில் விழுந்து வணங்கி, எம்பெருமானே அறியாமல் செய்த பிழையை பொறுத்து, மன்னித்தருள வேண்டும். சித்தரும் மன்னித்து, நான் இங்கேயே வீற்றிருந்து மக்களுக்கு வேண்டியதை வழங்குகிறேன், அத்துடன் உனக்கு தேவையானதை கேள் என்றார். இறைவா எனக்கு புத்திர பாக்கியம் தந்தருள வேண்டும் என்றான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால் அரசனுக்கு விக்கரமன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.
இப்படி இறைவனே எல்லாம் வல்ல சித்தராக (இவரை சுந்தரானந்தர் என்றும் அழைப்பர்) அவதரித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீற்றிருந்து என்ன வேண்டினாலும் வாரி வழங்கி கொண்டிருக்கிறார். தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டவர்கள் சித்தருக்கு பூக்கூடாரம் அமைத்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.
கையையே சந்தனக்கட்டையாக்கிய மூர்த்திநாயனார்: மதுரையில் சிவனுக்கு திருத்தொண்டு புரிந்து வரும் வணிகர்குலத்தில் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர்தான் மூர்த்தி நாயனார். இவர் இத்தலத்தில் தினமும் சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார்.
வீரம் விளையாடும் மதுரையில் கோழையொருவன் ஆட்சி செய்து வந்தான். இதுதான் சமயம் என்று பகையரசனான கர்நாடக மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பாண்டியனை முறியடித்து மதுரையை தனக்குத் தலைநகராகவும் கொண்டான்.
பகையரசன் சமண சமயத்தைச் சார்ந்தவன். சமண மதமே சிறந்தது என்று நினைத்து சைவ அடியார்களுக்கு சிரமங்களை கொடுத்ததுடன் தன் நாட்டிலிருந்து சமண பிரச்சாரர்களையும், குருமார்களையும் வரவழைத்து சமண மதத்தை பரப்பினான்.
சைவத்தை வளர விடாமலும் சிவ ஆலயங்களுக்கு திருப்பணி செய்யவிடாமலும் தடுத்தான். இந்நிலையில் சொக்கநாதருக்குச் சந்தனம் அரைக்கும் மூர்த்தி நாயனாருக்கும் சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்து அவரது திருப்பணியைத் தடுக்க முயற்சித்தான். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இறைவனுக்குத் தாம் செய்யும் திருத்தொண்டினை மட்டும் தவறாமல் செய்து கொண்டே வந்தார்.
ஒருநாள் சந்தனக் கட்டைக்காகப் பகலெல்லாம் மதுரை முழுவதும் சுற்றி அளைந்து தேடியும் கிடைக்காமல் இறுதியில் வேதனையோடு கோயிலுக்குள் வந்தார். சிவநாமத்தை துதிக்கத் தொடங்கினார். அப்போதுதான் அவருக்கு ஒரு எண்ணம் பிறந்தது.
""சந்தனக் கட்டைக்குப்பதிலாக தன் முழங்கையை அரைக்கலாம் என்று நினைத்து சிவனை தியானித்துக்கொண்டே கல்லில் தமது முழங்கையை வைத்துத் தேய்க்கத் தொடங்கினார். தோல் தேய்ந்தது. ரத்தம் பீறிட்டது! எலும்பும் நரம்பும் நைந்து வெளிப்பட்டன.
மூர்த்தி நாயனார் எதைப்பற்றியும் எண்ணாமல் வேதனையையும் பொருட்படுத்தாமல் அரைத்துக் கொண்டேயிருந்தார். சிவபெறுமான் பக்தனின் பரமசேவையைக் மகிழ்ந்து பக்திக்கு அடிமையானார். அதற்கு மேல் தொண்டரைச் சோதிக்க விரும்பவில்லை.
""அன்பும் பக்தியும் மேலிட எமக்குச் செய்த திருத்தொண்டு முன்போல தடையின்றி நடை பெறும். கர்நாடக மன்னனை வென்று அரசு பெற்றுப் புகழ்பெறுவாய்! இறுதியில் எமது திருவடி சேர்வாயாக"" என்று அருள்வாக்கு கூறினார். உடனே அவரது கைபழைய நிலைமைக்கு வந்தது. கர்நாடக மன்னனின் ஆயுளும் அன்றோடு முடிவுற்றது. சமணரின் ஆதிக்கமும் அழிந்தது. முன்போல சைவம் தழைத்தது.
மன்னனுக்கு வாரிசு இல்லாததாலும், அரசு மரபினர் யாரும் இல்லாததாலும் நாட்டை ஆள வழக்கப்படி யானையிடம் மாலை கொடுத்து யானை யார் கழுத்தில் மாலை போடுகிறதோ அவரே மன்னர் என அமைச்சர்கள் தீர்மானித்தனர்.
யானையும் மாலையோடு சென்று சிவனை வழிபட்டுக் கொண்டிருந்த மூர்த்தி நாயனாரின் கழுத்தில் போட்டது. அமைச்சர்களும் மூர்த்தி நாயனாரையே மன்னனாக அழைத்தனர். ஆனால் அவரோ எனக்கு பொன்முடி, மணிமாலை தேவையில்லை, அதற்குப்பதில் உத்திராட்சமும் சடைமுடியும் விபூதிப்பட்டையுடனும் அரசாள்வேன் என்று கூறி கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டு இறைவன் விருப்பப்படி நாட்டை ஆண்டார்.
இவரது ஆட்சியில் மக்கள் வாழ்வு மலர்ந்தது.
இந்த பூமியில் புகழ்பெற்ற நாயனார் நீண்ட நாள் ஆட்சி செய்து பின் சிவனின் திருவடியை சேர்ந்தார். முத்தமிழ் கோயில் : கோயிலுக்குள் உள்ள சிலைகளும், பொற்றாமரைக்குளமும், விமானங்களும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன. மூர்த்திகளின் உருவங்களும் பேசாத பேச்சில் பேசும், சில துõண்களும் சிலைகளும் இசை பாடும். இலக்கியப் பாடல்களும், சுதைகளும், சித்திரங்களும் ஆங்காங்கு தீட்டப்பெற்றுள்ள திருவிளையாடல்களை நடித்துக்காட்டும். நாடகச் சிற்பங்களும் நடனச் சிலைகளும் உள்ளன. எனவே முத்தமிழுக்குரிய இயல், இசை, நாடகங்களைக் காட்டும் கலைக்கோயிலாகவும், சிலைக்கோயிலாகவும் மதுரைக்கோயில் திகழ்கிறது.
பொற்றாமரைக் குளம் : இந்திரன் தான் பூஜிப்பதற்குப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம். திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை தோன்றிய தலம். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி இக்குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.
வெளி ஆவரணமும் உள் ஆவரணமும் : மதுரையில் கோயிலுக்கு வெளியில் நான்கு திசைகளிலும் நான்கு புகழ் பெற்ற ஆலயங்கள் உள்ளன. இவை நகருக்கு உள்ளே இருப்பதால் உள் ஆவரணம் எனப்படும். மதுரைத்தலத்திற்கு வெளியில் உள்ள நான்கு திருத்தலங்கள் வெளி ஆவரணம் எனப்படும். மதுரைக்குத் தெற்கில் திருப்பரங்குன்றமும் மேற்கில் திருவேடகமும் வடக்கில் திருவாப்பனூரும் கிழக்கில் திருப்புவனமும் உள்ளன. இவை வெளி ஆவரணமாகும்.
இதுபோல மதுரைத் தலத்திற்குள்ளாக உள்ள திருக்கோயில்கள் உள் ஆவரணம் ஆகும். வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோயில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னைத்தான் அர்ச்சித்த மூர்த்தியாக வழிபட்ட இம்மையில் நன்மை தருவார் கோயில், கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ஐராவத நல்லுர் முக்தீசுவரர் கோயில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய்க் கோயில் ஆகியவை நகருக்கு உள்ளே அமைந்த உள் ஆவரணக் கோயில்களாகும்.
எப்போது கட்டப்பட்டது தெரியுமா?: மீனாட்சி அம்மன் கோயிலும், பொற்றாமரை குளமும் சங்க காலத்திற்கு முன்பே அதாவது 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதன் பின், கோபுரங்கள் மற்றும் சன்னதிகள் கட்டபட்ட ஆண்டுகள் விவரம் வருமாறு..
1168 - 75 சுவாமி கோபுரம் 1216 - 38 கிழக்கு ராஜ கோபுரம் 1627 - 28 அம்மன் சந்நிதி கோபுரம் 1315 - 47 மேற்கு ரா கோபுரம் 1372 சுவாமி சந்நிதி கோபுரம் 1374 சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம் 1452 ஆறு கால் மண்டபம் 1526 100 கால் மண்டபம் 1559 தெற்கு ராஜ கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம் 1560 சுவாமி சந்நிதி நார்த் கோபுரம் 1562 தேரடி மண்டபம் 1563 பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நட்ராஜர் மண்டபம் 1564 - 72 வடக்கு ராஜா கோபுரம் 1564 - -72 வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம் 1569 சித்ர கோபுரம், ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம் 1570 அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம் 1611 வீர வசந்தராயர் மண்டபம் 1613 இருட்டு மண்டபம் 1623 கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் 1623 - 59 ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம் 1626 -45 புது மண்டபம் 1635 நகரா மண்டபம் 1645 முக்குருணி விநாயகர் 1659 பேச்சியக்காள் மண்டபம் 1708 மீனாக்ஷி நாயக்கர் மண்டபம் 1975 சேர்வைக்காரர் மண்டபம்.
பிரார்த்தனை
இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது. வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர்.
தாயுள்ளத்தோடு அன்னையும் அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருவதால்தான் உலகம் முழுவதும் தனக்கு பக்தர்கள் உள்ளவளாக அன்னை மீனாட்சி விளங்குகிறாள். இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைம்கும், முக்தியும் கிடைக்கும். இங்குள்ள சுவாமி பிராகரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம், அத்தனை அமைதி வாய்ந்த ஒம் என்ற நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு ஒலிக்கும் அளவுக்கு மிகவும் நிசப்தமான பிரகாரம் அது. இங்கு எப்போதும் பக்தர்கள் தியானத்தில் அமர்ந்திருப்பதை நாம் கோயிலை வலம் வரும்போது காணலாம். தவம், தியானம் செய்ய ஏற்ற தலம் இது.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம்.
விரதம் இருத்தல், தானதருமம் செய்தல், வேள்வி புரிதல், தவம் செய்தல், தியானம் செய்தல் ஆகியவை இத்தலத்தில் செய்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும். அத்தனை சிறப்பு வாய்ந்த சிவத்தலம்.
அம்பாளுக்கு பட்டுப்புடவை சாத்துதல், சுவாமிக்கு உலர்ந்த தூய ஆடை அணிவித்தல், தங்களால் முடிந்த அபிஷேக ஆராதனைகள் இங்கு இறைவனுக்கும், அம்மனுக்கும் பக்தர்களால் செலுத்தப்படுகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.
சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவற்றை செய்யலாம். தவிர யாகம் செய்தும் வழிபடலாம்.
தலபெருமை:
உலகப்புகழ் பெற்ற சிவாலயம்.
பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி.சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே.
சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன.
ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதலம்.
நக்கீரர் வாழ்ந்த இடம்.
முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றியதும், திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில் தான்.
பாணபத்திரருக்கு பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம்.
இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.
திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம்.
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமான் வாழும் இடம். எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.
பல புராண இலக்கியங்களையுடையது:
கலையழகும், சிலைவனப்பும், இசையமைப்பும் ஆயிரக்கணக்கான அழகிய சுதைகளையும் கொண்ட வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது.
ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். அம்மையும் அப்பனும் வீதியில் வருவதும், அண்டிய அன்பருக்கு இன்பமே தருவதும் மதுரையில் காலம் காலமாக நடந்து வருவதாகும்.
தாமரை மலர்போல் மதுரைப்பதியின் அழகும், நடுவிலுள்ள மொட்டுப் போன்ற மீனாட்சியின் ஆலயமும், மலரிதழ் போன்ற வரிசையான தெருக்களும் சேர்ந்து மதுரையைச் சிவராஜதானி என்று போற்றச் செய்துள்ளன.
நவக்கிரக ஸ்தலத்தில் புதன் ஸ்தலமாகும். கோயில் அமைப்பு : 14 கோபுரமும் 5 வாயிலும் உடைய மிகப்பெரிய கோயில். கலையழகும், சிலையழகும், சிற்பத்திறனும், சிற்பவனப்பும், நாத அமைப்பும் கொண்டது. பல மூர்த்திகளின் திருவுருவங்களும், பொற்றாமரைக்குளமும், கோயில் விமானங்களும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன. முத்தமிழுக்குரிய இயல், இசை, நாடகங்களைக் காட்டும் கலைக்கோயிலாகவும், சிலைக்கோயிலாகவும் இத்தலகோயில் விளங்குகிறது. தெற்கு கோபுரம் தான் மிகவும் உயரமானது.
தலத்தின் பெயர் காரணங்கள் :
மதுரை:
சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து. நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது. ஆலவாய்:
சிவபெருமானுக்கு அணியாயிருந்த பாம்பு வட்டமாய் வாலை வாயாற் கவ்வி மதுரையின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் வந்தது.
கடம்பவனம்:
கடம்பமரம் அடர்ந்த காடாக இருந்ததால் கடம்பவனம் எனப் பெயர் பெற்றது
நான்மாடக்கூடல்:
மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டுப் பெருமான் தம் சடையினின்றும் விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடிக்காத்ததால் நான்மாடக்கூடல் எனப் பெயர் ஏற்பட்டது.
இத்தலம் குறித்த பதிகங்கள் :
மாணிக்கவாசகர் - திருவாசகம்
அருணகிரிநாதர்- திருப்புகழ்
பாணபத்திரர்- திருமுகப்பாசுரம்
பரஞ்சோதி முனிவர் -
திருவிளையாடற்புராணம்
மதுரைக்காஞ்சி- மாங்குடி
மருதனார்மீனாட்சி
பிள்ளைத்தமிழ் - குமரகுருபர
சுவாமிகள்
இவை தவிரகணக்கிலடங்கா புராண இதிகாச இலக்கியங்களில் இத்திருத்தலம் இடம்பெற்றுள்ளது.
சிறப்பு தகவல்:
மூன்று கோடி சிற்பம்
அம்மனின் சக்தி பீடங்களில் முதன் மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இந்த பீடத்திற்கு "ராஜமாதங்கி சியா மள பீடம்' என்று பெயர். மீனாட்சி அம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது. சுந்தரானந்தர் என்ற சித்தர் அடங்கிய தலம். இத்தலத்தினை "பூலோக கைலாசம்' என்றும், இத்தலத்தின் பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்கிறது புராணம். அத்துடன் உலகத்திலேயே சிலை களும், சிற்பங்களும் மூன்றுகோடி உள்ள ஒரே திருக்கோயில் இதுதான். இந்திரன் உருவாக்கியது. சிவபெருமான் மதுரை நகரில் தனது 64 திருவிளையாடல்களையும் நிகழ்த் தினார். அதில் முதல் திருவிளையாடல் தான் "இந்திரன் சாபம் தீர்த்த படலம்'. இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்ம ஹத்தி (கொலைப்பாவம்) தோஷம் நீங்க பல தலங்களுக்கு சென்று வந் தான். அப்படி வரும் போது மதுரையில், ஒரு சுயம்புலிங்கத்தை கண்டு அதை பூஜித்து தன் தோஷம் நீங்கப் பெற்றான். அங்கு இந்திர விமானத் துடன் கூடிய கோயிலை கட்டினான்.
பெண்மைக்கு முக்கியத்துவம் : அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார். சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறை யில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. பொற்றா மரை, வைகை ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. இத்தலத்தை பொறுத்தவரை பெண் மைக்கு முக்கியத்துவம் தரும் வகை யில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார்.
முக்குறுணி விநாயகர் : ஒரு முறை திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. வலி நீங்க மீனாட்சிக்கு தெப்பக்குளம் கட்டுவதாக நேர்ந்து கொண்டாராம். அப்படி தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்டமான பிள்ளை யார் கிடைத்தார். அவரை சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி "முக்குறுணி விநாயகர்' என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு விநாயகர் சதுர்த் தியன்று 18படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைக் கிறார்கள்.
தங்கத்தேர் : அன்னை மீனாட்சிக்கு 1981ல் தங்கத் தால் தேர் செய்யப்பட்டது. இந்த தங்க தேர் இழுப்பதற்கு அலுவலகத் தில் பணம் கட்ட வேண்டும். ஆனால் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் இலவசமாக தங்கத்தேர் இழுக்கலாம். இத்தேரின் அப்போதைய மதிப்பு ரூ.14,07,093.80. 14.5அடி உயரத் தில் செய்யப்பட்ட இந்த ரதத்தில் 6.964 கிலோ தங்கமும், 87.667 கிலோ வெள்ளியும், 222.400கிலோ தாமிரமும் சேர்க்கப்பட்டுள்ளது.
அங்கயற்கண்ணி பெயர் விளக்கம் : அன்னை மீனாட்சிக்கு பல திருநாமங் கள் இருந்தாலும், அங்கயற்கண்ணி என்ற திருநாமம் தான் மீனாட்சிக்கு பெருமை சேர்க்கிறது. மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. மீன் தன் முட்டைகளை தன் பார்வையாலேயே தன்மயமாக்கு வதைப் போல், அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை தனது அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறாள்.
தலபெருமை : ராமர், லட்சுமணர், வருணன் மற்றும் பிற தேவர்களும் மற்றும் பல முனிவர்களும் பூஜித்து பேறு பெற்றது மதுரை. சம்பந்தர், திருநாவுக்கர சரால் பாடல் பெற்றது. குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத் தமிழ் பாடியதும், திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை சிவன் கொடுத்தருளியதும் இங்கு தான். நவக்கிரக தலத்தில் இது புதனுக் குரியதாகும்.
நடராஜர் கால் மாறி ஆடியது ஏன்? : சுவாமி சன்னதியில் நுழைந்தவுடன் நடராஜர் இடதுகால் ஊன்றி வலது கால் தூக்கி நடனமாடுகிறார். பஞ்ச சபைகளுள் இது வெள்ளி சபை. மதுரையை ஆண்ட ராஜசேகர பாண்டியன் நடனக்கலையை படித்து முடித்து விட்டு, நடராஜருக்கு நன்றி சொல்ல வந்தான். ""இறைவா! நடனம் கற்பதற்கு மிகக் கஷ்டமாக இருக்கும் போது காலம் காலமாக வலது கால் ஊன்றி இடது கால் தூக்கி ஆடிக்கொண்டிருக் கிறாயே! எனக்காக கால் மாறி ஆடக் கூடாதா? நீ அப்படி செய்யாவிட் டால் நான் இங்கேயே உயிர் துறப்பேன்,'' என கீழே விழுந்தான். மன்னனின் வேண்டுகோளை ஏற்ற நடராஜர் அன்று முதல் இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி ஆடலானார்.
தரிசன நேரம் : காலை 5 முதல் மதியம் 12.30 வரையிலும், மாலை 4 முதல் இரவு 9.30 வரையிலும் அம்மனை தரிசிக் கலாம். ஆகம விதிப்படி திருவனந்தல், விளாபூஜை, காலை சந்தி, திருக் காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம், பள்ளியறை என 8 கால பூஜை நடத்தப்படுகிறது. போன் : 234 4360.
மதுரை - பெயர்க்காரணம் : பாற்கடலை கடைந்த போது, நாகம் உமிழ்ந்த விஷத்தை சிவபெருமான் அமிர்தமாகிய மதுவைத்தெளித்து நீக்கியதால் "மதுரை' என பெயர் பெற்றது. 2500 வருடம் பழமையான தலம். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். மதுரையை கோயில் நகரம் என்றும், திருவிழா நகரம் என் றும், தூங்கா நகரம் என்றும் கூறுவர். திருவிழா : ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திரு விழா காணும் இக்கோயிலில் சித்திரை யில் நடக்கும் விழா தான் மிகவும் சிறப்பானதாகும். இது தவிர ஆவணி மூல திருவிழா, தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம் போன்றவையும் முக்கிய விழாக்கள் ஆகும்.
சித்திரை திருவிழா: சித்திரை மாதம் வளர்பிறையில் நடக்கும் 12 நாள் விழாவில் முதல் நாள் கொடியேற்றம், பின் ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வாகனங்களில் வீதி உலா வருவர். 8ம் நாள் மீனாட்சி பட்டாபி ஷேகம், செங்கோல் வழங்கும் வைப வம், 9ம் நாள் மீனாட்சி திக்விஜயம், 10ம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், 11ம் நாள் தேர்த்திருவிழா, 12ம் நாள் தீர்த்த விழா, வைகையில் அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரை திருவிழா முடி வடையும்.
வைகாசியில் 10 நாள் வசந்த விழா, திருஞான சம்பந்தர் விழா. ஆனியில் ஊஞ்சல் திருவிழா. ஆடியில் முளைக்கொட்டு விழா. அடுத்து 12 நாள் நடக்கும் ஆவணி மூலப்பெருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி தந்தது, மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி வழங்கியது, உலவாக் கோட்டை அருளிய லீலை, அங்கம் வெட்டியது, வளையல் விற்றல், குதிரை கயிறு மாறிய லீலை, பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு சுமந்த லீலை ஆகியவை இடம் பெறும் புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் 6 நாள் கோலாட்ட உற்ச வம், அன்னாபிஷேகம், கார்த்திகை யில் தீபஉற்சவ விழா, 1008 சங்கா பிஷேகம் நடக்கிறது. மார்கழியில் மீனாட்சிக்கு 4 நாள் எண்ணெய் காப்பு உற்சவம், தை மாதம் சங்கராந்தியன்று கல் யானைக்கு கரும்பு தந்தருளிய லீலை, வலைவீசியருளிய திருவிளையாடல், தைப்பூசத்தன்று வண்டியூர் மாரியம் மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் உலா வரும் தெப்பத்திருவிழா நடக்கும். மாசி மகா சிவராத்திரியன்று "சகஸ்ர சங்காபிஷேகமும்' 4 கால பூஜையும் உண்டு. பங்குனி மாதத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் செல்லூர் திருவாப் புடையார் கோயிலுக்கு எழுந்தருள்வர்.
முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் அம்மன் சன்னதி நுழைவு வாயிலின் இடது பக்கம் உள்ள சித்தி விநாயகர் சன்னதி விநாயகரின் நான்காவது படை வீடாகும்.
கும்பாபிஷேகம் : கி.பி. 1708ல் விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் சுந்தரேஸ்வரருக்கு மட்டும் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அடுத்து 1877ல் நகரத்தார் பெருமக்க ளால் ஒரு கும்பாபிஷேகமும், 1923ல் வரலாறு கண்டிராத வகையில் ஒரு கும்பாபிஷேகமும், அடுத்து 1974, 1997 ஆகிய ஆண்டுகளிலும் கும்பா பிஷேகம் நடந்துள்ளது.
கோயில் அமைப்பு : பொதுவாக எல்லா கோயில்களிலும் ஒன்று அல்லது நான்கு வாசல்கள் இருக்கும். ஆனால், இத்தலத்தில் ஐந்து வாசல்கள் உள்ளன. அதாவது கிழக்கு பகுதியில் சுவாமி சன்னதிக்கு ஒரு வாசலும், அம்மன் சன்னதிக்கு ஒரு வாசலும் உள்ளன. இத்தகைய அமைப்பு வேறெங்கும் இல்லை. மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக் கும் தங்கத்தாலான கோபுரங்களும், நான்கு வாசல் பக்கங்களிலும் ராஜ கோபுரங்களும் உள்ளன. இதில் தெற்கு கோபுரம் தான் மிகவும் உயரமானது. உயரம் 160 அடி. இதில் 1511 சுதையால் ஆன சிலைகள் உள் ளன. இதை 1559ல் சிராமலை செவ் வந்தி மூர்த்தி செட்டியார் கட்டினார். மேற்கு கோபுரம் 154 அடி உயரம். 1124 சிலைகள் உள்ள இந்த கோபுரம் பராக்கிரம பாண்டியனால் (1315- 1347) கட்டப்பட்டது. வடக்கு கோபுரம் 152 அடி உயரம். இதனை மொட்டைக்கோபுரம் என்பார்கள். இந்த கோபுரம் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் (1564-1572) கட்டப்பட் டது. பொற்றாமரைக்குளத்தின் வட புறம் 7 நிலை சித்திரக்கோபுரம். இத்து டன் வேம்பத்தூரார் கோபுரம், நடுக் கட்டு கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் என மொத்தம் 14 கோபுரங் கள் உள்ளன.
பொற்றாமரைக்குளம் : நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண் டுகோளின் படி சிவன் தமதுசூலத் தால் பூமியில் ஊன்றி உண்டாக்கி யதே பொற்றாமரைக் குளம். கோயி லுக்குரிய தீர்த்தங்களில் இது முதன் மையானது. இதனை சிவகங்கை என்றும் அழைப்பார்கள். தேவேந் திரன் தனது சிவபூஜைக்காக பொற்றா மரையைப் பெற்றதும், நக்கீரர் இறைவனை எதிர்த்து வாதிட்டதும் இங்கு தான். அமாவாசை, கிரகணம், மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் இக்குளத் தில் நீராடி சிவனை பூஜித்து வந்தால் வேண்டியதைப் பெறலாம் என்பது ஐதீகம். 165அடி நீளமும் 120 அடி அகலமும் உள்ள இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குற ளின் பெருமையை நிலைநாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம் இது தான்.
ஆயிரங்கால் மண்டபம் : கோயிலில் உள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது இந்த மண்டபம் தான். நடுவில் பெரிய நடராஜர் திரு வுருவத்துடன் கூடிய இந்த மண் டபத்தில் 985 தூண்களும், 15 தூண் கள் இருக்க வேண்டிய இடத்தில் 2 உட்கோயில்களும் உள்ளன. இங்கு ஏழிசை எழுப்பக்கூடிய 2 தூண்கள் உள்ளன. வடக்கு ஆடி வீதி கோபுர வாயிலின் அருகே 5 இசைத்தூண்கள் உள்ளன. இந்த மண்டபம் சிற்பக் கலையின் சிறப்புக்களை விளக்கும் ஒரு அருங்காட்சி மண்டபமாக திகழ்கிறது.
அஷ்ட சக்தி மண்டபம் : மீனாட்சி சன்னதிக்குள் நுழைந்ததும் இருப்பது "அஷ்ட சக்தி மண்டபம்'. 18 அடி அகலமும், 25 அடி உயரமும், 46 அடி நீளமும் உள்ள இந்த மண்டபத்தை அஷ்ட லட்சுமி மண்டபம் என்றும் அழைப்பார்கள். மண்டபத்தில் இருபக்கங்களிலும் நான்கு நான்கு தூண்கள் உள்ளன. எட்டுத்தூண்களிலும் யக்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன் மணி, கவுமாரி, ரவுத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி ஆகியோர் அருள்பாலிக் கின்றனர். இந்த மண்டபத்தை கட்டியவர்கள் மன்னர் திருமலைநாயக்கரும், அரசிகளான ருத்திரபதியம்மையும், தோளி யம்மையும் ஆவர். பாண்டியன் மகளாக மீனாட்சி பிறப்பதும், முடிசூட்டிக்கொள்வ தும், ஆட்சி நடத்துவதும், வீரஉலா செல்வதும், இறைவனை காண்பதும், சோமசுந்தரர் ஆட்சி நடத்துவதும் இம்மண்டபத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மீனாட்சி நாயக்கர் மண்டபம் : அஷ்ட சித்தி மண்டபத்தை அடுத்துள் ளது இந்த மண்டபம். 110 தூண்கள் உள்ள இம்மண்டபத்தை 1707ல் விஜயரங்க சொக்கநாதநாயக்கரின் அமைச்சரான மீனாட்சி நாயக்கர் கட்டினார்.
முதலிப்பிள்ளை மண்டபம் : மீனாட்சி நாயக்கர் மண்டபத்தை அடுத்துள்ளது இந்த மண்டபம். 25 அடி அகலமும், 60அடி நீளமும் கொண்ட இந்த மண்டபம் கடந்தை முதலியாரால் 1613ல் கட்டப்பட்டது. இதில் 1008 விளக்குகள் கொண்ட திருவாச்சி பிரம்மாண்டமாக அமைக் கப்பட்டுள்ளது. இதை அமைத்தவர் மருதுபாண்டியர். இதில் சிவனின் "பிட்சாடனர்' சிலை மிகவும் அற் புதமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஊஞ்சல் மண்டபம் : 1563ல் செட்டியப்பநாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது ஊஞ்சல் மண்டபம். வெள்ளிதோறும் இங்கு சுவாமி அம்மன் ஊஞ்சலாட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
கிளிக்கூட்டு மண்டபம் : ஊஞ்சல் மண்டபத்தை அடுத்து கிளிக்கூட்டு மண்டபம் அமைந்துள் ளது. மீனாட்சி தன் கையில் கிளி ஏந்தி யிருப்பதை நினைவுபடுத்தும் வகை யில் அமைக்கப்பட்ட மண்டபம் இது. 1623ல் அபிதாக பண்டாரம் என்பவரால் கட்டப்பட்டது.
ஆறுகால் மண்டபம் : அம்மன் சன்னதியின் முன் ஆறுகால் மண்டபம் உள்ளது. இதில்தான் குமரகுருபரர் அமர்ந்து மீனாட்சி யம்மை பிள்ளைத்தமிழை அரங்கேற் றினார். மீனாட்சி ஒரு குழந்தை வடிவில் வந்து திருமலை மன்னர் கழுத்தில் கிடந்த முத்துமாலையை எடுத்து குமரகுருபரர் கழுத்தில் போட்டு மறைந்தாள் என்பர்.
திருக்கல்யாண மண்டபம் : விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் (1706-1732) இந்த மண்டபம் கட் டப்பட்டது. இதைகட்டிய நாயக்கர் இந்த மண்டபத்தில் சிலையாக நிற்கி றார். இந்த மண்டபத்திற்கு மேற்கட்டு, மரசெதுக்கு வேலையை வயிநாகரம் வேங்கடாசலம் செட்டியாரும், நாகப்ப செட்டியாரும் செய்துள்ள னர். இந்த மண்டபத்தில் தான் ஆண்டு தோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.
கம்பத்தடி மண்டபம் : சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு எதிரே இம்மண்டபம் உள்ளது. இதனை நந்தி மண்டபம் என்பார்கள். மண்ட பத்தின் நடுவே தங்க கொடி மரம், நந்தி பலிபீடம் ஆகியவையும் உள் ளது. இது 1564ல் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. புது மண்டபம் : சொக்கநாதர் கோயிலுக்கு முன்னே தனித்து இருக்கும் பெரும் மண்டபம் புது மண்டபம். நாயக்க மன்னர்களின் கலை வண்ணத்தை உணர்த்தும் நீராழி மண்டபமாக திகழ்ந்தது அது.
மூர்த்தி நாயனார் சிறப்பு : 63 நாயன்மார்களில் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரை வணிகர் குலத்தில் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் தினமும் கோயிலுக்கு சந்தனத்தை அரைத்து கொடுக்கும் பணி செய்து வந்தார். ஒரு சமயம் கர்நாடக மன்னன், பாண்டியனை வென்று ஆட்சியை கைப்பற்றினான். இவன் சைவத்தை வளர விடாமல் பெரும் தொந்தரவு கொடுத்தான். சொக்கநாதருக்கு சந்த னம் அரைக்கும் மூர்த்தி நாயனாருக்கும் சந்தனக்கட்டை கிடைக்காதபடி செய் தான். எனினும் தன் இறைபணியில் தடை ஏற்படாதபடி தன் முழங்கை யையே அரைக்க தொடங்கினார். தோல் தேய்ந்து ரத்தம் பீறிட்டு எலும்பும் சதையும் வெளியே தெரிந்தது. இதற்கு மேல் நாயனாரை சோதிக்க விரும்பாத இறைவன்,"" கர்நாடக மன்னன் வெல்லப்படுவான். நீயே நாட்டை ஆள்வாய்'' என்று கூறி யருளினார். அப்போது ஆண்ட மன்னருக்கு வாரிசு இல்லை. எனவே அரச வழக் கப்படி யானையிடம் மாலை கொடுக்க, அது மூர்த்தி நாயனாரின் கழுத்தில் போட்டது. இவர் பொன் முடி, மணிமாலை இல்லாமல் ருத்தி ராட்சம், விபூதிப்பட்டை, சடைமுடி யுடன் இறைவன் விருப்பப்படி நாட்டை ஆண்டு இறுதியில் சிவனின் திருவடி சேர்ந்தார்.
சித்தர் சிறப்பு : சிவன் சன்னதியின் சுற்றுப் பிரகாரத்தில் துர்க்கை சன்ன திக்கு அருகில் தனி சன் னதியில் அருள்பாலிக்கிறார் இந்த "எல்லாம் வல்ல சித்தர்'. சிவனே இங்கு சித்தர் வடிவில் அமர்ந்திருப் பதாக புராணங்கள் கூறுகின்றன.மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில் சிவன் சித்தர் வடி வெடுத்து மதுரையை சுற்றி வந்தார். சித்து விளையாட் டுக்கள் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினார். இதனை கேள்விப்பட்ட அரசன் சித்தரை அரண் மனைக்கு அழைத்து வர சொல்கிறார். ஆனால் சித்தரோ, ""வேண்டுமா னால் அரசன் என்னை இங்கு வந்து பார்க்கட் டும்''என்று கூறி விட்டார்.மன்னனும் சித்தரை பார்க்க வந்தான். மன்னனின் வருகையை அறிந்தவுடன் சித்தர் கோயிலுக்குள் ஓடி வந்து துர்க்கைக்கு அருகே யோகநிஷ்டையில் அமர்ந்து கொண்டார். அரசனுக்கு இவர் உண்மையிலேயே சித்தர் தானா என்பதில் சந்தேகம் வந்தது. எனவே தன் கையில் உள்ள கரும்பை அங்கிருந்த கல்யானையை தின்னுமாறு செய்ய வேண்டினான். சித்தரும் கல்யானையை பார்த்து கண் அசைக்க கல்யானை கரும்பை தின்றதுடன் மன்னனின் கழுத்தில் இருந்து முத்து மாலையையும் இழுத்தது. பதறிப்போன மன்னன் தான் செய்த தவறை உணர்ந்து சித்தரிடம் மன்னிப்பு கேட்டு தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டினான். சித்தரும் அவன் கேட்ட வரத்தை தந்தார். இப்படி எல்லாமே தரக்கூடியதால் இவரை "எல்லாம் வல்ல சித்தர்' என்று அழைத்தார்கள். சுந்தரானந்தர் சித்தர் என்றும் சொல்வர்.இவரிடம் தாங்கள் வேண்டியது நிறைவேறியதும், பூக்கூடாரம் அமைத்து பக்தர்கள் வழிபடு கிறார்கள். சிவனின் 64 திருவிளையாடல்
13.கடல்சுவற வேல் விட்ட படலம் 14.இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம் 15.மேருவைச் செண்டாலடித்த படலம் 16.வேதத்துக்கு பொருளருளிச் செய்த படலம் 17.மாணிக்கம் விற்ற படலம் 18.வருணன் விட்ட கடலை வற்ற செய்த படலம்
41.விறகு விற்ற படலம் 42.திருமுகம் கொடுத்த படலம் 43.பலகை இட்ட படலம் 44.இசைவாது வென்ற படலம் 45.பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம் 46.பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் 47.கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் 48.நாரைக்கு முக்தி கொடுத்த படலம்
திருவாலவாய்க்காண்டம்
49.திருவாலவாயான படலம் 50.சுந்தரப்பேரம் செய்த படலம் 51.சங்கப்பலகை கொடுத்த படலம் 52.தருமிக்கு பொற்கிழியளித்த படலம் 53.கீரனைக் கரையேற்றிய படலம் 54.கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் 55.சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் 56.இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் 57.வலை வீசின படலம் 58.வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம் 59.நரி பரியாக்கிய படலம் 60.பரி நரியாக்கிய படலம் 61.மண்சுமந்த படலம் 62.பாண்டியன் சுரம் தீர்த்த படலம் 63.சமணரை கழுவேற்றிய படலம் 64.வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம். மீனாட்சியம்மன் கிளி ரகசியம்: மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன், சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில் மதுரை தலத்தில் கிளி முக்கியத்துவம் பெற்று விட்டது. அன்னை மீனாட்சிக்கே முதல் பூஜை: (மீனாட்சியம்மன் கோவிலில் தினமும் முதலில் அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே, சிவனுக்கு பூஜை நடக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இக்கோவிலில் அம்பிகை பதிவிரதையாக எப்போதும் தன் கணவனையே எண்ணிக் கொண்டிருக்கிறாள். திருமணமான பெண்கள், கணவர் எழும் முன்பாகவே எழுந்து நீராடி பின் கணவரை எழுப்ப வேண்டும் என்பர். இதை வலியுறுத்தும் விதமாக, இங்கு மீனாட்சி தன் கணவருக்கு முன்பே குளித்து (அபிஷேகம் செய்யப்பட்டு) தயாராகிறாள். இதன் அடிப்படையில் காலையில் மீனாட்சிக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சிவனுக்கு பூஜை நடக்கிறது.
எட்டு காலம் எட்டு கோலம்: தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத்தேற்றும் ஜகன்மாதாவாக அவள் திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது. இந்த எட்டு காலங்களில் முறையே மஹாஷோடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.
சிவ தலங்களுள், 16 தலங்கள் மிக முக்கியமானவை. அவற்றுள் சிதம்பரம், காசி, திருக்காளத்தி, மற்றும் திருஆலவாய் ஆகிய நான்கு தலங்கள் குறிப்பிடத்தக்கவை. திருஆலவாய் என்பது மதுரை மாநகரின் பெயர்களுள் ஒன்று. இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே இறவாப் பேரின்ப நிலை கிடைக்கும். வாழும் காலத்திலேயே வீடு பேறு கிட்டும். சீவன் முக்தி தரும் தலம் என்பதால், சீவன் முக்திபுரம் எனும் பெயரும் இதற்கு உண்டு. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் கனவில் வந்த சிவனாரின் சடாமுடியிலிருந்து தேனாகிய மதுரம் இத்தலத்தில் வழிந்திட, மதுராபுரி என அழைக்கப்பட்டு, அது மருவி மதுரை ஆயிற்று.
கிரேக்க சாம்ராஜ்யத்தின் தலைநகர் ஏதென்ஸ் போல நாகரிக, கலாசாரத்தில் சிறந்து விளங்குவதால் ஏதென்ஸ் ஆஃப் தி ஈஸ்ட் எனப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 8 கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம் - இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. இதில் 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை. அம்மை அருள்பாலிக்கும் கருவறை 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும் 8 கல் யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமான கருவறையாகும்.
மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால், அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். பொற்றாமரைக் குளத்தில் மீன் போன்ற உயிரினங்கள் காணப்படுவதில்லை என்பது ஓர் அதிசயம்.
தல வரலாறு:
மலயத்துவச பாண்டியன் மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது இறைவன் அசரீரியாக இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்று கூறினார். இறைவன் கட்டனைப்படி குழுந்தைக்குத் "தடாதகை' எனப்பெயரிடப்பட்டது. குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது. மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதால் "கன்னிநாடு' எனப் பெயர் பெற்றது.
தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள். நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். சிவனுக்கு பக்கத்தில் தடாதகை இருந்ததை காண கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்றனர். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.
பெருமான் திருமணஞ் செய்தருளியது, பெருமான் போகியாய் இருந்து, உயிர்களுக்குப் போகத்தை அருளுவதை நினைப்பூட்டும். பின்பு சிவபெருமான் தாம் உலகில் அரசு நடத்திக்காட்ட திருவுளங்கொள்ள, இடபக்கொடி மீன்கொடி ஆகியது. சோமசுந்தரர் சுந்தரபாண்டியனாய்க் கோலங்கொண்டு விளங்கினார். சிவகணங்கள் மானுடவடிவு கொண்டனர். பாண்டியன் கோலம்பூண்ட சுந்தரப் பெருமாள் மக்களுக்கு அரசனாகவும், பகைவர்களுக்கு சிங்கமாகவும், உலக இன்பங்களை வெறுத்த ஞானிகளுக்கு முழுமுதலாகவும் விளங்கினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் ரஜத (வெள்ளி) சபையாகும். இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் துõக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார்.
மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 7 அடி உயர முக்குறுணி விநாயகர் இங்கு அருள் பாலித்து வருகிறார்.
ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி பொற்றாமரைக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.
முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் அம்மன் சன்னதி நுழைவு வாயிலின் இடது பக்கம் உள்ள சித்தி விநாயகர் சன்னதி விநாயகரின் நான்காவது படை வீடாகும். விஞ்ஞானம் அடிப்படையில்:ஆயிரங்கால் மண்டபம் : வடகோபுரத்திற்குப் பக்கத்தில் 5 இசைத் தூண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத்தரும் சிலைகளும் உள்ளன.
இந்த ஆயிரங்கால் மண்டபம் இங்குள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது. இங்கு 985 தூண்கள் உள்ளன. நடுவில் பெரிய நடராஜர் திருவுருவம் உள்ளது.
இருப்பிடம் : மதுரை மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ., ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் மீனாட்சி கோயில் உள்ளது.