தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 37வது தலம்.
திருவிழா:
மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை ஞாயிறு.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 100 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12: 30 மணி வரை. மாலை 5 மணி முதல் 9 மணி வரை.
திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சரும நோய் தீர சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். அர்ச்சனை செய்து வழிபட்டு சுவாமி, அம்பாளுக்கு சூட்டிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும்.
தலபெருமை:
பாம்பாட்டியாக வந்த சிவன்: உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து ""நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு'' என்று கூறினார். அதன்படி பாம்பு இவனை தடுக்க, உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கிகீழே விழுந்தது. பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, ""இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,'' என்று கூறினார்.
மூலவர்- உக்தவேதீஸ்வரர் என்ற சொன்னவர் அறிவார். அம்மன்- அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையை போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான்.
அக்கினி தன் பழி தீர சுவாமியை வழிபட்டது. விக்கிரம சோழன் மனைவி கோமளையின் குட்ட நோய் தீர்த்தது. வருணனின் சலோதரம் நீக்கியது. காளி, சூரியன், காமன் மற்றம் காசிபர் முதலிய ஏழு முனிவர்கள் வழிபட்டது. சுந்தரருக்கு சரும நோய் தீர்த்தது. சிவபக்தனின் காச நோயை போக்கியது போன்ய பல பெருமைகளை உடையது. தல விருட்சத்தின் அடியில் இறைவன் இத்தலத்திற்கு எழுந்தருளிய பாதுகை உள்ளது என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
தல வரலாறு:
காதல் புரிந்தோம் என்பதற்காக பெற்றவர்களைப் பகைத்துக் கொண்டு காவல்நிலையம் பக்கம் செல்லும் இளசுகள் அதிகரித்து வருகிறார்கள். அன்னை பார்வதி இப்பூமியில் மானிட ஜென்மமாய் அவதரித்து, சிவன் மீது காதல் கொண்டாலும் கூட, பெற்றவரிடம் முறைப்படி பெண் கேட்டு அழைத்துச் செல்லும் படி இறைவனிடம் கேட்டாள். நற்குணமுடைய இறைவன் அழைத்தே பெற்றவர்களுக்கு மரியாதை கொடுத்த பார்வதி போல, காதலிகள் தங்கள் காதலர் கரம்பிடிக்கும் முன் போராடியேனும் பெற்றோர் சம்மதம் பெற முயற்சிக்க வேண்டும். பரதமாமுனிவர் பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறார்.
இவரது வேண்டுகோளை ஏற்ற இறைவன் வேள்விக் குண்டத்தில் பார்வதியைப் பிறக்கச் செய்தார். பார்வதியும் பெரியவளாகிறாள். இவளது ஒரே விருப்பம் சிவனைத் தன் கணவனாக அடைவது என்பது தான். காவிரிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். எட்டாவது நாள் வழிபாடு செய்ய வந்த போது அவ்விடத்தில் ஒரு லிங்கம் இருக்கக்கண்டு, சிவனே அவ்வாறு எழுந்தருளியதாகக் கருதி மகிழ்ந்தாள். சிவனும் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதியின் கையை பற்றி அழைத்தார். ஆனாலும், பார்வதி சிவனுடன் செல்லாமல் இறைவனே! என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் படி அவர்கள் சம்மதத்துடன் என்னைத் திருமணம் செய்யுங்கள்'' என்று கூற ஈசனும் சென்று விட்டார்.
சில காலம் கழித்து நந்தியை, பரதமாமுனிவரிடம் மணம் பேசி வர தூது அனுப்பி வைக்கிறார் சிவன். முனிவரும் சம்மதிக்க மண நாள் குறிக்கப்பட்டது. கைலாயத்திலிருந்து மணமகனாக ரிஷப வாகனத்தில் சிவன் வர, விநாயகர் முன்னே செல்ல, "உத்தாலம்' என்னும் மரமும் சிவனுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது. மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார். சிவன் தான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு சென்றார். இதனால் தான் இத்தலம் "குத்தாலம்' எனப்பட்டது.
சோழர் மற்றும் விஜயநகரத்தார் கல்வெட்டுகளில் இந்த கல்யாண ஆலயத்திற்கு நிலம் வழங்கப்பட்டது. ராஜேந்திரசோழன் 5ம் நூற்றாண்டில் தனது படைகளுக்கு வெற்றி தருவதற்காக சைவ அன்பர்களுக்கு உணவளிக்க பணம் தரப்பட்டது. விக்ரமதேவன் 1123ம் ஆண்டு ஆகஸ்ட் 19 தேதி 90 பொன் வரக்கூடிய வரிகளை தந்தார். ராஜேந்திரசோழன் ஒரு மடம் கட்ட நிலம் வழங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார்.
சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.