|
ஒருநாள் மட்டும் நீராடும் தீர்த்தம்: மூலஸ்தானத்தில் வெள்ளடைநாதர் சதுர பீடத்தில், சிறிய பாணலிங்கமாக காட்சி தருகிறார். அன்று காலையில் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருஞானசம்பந்தரின் உற்சவ மூர்த்தி இந்த தீர்த்தத்திற்கு வருகிறார். அப்போது இக்கோயிலிலுள்ள சிவனும், அம்பாளும் அவருக்கு காட்சி தந்து தீர்த்தம் கொடுக்கின்றனர். அதன்பின்பு மாலையில் சம்பந்தர் மீண்டும் சீர்காழி திரும்புகிறார். இந்த வைபவம் வெகு விமரிசையாக இங்கு நடக்கிறது.
அன்னமிட்ட "கை': சிவத்தல யாத்திரை சென்ற சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. எனவே, அவரால் இக்கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இத்தலத்து சிவனை தரிசிக்காமல் சென்றுவிட்டார். வழியில் அவருக்கு பசியெடுத்தது. அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார். சுந்தரரிடம் அவர் அருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி, தான் அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும், அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார். அதன்படி சுந்தரரும், அவருடன் சென்ற அடியார்களும் சாப்பிடச் சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார். அதன்பின்பு சாப்பிட்ட களைப்பில் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சுந்தரர். சற்றுநேரம் கழித்து அவர் விழித்தபோது, அங்கு அன்னதான பந்தலோ, சாப்பாடு பரிமாறியதற்கான தடமோ தெரியவில்லை.
வியந்த சுந்தரர், தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவன்தான் என அறிந்து கொண்டார். பின்பு சிவனை வேண்டவே, அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். அதன்பின்பு இங்கு வந்த சுந்தரர், சிவனை வேண்டி பதிகம் பாடினார்.
சுந்தரருக்கு, சிவன் அன்னம் பறிமாறிய விழா சித்ராபவுர்ணமியன்று நடக்கிறது. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
சாந்த துர்வாசர்: இங்குள்ள காவியங்கண்ணி அம்பிகைக்கு, "சுகப்பிரசவ நாயகி' என்ற பெயரும் உண்டு. இவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அதையே பிரசாதமாக எடுத்துச்செல்கிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் துர்வாசர், சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார். இவர் இடது கையில் ஏடு வைத்து, வலக்கையில் அருள் செய்தபடி காட்சி தருவது விசேஷம். சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் ஆகியோரும் உள்ளனர்.
|
|