நவகிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
சப்தவிடத்தலங்கள்: டங்கம்' என்றால் "கல் சிற்பியின் சிற்றுளி' என்று அர்த்தம். "விடங்கம்' என்றால் "சிற்பியின் உளி இல்லாமல்' என்று பொருள். "சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல்' தானே உருவான இயற்கை வடிவங்களை "சுயம்பு' அல்லது "விடங்கம்' என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 லிங்கங்கள் சப்தவிடத்தலங்கள் எனப்பட்டன. ஒரு சமயம் இந்திரன், அசுரர்களால் தனக்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்தினை முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியால் போர் செய்து அசுரர்களை வென்றார். வெற்றிக்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்? என இந்திரன் கேட்க,""தாங்கள் பூஜை செய்து வரும் "விடங்க லிங்கத்தை' பரிசாக தாருங்கள்'' என முசுகுந்தன் கேட்டார். ஆனால் இந்திரனுக்கோ அந்த லிங்கத்தை தர மனதில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப்போலவே6 லிங்கங்களை செய்து அவற்றை தர நினைக்கிறான். ஆனால் முசுகுந்தன் "செங்கழுநீர் பூவின் வாசம் உடைய' உண்மையான சிவலிங்கத்தை தன் ஆத்ம சக்தியால் கண்டுபிடிக்கிறார்.
இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன் தன்னிடமிருந்த உண்மையான சிவலிங்கத்துடன் பிற லிங்கங்களையும் முசுகுந்தனுக்கு பரிசாக தந்து விடுகிறார். ஏழு லிங்கங்களையும் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் பூஜை செய்தார். இவை சப்தவிடத்தலங்கள் எனப்பட்டன.அவை திருவாரூரில் "வீதி விடங்கர்', திருநள்ளாறில் "நகர விடங்கர்', நாகப்பட்டினத்தில் "சுந்தர விடங்கள்', திருக்குவளையில் "அவனி விடங்கர்', திருவாய்மூரில் "நீலவிடங்கர்', வேதாரண்யத்தில் "புவனி விடங்கர்', திருக்காரவாசலில் "ஆதி விடங்கர்' என அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் "வண்டு நடனம்' ஆடி தரிசனம் தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை' ஆனது. சுவாமி, அம்மன் சன்னதி இரண்டும் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களில் பீமன் பகாசூரனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில் நீங்கியது. சுந்தரர் குண்டையூர் எனும் தலத்தில் பெற்ற நெல்மலையை திருவாரூர் பரவையாளர் மாளிகைக்கு கொண்டு செல்வதற்காக ஆள் வேண்டி இத்தலத்தில் பதிகம் பாடினார். பிரம்மா, தாமரைக்கண்ணன், வலாரி, அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகிரகங்கள், ஓமகாந்தன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இத்தலத்தின் அருகே ஓடும் சந்திரநதி கங்கையைப்போல் புனிதமானது என புராணங்கள் கூறுகின்றன.
தல வரலாறு:
சிவபெருமானின் திருமுடி கண்டதாக பிரம்மா பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. எனவே பிரம்மா இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி மணலால் லிங்கம் அமைத்து இத்தலத்தில் பூஜை செய்து சாபம் நீங்க பெறுகிறார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். நவகிரகங்களும் தங்களது தோஷம் நீங்கப்பெற்றன. இதனால் இத்தலம் "கோளிலி' ஆனது. இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் இருப்பது மிகவும் சிறப்பு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தில் இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்