மூலஸ்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர்.
விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம். எனவே இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் அருளுகிறார்.
காவிரிநதி இங்கு வந்து கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர்.
அகத்தியரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க விநாயகர் இங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்துள்ளார். இதனால் இத்தலம் "பொன்செய்' ஆனது. இதுவே காலப்போக்கில் மருவி "புஞ்சை' ஆனது.
பெரும்பாலான கோயில்களில் எருமைத்தலையின் மீது நின்ற கோலத்தில் அருளும் துர்க்கை, இத்தலத்தில் கையில் மான் மற்றும் சிங்கத்துடனும், சும்பன், நிசும்பனை சம்ஹாரம் செய்த கோலத்திலும் அருளுகிறார்.
|