|
ஒருமுறை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியர்களும் ஒன்றாக பூலோகத்திற்கு வந்து தவம் செய்தனர். அவர்களது தவத்திற்கு அத்திரி, பிருகு, காசிபன், கவுண்டில்யன், திரியோரிஷேயன், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் உதவி செய்தனர். மூன்று தேவியர்களையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வந்தனர். ரிஷிகளின் தவ வலிமையால் தேவியர்களை நெருங்க முடியாத மூவரும், ஒரு கந்தர்வ கன்னியை அனுப்பினர். அவளை கண்ட பரத்வாஜர் காமுற, ஒரு குழந்தை பிறந்தது. வேடுவ வடிவமெடுத்த மகாவிஷ்ணு, அக்குழந்தைக்கு "பரமேச்சுர வர்மன்' என பெயரிட்டு வளர்த்தார். பிறப்பிலேயே திருமால் பக்தனாக இருந்த பரமேச்சுரனுக்கு ஆய கலைகளையும் கற்றுக்கொடுத்தார். கலைகள் அனைத்தையும் கற்று முடிப்பதற்குள் அவனுக்கு இறுதி காலமும் நெருங்கிவிட்டது. அவனது ஆயுளை அதிகரிக்க விரும்பிய விஷ்ணு ஒரு சூசகம் செய்தார். எமன் வரும் நேரம் பார்த்து வடக்கு பக்கம் தலைவைத்து படுத்துக் கொண்டார். பொதுவாக வடக்கே தலைவைத்து படுத்தால் ஆயுள் குறையும் என்று சொல்வர்.
மனிதர்களுக்கே இந்த விதி இருக்கும்போது உலகை காக்கும் விஷ்ணு இவ்வாறு படுத்திருக்கிறார் என்றால் என்ன ஆகும்?. அவரது நிலையைக் கண்ட எமன் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என எண்ணி அவரருகே வந்து எழுந்திருக்கும்படி வேண்டினான். அவரோ மறுத்தார். காரணம் புரியாமல் அவன் விழித்தபோது, தன் பக்தனது ஆயுளை நீட்டித்தால், தான் எழுந்திருப்பதாககூறினார். பக்தனுக்கு இரங்கும் விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்ற எமன், பரமேச்சுரனின் உயிரை எடுக்காமல் தீர்க்காயுள் கொடுத்து சென்றுவிட்டான். இதைக்கண்ட பரமேச்சுரன் தந்தையாக இருந்த வேடுவரை யார் என கேட்க, அவர் மகாவிஷ்ணுவாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த அவன், இவ்விடத்தில் அவரது மூன்று கோலங்களையும் ஒவ்வொரு நிலையில் வைத்து மும்மாடக்கோயிலாக கட்டினான். இப்பரமேச்சுர வர்மன்தான் பல்லவ வம்சத்தின் துவக்கமாக இருந்து ஆட்சி செய்தார் என்றொரு வரலாறும் கூறுகின்றனர்.
மன்னனுக்கு மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது, ""பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமதுவே'' என அனைத்து பதிகங்களிலும் பல்லவ மன்னனின் பெருமைகளை சேர்த்து பாடியுள்ளார். மேலும், பல்லவர்களின் போர்புரியும் திறனை குறிப்பிடும்போது அவர்கள் ஒலிக்கும் பறையானது விண் அதிரும்படி இருக்கும் என குறிப்பிட்டிருக்கிறார். இதனாலேயே இத்தலத்திற்கு "பரமேச்சுர விண்ணகரம்' என்ற பெயர் வந்தது என்கின்றனர். திவ்ய தேசங்களில் மன்னனையும் சேர்த்து இத்தலத்தில் மங்களாசாசனம் செய்யப்பட்டிருப்பதால் பல்லவ மன்னனுக்கு விஷ்ணு அருளியதை உறுதிப்படுத்துகின்றனர்.
|
|