இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 29 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில்,
திருவாளப்புத்தூர் - 609 205.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91-4364 - 254 879, 98425 38954.
பொது தகவல்:
இத்தலத்து இறைவன் திரிதள விமானத்தின் கீழ் அருளுகிறார்.
தலவிநாயகர்: நிருதி விநாயகர். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும், பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். இவரது சன்னதிக்கு நேர் எதிரே மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த துர்க்கை, இத்தலத்தில் சிவனை வணங்கி ஆசிபெற்றாளாம். இவள் கோஷ்டத்தில் எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுவதும் விசேஷம். பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க, அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவரிடம் விசேஷ பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால், விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
பிரார்த்தனை
பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள். ஜாதக ரீதியாக பாதிப்புள்ளவர்கள் ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இத்தல விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.
தலபெருமை:
ருதுகேதன் எனும் மன்னன், இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களை காத்தருளும்படி மன்னன் வேண்டவே, சிவன் மாணிக்க மழையை பொழிவித்தாராம். எனவே இவருக்கு "மாணிக்கவண்ணர்' என்று பெயர் வந்தது. மாணிக்க கல் வைத்து பூஜிக்கப்பட்டவர் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுவதாகவும் சொல்வர். அர்ஜுனனின் வாளை ஒளித்து வைத்தவர் என்பதால் இத்தலம், "வாளொளிப்புற்றூர்' என்று பெயர் பெற்றது.
அம்பாள் வண்டமர்பூங்குழல் நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் பார்ப்பதற்கு வண்டுகளை கவரும் மலரை போன்ற அழகுடன் இருப்பதால் இப்பெயரில் அழைக்கின்றனர்.
சிறப்பம்சம்: இங்குள்ள நடராஜரின் காலுக்கு கீழே முயலகனும், நாகமும் இருக்கிறது. கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு அருகில் திருமால், பிரம்மா இருவரும் வணங்கியபடி இருக்கின்றனர். கோயில் முகப்பில் சனீஸ்வரர், கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கிறார். கஜலட்சுமி, சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் இருக்கின்றனர். பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடக்கிறது.
தல வரலாறு:
தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது மத்தாக பயன்பட்ட வாசுகி பாம்பு பலவீனமடைந்தது. களைப்பில் தன்னையும் மீறி விஷத்தை உமிழ்ந்து விட்டது. எனவே, சிவன் விஷத்தை எடுத்து உண்டுவிட்டார். பின் தேவர்கள் அமிர்தத்தை எடுத்துக் கொண்டனர். தன் செயலுக்கு வருந்திய வாசுகி, இத்தலத்தில் மாணிக்ககல்லை உமிழ்ந்து சிவனை வேண்டி பூஜை செய்தது. அவருக்கு காட்சி தந்து மன்னித்தருளிய சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். பிற்காலத்தில் இப்பகுதி வாகை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. ஒருசமயம் அர்ஜுனன் இத்தலம் வழியாக சென்றபோது, தாகம் எடுத்தது. எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. எனவே, ஓரிடத்தில் களைப்பில் அமர்ந்து விட்டான். அப்போது அங்கு முதியவர் ஒருவர் வந்தார். அர்ஜுனன் அவரிடம், தாகமாக இருப்பதால் நீர் தரும்படி கேட்டான். முதியவர் அர்ஜுனரிடம் ஒரு தண்டத்தை கொடுத்து, அருகிலிருக்கும் ஓரிடத்தை சுட்டிக்காட்டி அங்கு தோண்டினால் நீர் வரும் என்றார். அர்ஜுனன், தான் வைத்திருந்த வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றான். முதியவரோ அருகிலிருந்து புற்றில் வாளை மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். அர்ஜுனன் நீர் அருந்திவிட்டு திரும்பியபோது, முதியவரை காணவில்லை. அவன் தேடியபோது, பாத தடம் இருந்ததைக் கண்டு பின்தொடர்ந்தான். அவை அருகிலிருந்த புற்றில் முடிந்தது. அந்த புற்றினுள் வாள் இருந்ததைக் கண்ட அர்ஜுனன் அதனை எடுத்த போது, சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். பின் இவ்விடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
இருப்பிடம் : மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ., வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
பஸ் ஸ்டாப்பில் இறங்கி சுமார் 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.