சித்திரைத் திருவிழா -10 நாட்கள் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர்.
இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் தீபாவளி, பொங்கல் நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித்திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்களில் இக்கோயில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிப்பது சிறப்பு.
தல சிறப்பு:
அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார்.
இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி - 1.30 மணி, மாலை 3 - இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை அடைக்கப்படுவதில்லை.
முகவரி:
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,
மாங்காடு-602101,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 44 - 2627 2053, 2649 5883.
பொது தகவல்:
ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது. மாங்காடு கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. இந்த ஈஸ்வரன், நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.
காஞ்சிபுரத்தைப் போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது. வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார்.
பிரார்த்தனை
இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் (அதாவது ஒரு மண்டலம் ) வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது.
அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்குதொட்டில் கட்ட அன்னை அருள்புரிவாள்.பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். உத்தியோக உயர்வு , உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்)புடவை சாத்துதல், பால் அபிசேகம்,அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
தலபெருமை:
ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரம் ஆதிசங்கரர் : இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், "அஷ்டகந்தம்' என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள்.
அன்னையின் தவக்கோலம் : ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும் வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாயும் இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் அம்பாள் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடு திருத்தலத்தில் கடும் தவம் புரிந்தார்.இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது கறிப்பித்தக்கது.
நான்கு அம்பாள் தரிசனம் : மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம்.
"ஒத்தக்கால்ல நின்னு சாதிச்சுட்டான்'னு சொல்வது ஏன்? : குழந்தைகள் அடம்பிடித்து எதையாவது வாங்கி விட்டாலும் சரி.., அவர்களே தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று விட்டாலும் சரி..."ஒற்றைக்காலில் நின்று சாதித்து விட்டான்' என்று சொல்வது வழக்கம். இந்த பேச்சு வழக்கு காமாட்சியம்மனை மையப்படுத்தியே வந்தது. அம்பாளை, சிவன் பூலோகத்திற்கு அனுப்பியபோது அவள் இங்கு தவமிருந்தாள். ஆனால், சிவனது தரிசனம் கிடைக்கவில்லை. எனவே, தீயின் மத்தியில் நின்று பார்த்தாள். அதற்கும் அவர் மசியவில்லை. பின்னர் ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று தவம் செய்ய ஆரம்பித்து, அவரது தரிசனம் பெற்றாள். இறைவனை கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என சிலர் விதண்டாவாதம் பேசுவர். இறைதரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஈசனின் மனைவியே அவரைப் பார்க்க ஒற்றைக்காலில் நிற்க வேண்டி இருக்கிறது என்றால், சாதாரண மானிடர்களான நமக்கு எவ்வளவோ பக்குவம் வேண்டும்!
பக்தனுக்கே முதலிடம்... : திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார். அதைக்கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றி தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார். அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார். திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார். எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள். அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன்.
கணையாழியுடன் பெருமாள்: சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, "சீர் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள்.
நிறைமணி தரிசனம்: பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது. ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர்.
புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
முத்தேவியருடன் தங்கத்தேர்: தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி மூவரும் உலா வருகின்றனர். சப்தமாதர்களில் ஒருத்தியான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர். மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது. இதற்கு இடதுபுறம் தபஸ் காமாட்சி சன்னதி உள்ளது.
தல வரலாறு:
கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். இத்தலத்தில் தவமிருந்து வழிபட, தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள். காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு "ஆதி காமாட்சி தலம்' எனப்படுகிறது.
அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம் பொதுவாக மூலஸ்தானத்தில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக (மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாக கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இங்கு தவம் புரிந்த அம்பாள், சிவனின் உத்தரவிற்கு பின்பு காஞ்சிபுரம் சென்றாள். அப்போது தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் சுற்றுப் பிரதேசங்களும் தீயின் வெம்மையால் வறண்டன. இந்நிலையில் தேசாந்திரம் செல்லும் போது ஆதி சங்கரர் மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் 8 மூலிகைகளால் ஆன ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்கிறார்.இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார்.
இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.
இருப்பிடம் : சென்னை கோயம்பேட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் இத்தலத்துக்கு பஸ் உண்டு.
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
சென்னையிலிருந்து - 20 கி.மீ.
தாம்பரத்திலிருந்து - 22 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் :
தாம்பரம்,சென்னை.
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி : சென்னை
தாஜ் கோரமண்டல் +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் +91-44-2811 0101 தி பார்க் +91-44-4214 4000 கன்னிமாரா +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ +91-44-4225 2525 அசோகா +91-44-2855 3413 குரு +91-44-2855 4060 காஞ்சி+91-44-2827 1100 ஷெரிமனி +91-44-2860 4401 அபிராமி +91-44-2819 4547 கிங்ஸ் +91-44-2819 1471