வியாபாரிகள் தினமும் தங்களது தொழிலை தொடங்கும் முன்பு கடைச்சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்து விட்டு செல்கின்றனர். இவ்வாறு செய்வதால் தமது தொழில் சிறப்பதாக அவர்கள் நம்புகின்றனர். எனவே, இவர் "வியாபார பிள்ளையார்' என்றும் அழைக்கப்படுகிறார். புதிதாக ஏதேனும் செயலைத்தொடங்கும்போது சீட்டு மூலம் உத்தரவு கேட்கும் முறையும் இங்குள்ளது.
தல வரலாறு:
பார்வதிதேவியார் தனது பாதுகாப்புக்காக ஒரு வாலிபனைப் படைத்தாள். அவனுக்கு "கணபதி' என பெயர் சூட்டி தனது லோகத்தின் காவலுக்கு நிறுத்தி வைத்தாள். ஒருமுறை தேவர்கள் அம்பாளை தரிசிக்க வந்தனர். அவர்களை அனுமதிக்க கணபதி மறுத்து விட்டார். அவர்கள் கணபதியை மீறிச்செல்ல முயலவே, அவர்களுடன் போரிட்டு விரட்டி விட்டார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவரும் கணபதியிடம் நேரில் வந்து பேசிப்பார்த்தார். சிவனையும் அனுமதிக்க கணபதி மறுக்கவே, கோபம்கொண்டது போல் நடித்த சிவன், கணபதியின் தலையை வீழ்த்தி விட்டார். இதையறிந்த பார்வதி, தன்னால் உருவாக்கப்பட்ட கணபதிக்கு மீண்டும் உயிர்கொடுக்கும்படி வேண்டினாள். சிவன் அவருக்கு யானையின் தலையைப் பொருத்தி முழு முதல் பொருளாக்கினார். தான் உட்பட யாராக இருந்தாலும் தன் மைந்தன் கணபதியை வணங்கிய பிறகே பிறரை வணங்க வேண்டும் என்றார். விநாயகரை கணங்களுக்கெல்லாம் அதிபதியாக்கினார்.
சிவன், கணபதியின் தலையை வீழ்த்தியதை உணர்த்தும் விதமாக விநாயகர், இங்கு தலையில்லாமல் மொட்டை கணபதியாக அருளுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு விநாயகர் தலையில்லாமல் மொட்டை கணபதியாக அருள்பாலிப்பது சிறப்பு.