பொதுவாக எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால், பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லை வாசல் ஆகும். திருமுல்லை வாசல் என்ற இத்தலத்தின் இறைவன் முல்லைவனநாதர். மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாளின் பெயர் அணிகொண்ட கோதை என்ற சத்தியானந்த சவுந்தரி.
பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். எனவே இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது.
சுசாவி என்பவரின் மூத்தபிள்ளை வாமதேவர். தந்தை இறந்ததும் அவரது எலும்பை புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் போட்டார். அப்படி போட்டு வரும் போது இத்தலத்து தீர்த்தத்தில் போடும்போது அந்த எலும்பு, ரத்தினக்கல்லாக மாறியது. உடனே தந்தைக்கு இங்கு பிதுர் கடனாற்றினார். அத்துடன் தந்தைக்கு முக்தியளித்த தனயரானார்.
இத்தலத்தின் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். இத்தலம் 1300 வருடங்களுக்கு முன் கிள்ளி வளவனால் கட்டப்பட்டது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
|