கிழக்கு நோக்கியுள்ள இத்தலத்தில் இறைவன் சுவர்ண ரேகையுடன் உள்ளார்.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
63 நாயன்மார்களில் ஒருவர் திருக்குறிப்பு தொண்ட நாயனார். இவருக்காக இறைவன் நடத்திய திருவிளையாடல் நடந்த தலம் தான் காஞ்சி முக்தீஸ்வரர் திருக்கோயில். சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயிலில் சுதை வடிவில் இந்த வரலாறு காட்டப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
மூலவர் முக்தீஸ்வரர். தீர்த்தம் சிவதீர்த்தம். சனிபகவானும், சூரியனும் இறைவனை வணங்கியபடி உள்ளனர்.
கிழக்கு நோக்கியுள்ள இத்தலத்தில் இறைவன் சுவர்ண ரேகையுடன் உள்ளார். எனவே இவரை வணங்குவோருக்கு ஏராளமான செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை.
கருடன் தன்னை வருத்திய கத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளை கொல்ல இந்த சிவனை வழிபட்டு பலன் பெற்றதாக கூறுவர்.
தல வரலாறு:
காஞ்சியில் ஏகாலியர் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்பு தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து செயல்பட்டதால் இந்த பெயர் வந்தது. ""அடியார்களது ஆடைகளின் மாசு கழிப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசு கழியும்'' என்ற தத்துவத்தை இவர் உணர்ந்தார். (சலவைத்தொழில் எப்பேர்ப்பட்ட தத்துவம் கொண்டது என்பதை உணருங்கள்).
தங்கள் ஊருக்கு வரும் சிவனடியார்களின் துணிகளை வெளுத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது பெருமையை இறைவன் உலகறிய செய்ய விரும்பினார். ஒரு நாள் சிவன் கிழிந்த உடையை உடுத்தி கொண்டு விபூதி பூசிய உடலுடன் குளிரில் நடுங்கிக் கொண்டே திருக்குறிப்பு தொண்டரின் இல்லத்திற்கு வந்தார்.
அவரை வரவேற்று உபசரித்த திருக்குறிப்பு தொண்டர், சிவனடியாரின் அழுக்கடைந்த கந்தல் துணியையும், மெலிந்த உடலையும் கண்டு வருத்தமடைந்து, உடல் இளைத்திருக்க காரணம் கேட்டார். இறைவன் சிரித்தார். அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத திருக்குறிப்பு தொண்டர்,"" ஐயா! நான் சிவனடியார்களின் ஆடைகளை சுத்தம் செய்து கொடுத்து விட்டு தான், மற்றவர்களின் ஆடையை துவைப்பேன். எனவே தாங்கள் தங்களது உடையை கொடுத்தால் உடனே சுத்தம் செய்து கொடுத்து விடுகிறேன்,'' என பணிவோடு கேட்டார். ""இந்த குளிரில் இருக்கும் ஒரு ஆடையையும் உன்னிடம் கொடுத்து விட்டால் என் பாடு திண்டாட்டமாகி விடுமே,'' என்றார் சிவன்.
திருக்குறிப்பு தொண்டர்,""ஐயா! அப்படி சொல்லாதீர்கள். விரைவாக துணியைக் காய வைத்து தருகிறேன்,'' என்றார். ""இன்று மாலை பொழுது சாய்வதற்குள் துணியை வெண்மையாக்கி என்னிடம் தந்து விட வேண்டும்,'' என கூறி துணியையும் கொடுத்தார் சிவன். பின்பு வருணபகவானை அழைத்து புயலும், மழையு மாய் வீசச் சொன்னார். தொண்டர் கலங்கி விட்டார். மழை நின்றபாடில்லை. மாலையும் நெருங்கி விட்டது.
சிவனடியாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதே என்று வருந்திய தொண்டர் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் வாழ்வதா என நினைத்து துவைக்கும் கல்லில் தலை மோதி உயிர் விட தயாரானார்.
அதற்கு மேலும் சோதிக்க விரும்பாத இறைவன் துவைக்கும் கல்லில் இருந்து தன் கை நீட்டி தொண்டரின் தலை மோதாமல் தடுத்தார். இதைக்கண்டு அதிசயித்தார் தொண்டர். அப்போது வானத்தில் பேரொளி பிறந்தது. இறைவன் அடியவரை நோக்கி,""உன் பெருமையை இந்த உலகுக்கு உணர்த்தவே நாம் இவ்வாறு செய்தோம். இனி கயிலை வந்து எம்முடன் இருப்பீராக'' என கூறி மறைந்தார். திருக்குறிப்பு தொண்டரும் பகவானின் திருவடியை அடைந்தார். இந்த வரலாறு நடந்த திருத்தலம் தான் முக்தீஸவரர் திருக்கோயில். சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயிலில் சுதை வடிவில் இந்த வரலாறு காட்டப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கிழக்கு நோக்கியுள்ள இத்தலத்தில் இறைவன் சுவர்ண ரேகையுடன் உள்ளார்.
இருப்பிடம் : காஞ்சிபுரம் காந்தி ரோட்டின் மத்தியில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி : காஞ்சிபுரம்
ஹோட்டல் தமிழ்நாடு +91-44-2722 2554, 2722 2553 பாபு சூரியா +91-44-2722 2555 ஜெயபாலா +91-44-2722 4348 ஹெரிடேஜ் +91-44-2722 7780 எம். எம். ஹோட்டல் +91-44-2723 0023 ஜி. ஆர். டி. +91-44-2722 5250