திருக்கடையூர்-திருக்கடவூர் மயானம் மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர்நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
-சுந்தரர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 48வது தலம்.
திருவிழா:
திருக்கார்த்திகை, சிவராத்திரி, திருவாதிரை.
தல சிறப்பு:
இங்குள்ள சிங்காரவேலர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார். இவரது சிலை, வில்லேந்திய ராமன் போல நளினமாக, இடப்புறமாக சற்றே சாய்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 111 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், கடவூர்மயானம் என்றும், திருமெய்ஞானம் என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு. திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கும் பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஐதீகம். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியுடன் ஆறு சீடர்கள் உள்ளனர். கல்லால மரம் இல்லை. கல்வியில் சிறந்து விளங்க இத்தல சிவனையும் இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறப்பு.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
சிங்காரவேலர் சிறப்பு: வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் முருகப் பெருமான் இங்கு வீற்றிருக்கிறார். இவரது சன்னதி, விமானத்துடன் கூடிய தனி மண்டப அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார். இவரது சிலை, வில்லேந்திய ராமன் போல நளினமாக, இடப்புறமாக சற்றேசாய்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. முருகன் சிவனின் அம்சம் என்றாலும், இத்தலத்தில் ராமனின் சிலை போல வளைந்து காட்சி தருவதால், இவரை திருமாலின் அம்சமாகக் கருதுகின்றனர். மாமனைப் போல் மருமகன் என்றுகொண்டாடுகின்றனர். சிவசன்னதியின் ஒருபுறத்தில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல, இந்த முருகனுக்கும் ஒரு சண்டிகேஸ்வரர் உள்ளார். இவரை, குக சண்டிகேஸ்வரர் என்கின்றனர்.
ஒட்டிய வயிறுடன் விநாயகர்: விநாயகர், பெரிய வயிறுடன்தான் இருப்பார். இக்கோயிலில் இவர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். இவரை, பிரணவ விநாயகர் என்று அழைக்கிறார்கள். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம். படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம். இதனால், இவர் வயிறு சிறுத்து இருப்பதாகச் சொல்வர். படிக்கிற குழந்தைகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் சொல்கிறார்.
தல வரலாறு:
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும் அழிந்து போவார். புது யுகம் துவங்கும்போது, மீண்டும் பிரம்மாவை உண்டாக்கி, அவர் மூலமாக ஜீவராசிகள் பிறக்கும்படி செய்வார். அவ்வாறு பிரம்மாவை அழித்து, மீண்டும் உயிர்ப்பித்த தலம் இது. அதோடு, பிரம்மாவுக்கு உயிர்களை படைக்கும் ரகசியம் பற்றி இங்கு ஞான உபதேசம் செய்தருளினார். பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.