பிரகாரத்தில் காசி விநாயகர், பாலமுருகன், நாகர், கருப்பராயர், கன்னிமார் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.
பிரார்த்தனை
தங்கள் வீட்டில் விசேஷங்கள் நடத்தும் முன்பும், புதிய தொழில் துவங்கும் போதும் இங்குள்ள அம்மன் முன்பு பூ போட்டு உத்தரவு கேட்ட பின்பே அச்செயல்களை துவங்குகின்றனர்.
தம்பதியர் இங்கு வேண்டிக்கொண்டால் அவர்களின் இல்வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.
அம்மை நோய் கண்டவர்கள், இத்தலத்தில் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டவராக இருந்தார். பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர், தனது உபயோகத்திற்கு போக, மீதி பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார். ஒருசமயம், அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை. சந்தேகமடைந்த விவசாயி பசுவிடமிருந்து யாரோ பாலை திருடுவதாக எண்ணி அதனை கண் காணித்தார். அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு, ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது. இதனைக் கண்டு வியப்படைந்த பக்தர், அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு ஜோதி தெரிந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய மாரியம்மன், பசு பால் சொரிந்த இடத்தில் தான் எழுந்தருளியிருப்பதாக கூறினாள். மறுநாள் அவர் நடந்ததை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் இணைந்து ஜோதி தோன்றிய இடத்தை ஆய்வு செய்தனர். அங்கே ஒரு அம்பாள் சிலை இருந்தது. அந்த சுயம்புவுக்கு (தானாகத் தோன்றியது) கோயில் கட்டினர்.
முப்பெரும் தேவியர்: இக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளிய மாரியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு வலப் புறத்திலும், இடப் புறத்திலும் இன்னும் இரண்டு அம்பாள்கள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது விசேஷமான தரிசனம். சரஸ்வதி, லட்சுமி, சக்தி ஆகிய முப்பெரும் தேவியரும் இவ்வாறு எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். வலது புறத்தில் உள்ள அம்பாள், வெள்ளை நிறத்தில் சுயம்பு வடிவமாக இருப்பது வித்தியாசமான அம்சம். மற்றொரு மாரியம்மன் குழந்தை வடிவில் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவளது வயிற்றில், தலையில் கிரீடம் அணிந்தபடி ஒரு முகம் இருக்கிறது. அசுரனை வதம் செய்த அம்பாள், அவனை தன்னுள் அடக்கி வைத்திருப்பதாக இந்த கோலத்தை சொல்கிறார்கள். மைசூரை ஆண்ட திப்புசுல்தான் இவ்விடத்தில் தன் படை வீரர்கள் ஓய்வெடுக்க கோட்டை அமைத் துள்ளான். இதனால், இத்தலத்து அம்பாள் "கோட்டை மாரியம்மன்' என்றழைக்கப்படுகிறாள். இவளுக்கு, "கோடீஸ்வரிமாரி' எனவும் பெயர் உண்டு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சுயம்புவாக எழுந்தருளிய மாரியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
இவளுக்கு வலப் புறத்திலும், இடப் புறத்திலும் இன்னும் இரண்டு அம்பாள்கள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது விசேஷமான தரிசனம்.