மூலவருக்கு வலப்புறம் கன்னிமூல கணபதிக்கும், இடப்புறத்தில் மாளிகைப்புறத்து அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்திற்கு முன்பு பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. படிகளுக்கு அருகில் கடுத்தசாமி, கருப்பண்ணசாமி, கருப்பாயி ஆகியோர் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர். கொடிமரம், பலிபீடம் கிடையாது.மூலஸ்தானத்திற்கு முன்புறம் இரண்டு புலி வாகனங்கள் உள்ளன.
பிரார்த்தனை
மாளிகைப்புறத்தம்மன்: திருமண தடையுள்ள பெண்கள் இவளுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத் துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். குழந்தை இல்லாத தம்பதியர் ஐயப்பன் கழுத்தில் மணி கட்டி வணங்குகின்றனர்.
தலபெருமை:
தசபுஜ ஐயப்பன்: ஐயப்பன் சன்னதிக்கு கீழ்தளத்திலுள்ள மண்டபச் சுவரில் ஐயப்பனின் பல வித சுதை சிற்பங்கள் உள்ளன. ஆரியங்காவு போல பூரணையுடன் குடும்ப நிலையை காட்டும் ஐயப்பனும், பின்புற சுவரில் அச்சன்கோயில் போல இரண்டு கால்களையும் மடக்கி, வலக்கையில் அக்னியுடன், யோகப்பட்டை அணிந்து பூர்ணபுஷ்கலாவுடன் ஒரு ஐயப்பனும் உள்ளனர். இடப்புறத்தில் காந்தமலையில் உள்ளது போல், பத்து கரங்களுடன் தசபுஜ ஐயப்பன் காட்சி தருகிறார். யோகப்பட்டை அணிந்திருக்கும் இவர் கைகளில், மகாவிஷ்ணுவிற்குரிய சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, சூலம், கத்தி வைத்திருக்கிறார்.
சிறப்பம்சம்: இங்குள்ள உற்சவர் சிலை, சபரிமலையில் ஆறாட்டு உற்சவத்தில் பங்கேற்கும் உற்சவரின் அமைப்பிலேயே வடிக்கப் பட்டுள்ளது. உற்சவரின் இடது கையில் வில், அம்பு இருக்கிறது. வலக்கை வரம் தருகிறது. மாளிகைப்புறத்தம்மன், வட்ட வடிவ கண்ணாடி பிம்பம் போல காட்சியளிக்கிறாள். திருமண தடையுள்ள பெண்கள்
இவளுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத்துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள். தான் திருமணமாகாமல் கன்னியாக இருப்பதைப் போல, மற்ற பெண்களும் சிரமப்படக்கூடாது என்ற கனிவான எண்ணம் கொண்டவளாக இவளைச் சித்தரிக்கிறார்கள். இக்கோயில் நடை திறப்பின் போது படிபூஜை நடக்கிறது. அப்போது பதினெட்டு படிகளுக்கும் கலசம் சாத்தி, பட்டுத்துணி போர்த்தி, உன்னியப்பம், அரவணை நைவேத்யங்கள் படைத்து மலர் அலங்காரம் செய்யப்படும். பின்னர், கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கும். மகரஜோதியன்று திருவாபரண பெட்டி ஊர்வலம், ஜோதி தரிசனம், சித்திரைப்பிறப்பன்று விஷுக்கனி தரிசனம் ஆகியவையும் உண்டு.
திருமண வழிபாடு: மாளிகைப்புறத்து அம்மன் எனப்படும் மஞ்சள்மாதா சன்னிதி இங்கு உள்ளது. இவள் ஐயப்பனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சபரிமலையில் குடியிருப்பவள். எந்த ஆண்டில் முதன்முதலாக மாலை அணிந்து வரும் கன்னி சுவாமிகள் வரவில்லையோ, அந்த ஆண்டில் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக ஐயப்பன் வாக்களித்துள்ளார். இதனால் பெருத்த ஏமாற்றத்தில் இருக்கும் இவள், தனக்கு ஏற்பட்ட இந்த நிலை மற்ற கன்னிகளுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில், அவர்களுக்கு திருமண பாக்கியத்தை அருள்பவளாக விளங்குகிறாள்.
தல வரலாறு:
சபரிமலையை போல, இக்கோயிலில் ஐயப்பன் உயர்ந்த இடத்திலுள்ள மூலஸ்தானத்தில் பாலகனாக அருளு கிறார். பஞ்சலோக மூர்த்தியான இவரது சிலை கேரளத்தில் செய்யப் பட்டதாகும். சுவாமிக்கு வலப்புறம் உள்ள துவாரபாலகர், தனது ஒரு விரலை மட்டும் காட்டி "இறைவன் ஒருவனே!' என்ற தத்துவத்தையும், "மனதை அலைபாயவிடாமல் ஐயப்ப சுவாமியை ஒரு மனதாக வணங்கு,' என்றும் உணர்த்துகிறார். இடப்புறத்தில் உள்ள துவாரபாலகர், சுவாமியின் பக்கம் தனது கையை திருப்பிக்காட்டி, ""இறைவனான இவரை வணங்கு!'' என காட்டுகிறார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கும் நாட்களில் மட்டுமே இங்கும் நடைதிறக்கப்படும். விசேஷம் முடிந்து, நடை அடைக்கும்போது சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்து, இடது கையில் தண்டம் வைத்து, ஒரு தீபத்தை ஏற்றுகிறார்கள். ஐயப்பன் தவ நிலையில் இருப்பவர் என்பதால் இந்த ஏற்பாடு. மீண்டும் நடை திறக்கும்போது விபூதி அலங்காரத்தைக் கலைத்து, அதையே பிரசாதமாக தருகின்றனர்.
இருப்பிடம் : ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் இருக்கிறது.
தேவிப்பட்டணம் ரோட்டிலுள்ள கோணிக்கரை ஸ்டாப்பில் இறங்கி கோயிலை அடையலாம்.