"வைகுண்டவாசர்' என்று பெயர் பெற்றதால், இத்தலத்தையே வைகுண்டமாக கருதி, சொர்க்கவாசல் அமைக்கப்படவில்லை.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வைகுண்டவாசர் திருக்கோயில்
மாங்காடு-602 101.
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 2627 2053, 2649 5883.
பொது தகவல்:
மாங்காடு காமாட்சி கோயிலும், சிவன் சுக்ராச்சாரியாருக்கு காட்சி தந்த வெள்ளீஸ்வரர் கோயிலும் இங்கிருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. பிரகாரத்தில் கனகவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் ஆஞ்சநேயர் இருக்கின்றனர்.
பிரார்த்தனை
இவரிடம் வேண்டிக்கொள்ள பணப்பிரச்னையால் தடங்கலாகும் திருமணங்கள் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
வைகுண்ட பெருமாள் கையில் பிரயோக சக்கரம் வைத்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். அருகில் மார்க்கண்டேயர் தவம் செய்தபடி இருக்கிறார். திருமணச்சீராக அவர் கொண்டு வந்த மோதிரம் வலது கையில் இருக்கிறது.
சுவாமி நேரடியாக வைகுண்டத்தில் இருந்து வந்து, "வைகுண்டவாசர்' என்று பெயர் பெற்றதால், இத்தலத்தையே வைகுண்டமாக கருதி, சொர்க்கவாசல் அமைக்கப்படவில்லை. ஏகாதசியன்று சுவாமி, கருட வாகனத்தில் வலம் வருகிறார். சுவாமி எதிரே கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவரது இறகுகள் மூடிய நிலையில் இருக்கிறது.
சிறப்பம்சம்: பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் ஆகியோரே துவாரபாலர்களாக இருப்பர். இங்கோ அவிரட்சகன், அக்னி என்பவர்கள் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். மாமரம் இத்தலத்தின் விருட்சம். திருக்கச்சிநம்பி, நம்மாழ்வார், ராமானுஜர் மற்றும் விஷ்வக்சேனர் சிலைகளும் உள்ளன.
தல வரலாறு:
கைலாயத்தில் ஒருசமயம் அம்பிகை சிவனின் கண்களை விளையாட்டாக மூடவே, உலகம் இருளில் மூழ்கியது. அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன், அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். பூலோகம் வந்த அம்பிகை மானிடப்பெண்ணாக பிறந்தாள். இருப்பினும், சிவன் மீது கொண்ட பக்தியால், தன்னைத் திருமணம் செய்யக்கோரி கடுந்தவம் செய்தாள். தங்கையை தாரை வார்த்துக் கொடுக்க வைகுண்டத் திலிருந்து மகாவிஷ்ணுவும் சீர் கொண்டு வந்தார். அச்சமயத்தில், அசுரகுருவான சுக்கிராச் சாரியாரும், தனது சில கோரிக்கைகளை நிறைவேற்ற, சிவனை வேண்டி பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். தனது குடும்பத்தை விட பக்தனுக்கே முதலிடம் தந்த சிவன், சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். அம்பிகையும், சுக்ராச்சாரியாரும் தவம் புரிந்து கொண்டிருந்த இடம் இன்றைய மாங்காடு (சென்னை) என சொல்லப்படுகிறது. சுக்ராச்சாரியாருக்கு வரமருளிய சிவன், அம்பிகைக்கும் காட்சி தந்து, உன்னை காஞ்சித்தலத்தில் மணப்பேன் என உறுதியளித்தார். அம்பிகையும் அவர் சொற்படி காஞ்சிபுரம் சென்று தவத்தை தொடர்ந்தாள். பூலோகம் வந்த மகாவிஷ்ணு, மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்த வேளையில், மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு நடந்த கதையைக் கூறினார். புண்ணியத்தலமான மாங்காட்டில் வைகுண்டவாசர் என்ற பெயரில் தங்கும்படியும் கேட்டுக் கொண்டார். பெருமாளும் அத்தலத்தில் எழுந்தருளினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வைகுண்டவாசர் என்று பெயர் பெற்றதால், இத்தலத்தையே வைகுண்டமாக கருதி, சொர்க்கவாசல் அமைக்கப்படவில்லை.