சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்துநாள் விழா நடக்கிறது. ஞாயிறு ராகுகாலமான மாலை 4.30-6 மணி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.
மனோபலம், வியாதி நிவர்த்தி, நியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது.
திங்கள், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.
தல சிறப்பு:
இங்கு பைரவர் மூலவராக அருபாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பைரவர் திருக்கோயில்
தகட்டூர் - 614 714.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4369- 270 197, 270 662
பொது தகவல்:
அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி: கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.
பைரவர் பிறப்பு: அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.
பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபததுடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்.
நாய் வாகனம்: தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள்.இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிடதக்கது. பெயர்க்காரணம்: இவ்வூருக்கு "யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.
தல வரலாறு:
இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில் வாயுமேடு என்ற கிராமம் இருக்கிறது.
இவ்வூரில் இருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ., சென்றால், தகட்டூரை அடையலாம்.
பஸ்சில் செல்பவர்கள் வாயுமேட்டில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். மினிபஸ் வசதியும் உள்ளது.