இங்கு பிரம்மபுரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். கர்ப்ப கிரகத்தில் சுயம்புமூர்த்தியாக விளங்கும் பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால் சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசிக்கலாம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 117 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
இக்கோவிலில் 4 கல்வெட்டுக்கள் உள்ளன. இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியவை.
பிரார்த்தனை
வேண்டும் வரம் கிடைக்க இத்தல அம்பிகையிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சோமாசிமாற நாயனார் அவதரித்த தலம். பெருந்திருக்கோவில் என்பது யானையேறாதவாறு படிக்கட்டுகள் அமைத்துக் குன்றுபோல் செய்யப்பட்ட மாடக்கோவில் என்பதாகும். கோச்செங்கட் சோழ மன்னரால் திருப்பணி செய்யப் பெற்ற மாடக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
படிக்காசு விநாயகர் சன்னதியில் அடுத்தடுத்து மூன்றுசிறிய விநாயக மூர்த்தங்கள் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஜம்புகேஸ்வரர், சன்னதிகள் உள்ளன. அம்பாள் சன்னதி தனியே உள்ளது. நின்றதிருமேனி. சன்னதிக்கு வெளியில் இருபுறமும் ஆடிப்பூர அம்மன் சன்னதியும் பள்ளியறையும் உள்ளன. வலம் முடித்துப் படிகளேறி மேலே சென்றால் சோமாஸ்கந்தர் சன்னதியும் மறுபுறம் விநாயகர், கோச்செங்கட் சோழன், சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர் ஆகிய மூலத்திருமேனிகளும் உள்ளன. துவாரபாலகர்களையும் விநாயகரையும் வணங்கிச் சென்று சிறியவாயில் வழியாக உள்ளிருக்கும் மூலவரைத் தரிசிக்கலாம். மூலவரின் பின்னால் சோமாஸ்கந்தர் காட்சியளிக்கின்றார்.
வலப்பால் நடராசசபை. இக்கோயிலில் அம்பலவாணர் மூர்த்தங்கள் மூன்று உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். உற்சவமூர்த்தங்களுள் 1) பிரம்மாவுக்குக் காட்சிதந்த சுவாமி, நந்தியுடன் நின்றிருக்கும் பெரிய மூர்த்தம் 2) பிரம்மா 3) நால்வர் ஆகியவை தரிசிக்கத்தக்கன.
தல வரலாறு:
பிரமன் வழிபட்டது: திருமால், பிரமன் ஆகிய இருவருமே தாமே பிரமம் என தம்முள் மாறுபட்டபோது இருவரிடையே அழல் உருவாய் ஓங்கி நின்றான் இறைவன். இவ்வனற்பிழம்பின் அடியையோ, முடியையோ காண்பவரே உலகின் முழுமுதல்வர் என்று கூறிய இறைவனது உரையின்படி திருமால் பன்றி உருவம் கொண்டு அடியைக் காண புறப்பட்டு தேடி, தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார். பிரம்மன் அன்னமாய் பறந்துசென்று முடியைக் காணாமலே கண்டதாகப் பொய்யுரை கூறி நின்றார். பெருமன் பிரமனை அன்னமாகும்படி சபித்தார். பிரமன் பிழைபொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான் புன்னாகவனம் என்னும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரமனும் அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உண்டாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடக்கிறது.
அம்பராம்பரர்களை அழித்தது: துர்வாச முனிவருக்கு மதலோலா என்ற தேவகன்னிகையால் தோன்றிய அம்பரன், ஆம்பரன் ஆகிய இருவரும் தாங்கள் பெற்ற தவவலிமையால் உலகிற்கு இடையூறு விளைவித்து வந்தனர். பெருமான் கட்டளைப்படி அம்பிகை காளியை நோக்கினாள். காளி கன்னி உருவோடு வந்தாள். இருவரும் அம்மையை சாதாரண பெண் எனக்கருதி அவரை அடைய சண்டையிட்டனர். மூத்தவன் இறந்தான். இளையவனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக் கொன்ற இடமே அம்பகரத்தூர் ஆகும். கொலைப்பழி தீரக் காளி திருமாகாளத்தில் இறைவனைப் பூஜித்து அருள்பெற்றார்.சம்காரசீலனை அழித்தது: சம்காரசீலன் ஒரு அரக்கன். தேவர்கள் இந்தஅரக்கனுக்கு பயந்து பிரம்மன் கட்டளைப்படி இத்தலத்தில் குடியேறினர். இறைவன் தேவர்களைக் காக்க கால பைரவரை ஏவி அவனைக்கொன்று அமரர்கட்கு அருள்புரிந்தார்.
விமலன் அருள் பெற்றது: விமலன் என்ற அந்தணன் தீர்த்தயாத்திரை செய்துகொண்டே இத்தலத்தில் வந்து தங்கி பல்லாண்டுகள் வழிபட்டான். காசிக்கங்கையை இறைவன் இங்கு வரச்செய்து வேண்டும் வரங்கள் அருளினான்.
மன்மதன் சாபம் நீங்கியது: மன்மதபாணம் பலிக்காமல் போகக்கூடாது என்று கூறிய விசுவாமித்திரரின் சாபம் நீங்க மன்மதன் இத்தலத்தை அடைந்து வழிபட்டு சாபநீக்கம் பெற்றான்.
நந்தராசன் பிரமகத்தி நீங்கியது: நந்தகூபன் என்னும் அரசன் புலித்தோல் உடுத்த முனிவரை புலியெனக்கருதி அம்புவிடுத்த குற்றத்தினால் பிரமகத்தி தொடரப்பட்டு இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டு பிரமகத்தி நீங்கப்பெற்றான். இத்தலத் திருக்கோயிலைத்திருப்பணி செய்தும் விழாக்கள் நடத்தியும் மகிழ்ந்தான்.
கோச்செங்கட்சோழ நாயனார்: திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழ்இருந்து ஜம்புகேஸ்வரரை முற்பிறப்பில் சிலந்தியாய் இருந்து வழிபட்ட பெரும்பேற்றால் கோச்செங்கட்சோழ மன்னராகப் பிறந்து யானை ஏறாத எழுபது மாடக்கோயில்களைக் கட்டியவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அம்மன்னர் செய்த கோயிலே இது. ஜம்புகேஸ்வரர் ஆலயமும் இக்கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு பிரம்மபுரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார்.
இருப்பிடம் : பூந்தோட்டத்திலிருந்து காரைக்கால் செல்லும் பேருந்து சாலையில் இக்கோயில் உள்ளது. அரிசிலாற்றின் வடகரையில் கோயில் உள்ளது.
பேரளத்திலிருந்து தென்கிழக்காக 6கி.மீ., சென்றாலும் இக்கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : நாகப்பட்டினம்
சீ ஹார்ஸ் போன்: +91-4365-247 047, 247 686 பூம்புகார் லாட்ஜ், போன்:+91-4365 242138, 243039 வேளாங்கன்னி எம் ஜி எம் போன்: +91-4365-263 900 சீ கேட் போன்: +91-4365-263 910 கோல்டன் சென்ட் லாட்ஜ்: +91-4365-242432 வி.பி.என்.ஹோட்டல்: +91-4365-240678.