கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற அபலைகள், விதவைகள், "எங்களுக்கும் மட்டும் ஏன் இன்னும் திருமணமாகவில்லை?' என்று புரியாத புதிருடன் காத்திருக்கும் முதிர் கன்னிகள்... இவர்கள் எல்லாம் அடைக்கலம் அடைவது இந்த எல்லை பிடாரி அம்மனிடம் தான்.
வந்து வணங்குவோருக்கு கேட்ட வரம் தரும் சக்தியாக, ஊர் எல்லையை காக்கும் காவல் தெய்வமாக கருணை பொங்கும் கண்களுடன் காட்சியளிக்கிறாள் சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன்.
இந்த அம்மனின் சிறப்பே கருணை பொங்கும் கண்களுடன், பார்த்த உடனேயே தனது சொந்த தாயை பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் முகப் பொலிவு தான். எந்த நேரமும் அம்மனை தரிசிப்பதற்காக பெண்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதற்கு காரணம் எல்லை பிடாரி அம்மன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேண்டிக் கொண்ட உடனே பிரச்னைகளை தீர்த்து வைக்கிறாள்.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் இங்கு ஐந்து நாட்கள் விழா நடக்கிறது. இதில் ரொம்பவும் பிரசித்தி பெற்றது "தீ மிதி' விழா தான். எந்த கோயிலிலும் இல்லாத விசேஷமாக இங்கு மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தீ மிதிக்கின்றனர்.
இந்த கோயிலின் இன்னொரு விசேஷம் அம்மன் மேற்கு நோக்கி காட்சி அளிப்பது. |