துர்வாச முனிவர் ஆராதித்த லக்ஷ்மி நரசிம்மர், வாதிராஜர் ஆராதித்த ஹயக்ரீவர், கைவல்ய தீர்த்தர் ஆராதித்த வேதவியாசர், சோதே மடாதிபதி ஆராதித்த உடுப்பி கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீநிவாசர் விக்ரகங்கள் இன்றும் ஸ்வாமிகளால் ஆராதிக்கப்படுகின்றன. அபூர்வமான தாமோதரசாளக்கிராமம் ஒன்றும்; விஸ்வம்பர சாளக்கிராமம் (21சக்கர ரேகை கொண்டது) ஒன்றும் இம்மடத்தில் ஆராதனை செய்யப்படுகின்றன.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் ராமருக்கு அபிஷேகம் செய்து, துளசி மாலை சாற்றி புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கைவல்யதீர்த்தர் வழியில் வந்தவர் அச்சுத பிரகாஷ் ஆச்சார்யார். அவர் பாகவத சம்பிரதாயத்தைப் பின்பற்றும் அத்வைத முனிவராகத் திகழ்ந்தார். பூர்வாஸ்ரமத்தில் வாசுதேவர் எனப்பட்ட இவருக்கு சிஷ்ய ஸ்வீகாரம் செய்து மத்வாச்சாரியார் என்று பெயரும் சூட்டினார். மத்வாச்சார்யார் சந்நியாசம் பெற்ற இடம் பீமண்ணக்கட்டே மடம். பிற்காலத்தில் அவர் த்வைத சித்தாந்தத்தைப் பரப்பி ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு; ஸ்ரீமன் நாராயணனே பரமாத்மா; அவர் ஒருவரே கடவுள் என்ற சித்தாந்தத்தை பரப்பினார். வேதங்களுக்கு உரை எழுதினார். அவர் சத்ய தீர்த்தரை சீடராக அறிவித்தார். மத்வர் காலத்தில்தான் உடுப்பி கிருஷ்ணர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் வந்த சத்ய தீர்த்தர், அஷ்டமடங்களை நிறுவி பீடாதிபதிகளை நியமித்தார். சத்ய தீர்த்தர், வேதங்களுக்கு உரையினை ஓலைச்சுவடுகளில் முதன்முதலாக எழுதினார். அஷ்டமடங்கள் தவிர, பீமண்ணக்கட்டே பண்டர்கரே மடம், குக்கே சுப்ரமணியாமடம், பாளகரே மடம், வியாசரயா மடம், உத்தராதிமடம், கூடலி மடம், மந்த்ராலய ராகவேந்திர மடங்கள் உபமடங்களாக ஸ்தாபிக்கப்படவை. பீமன் வனவாசத்தின்போது பூஜை செய்த மூலராமர், சீதா தேவி, லட்சுமணரின் விக்ரகங்கள் வழிவழியாக இம்மடத்தில் ஆராதிக்கப்பட்டு வருகின்றன.
தல வரலாறு:
மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் இங்கு அஞ்ஞாதவாசம் இருக்கையில் கால் துர்காபெட்டு என்னும் மலையில் கோட்டை கட்டி வாழ்ந்தனர். அங்கு தண்ணீர் வசதி இல்லாததால் அருகிலுள்ள துங்கா நதியிலிருந்து நதிநீரைக் கொண்டு வருமாறு திரௌபதி பீமனிடம் சொல்கிறார். அவனும் ஒரே ராத்திரியில் துங்கா நதிமீது அணைகட்டி உயரப்படுத்தி ஆற்றுநீரை மலைக்குக் திருப்பி விடுவதாக சபதம் போடுகிறான். அச்சமயம் சற்று தொலைவில் ஒரு நதிக்கரையில் துர்வாசரும் மறுகரையில் அகத்தியரும் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தனர். பீமனின் சபதத்தை அறிந்த துர்வாசர், கிருஷ்ணரைப் பிரார்த்திக்கிறார். இதனிடையில் இரவோடிரவாக பெரும்பாறைகளை தடுப்பணையாகப் போட்டு அஸ்திவாரம் போட்டுவிடுகிறான் பீமன். இதையறிந்த கிருஷ்ணர் உடனடியாக சேவல் ரூபத்தில் கூவிவிட, அணைகட்டும் வேலை நிறுத்தப்பட்டது. பின்னர் பீமனிடம் அணை கட்டுவதை நிறுத்தவே சேவல் வேடத்தில் விடியும் முன்பே தாம் கூவியதாகவும்; மேற்கொண்டு அணை கட்ட வேண்டாம் என்றும் கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். அதனால் அஸ்திவாரத்துடன் அணை காணப்படுகிறது. அது நதியை மூன்றாகப் பிரிக்கிறது. அதை கங்கா, யமுனா, சரஸ்வதி என்று அழைக்கிறார்கள். புண்ணியமான திரிவேணியாகவும் கருதுகிறார்கள். இந்த பீமன் அணைக்கட்டு தான் பின்னர் மருவி பீமண்ணக்கட்டு என்று அழைக்கப்படுகிறது. துர்வாசர் தவம் செய்த இடம் துர்வாசபுரம் என்றும்; அகத்தியர் தவம் இருந்த இடம் அகஸ்திய ஹள்ளி எனும் கிராமங்களாகவும் இன்றும் உள்ளன. இவ்விடத்தில் ஆதிகாலம் தொட்டு பல முனிவர்கள் தவம் செய்துள்ளனர்.
ஜனமேஜய மகாராஜா: ஒரு சமயம் பரீட்சித்து மகாராஜாவின் மகனான ஜனமேஜய மகாராஜா தோல்நோயால் அவதிப்பட்டு நாரதரின் அறிவுரைப்படி தீர்த்த யாத்திரையாக துங்கா நதிக்கு வரும் சமயம் ஷிமோகா அருகில் ஹரிஹர் என்னும் இடத்தில் ஸ்நானம் செய்தார். அங்கு கைவல்ய தீர்த்தர் எனும் மகான் தவம் செய்து வந்தார். அவருக்கு பீமண்ணக் கட்டே கிராமத்தைச் சுற்றி சுமார் 25 சதுர மைல் பரப்புள்ள நிலங்களை தானமாக மகாராஜா அளித்தார். அதற்காக வழங்கப்பட்ட செப்புப் பட்டயத்தை இன்றும் ஷிமோகா நகர அருங்காட்சியகத்தில் காணலாம். மகாராஜாவின் நோய் முற்றிலும் குணமாக, பூதானம் பெற்ற கைவல்ய தீர்த்தர். பீம சேது முனிவிருந்த மடம் எனும் மடத்தை பீமண்ணக் கட்டேயில் ஸ்தாபித்தார். இது நடந்து ஏறக்குறைய 5023 ஆண்டுகளாகிறது. இச்சம்பவம் ஸ்கந்த புராணத்தில். ஸஹ்யாத்திரி காண்டத்தில் காணப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அபூர்வமான தாமோதரசாளக்கிராமம் ஒன்றும்; விஸ்வம்பர சாளக்கிராமம் (21சக்கர ரேகை கொண்டது) ஒன்றும் இம்மடத்தில் ஆராதனை செய்யப்படுகின்றன.
இருப்பிடம் : பெங்களூரிலிருந்து ஷிமோகோ 264 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து 80 கி.மீ. தொலைவில் தீர்த்த ஹள்ளி உள்ளது. அங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் ஆகும்பே உடுப்பி வழியில் ரஞ்சட்கட்டே உள்ளது. அங்கு இறங்கினால் ஒன்றரை கி.மீ. தொலைவில் பீமண்ணக்கட்டேயை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
தீர்த்த ஹள்ளி
அருகிலுள்ள விமான நிலையம் :
பெங்களூரு
தங்கும் வசதி :
ஷிமோகாவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.