|
கல்வி கணபதி: இக்கோயிலில் சிவன் வழிபட்ட வல்லபகணபதி வீற்றிருக்கிறார். முதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே எச்செயலையும் தொடங்கவேண்டும் என்னும் நியதியை ஏற்படுத்திய சிவனே, ஒருமுறை அதைப் பின்பற்றவில்லை. திரிபுரசம்ஹாரத்தின் போது சிவன், விநாயகரை தியானிக்காமல், தேரில் புறப்பட்டார். இதைக் கண்டவிநாயகர், தேரின் அச்சினை முறியச் செய்து தடுத்தார். தன் தவறுக்காக வருந்திய சிவன், இந்த விநாயகரை வழிபட்டார். அவரே வல்லபகணபதியாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். இப்பெருமான் செங்கதிர் நிறமும், சர்ப்ப ஆபரணமும், மகுடம், கேயூரம் ஆகிய அணிகலன்களும், பத்து கைகளுடனும், பழம், கரும்பு, நெற் கதிர், தந்தம் ஏந்தியும் காட்சியளிக்கிறார். வேலையில்லாதவர்களும், வேலை, பதவியை இழந்தவர்களும் நிவாரணம் பெற இவரை வணங்குகின்றனர். பிரதோஷம், பவுர்ணமி, சதுர்த்தி தினங்களில் இந்த வழிபாடு விசேஷம்.
காஞ்சிப்பெரியவர் வருகை: இங்குள்ள முக்தி மண்டபத்திற்கு காஞ்சிப்பெரியவர் பலமுறை வருகை தந்துள்ளார். இங்கிருந்து சீடர்களுக்கு வேதம் கற்பித்திருக்கிறார். சிதிலமடைந்திருந்த இக்கோயில் பெரியவரின் அருளாசியின்படி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சிகாமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள முக்தி மண்டபம் சிறப்பு மிக்கது. பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. |
|